Monday, August 18, 2025

Drawings by my Daughter

 









ஏன்னவளும் மழையும்

மழை துளிதுளியாய்  அவள் நினைவுகள் விழுகின்றன,

மழை துளிதுளியாக என் நெஞ்சில் சிதறுகின்றன.

இலை மேல் மழைத்துளியாக அவள் வார்த்தைகள்

அழகாக, மெதுவாக, ஆனால் ஆழமாக.


Saturday, August 16, 2025

குடுவையில் உள்ள நீர்

ஒரு குடுவையில் நீர் நிறைந்து இருந்தால் அது அதிகமாக குலுங்காது அல்லது தழும்பாது. அதே போல தான் சிறிய சிறிய பிரச்சினைகளும். நாம் அந்தப் பிரச்சனை சிறியதாக இருக்கும்போதே அதைத் தீர்க்க வேண்டும். இல்லையென்றால் குடுவையில் உள்ள நீர் பதியாளவோ அல்லது அதற்கும் குறைவாகவோ இருக்கும் பொது நாம் கையிலெடுத்தால் அதிகமாக குலுங்கும் அல்லது ஆடும்.  அதே போல பிரச்சினை பெரிதாகி விட்டால் அதை சமாளிப்பது கடினம்.

குடுவையில் உள்ள நீர் என்பது ஒரு உருவகம் மட்டுமே. இந்த உருவகம், ஒரு பிரச்சனை உருவாகும்போதே, அது பெரிதாக வளர்ந்து, கட்டுப்பாட்டை மீறும் முன் அதைக் கையாள்வதன் அவசியத்தை உணர்த்துகிறது. மேலும் நாம் இதனை ஒரு திருக்குறள் மூலமாக மேலும் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

திருவள்ளுவர் தமது  429 திருக்குறளில் வருமுன் காத்து, தீமைகளை வராமல் காக்கும் அறிவுடைமையைப் பற்றிப் பேசுகிறார்.

குறள் 429:
வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும்.

விளக்கம்:
வரப்போகும் துன்பத்தை முன்னதாகவே அறிந்து, அதைக் காத்துக் கொள்ளாதவனுடைய வாழ்க்கை, நெருப்பின் எதிரே வைக்கப்பட்ட வைக்கோல் போர் போல அழிந்துவிடும்.

திருக்குறள் மற்றும் உருவகம் - ஒப்பீடு

  • வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை: இது, பிரச்சனையை அது சிறியதாக இருக்கும்போதே கவனிக்காமல், பெரிதாக வளர விடுவதைப் போன்றது. குடுவையில் நிறைந்திருக்கும் நீர் என்பது, பிரச்சனையின் ஆரம்ப நிலையைக் குறிக்கிறது. அந்த நிலையில், பிரச்சனையின் ஆழம் குறைவாக இருப்பதால், நாம் அதைப் பெரிதாகக் எடுத்துக் கொள்ளாமல் விட்டுவிட்டால், காலம் செல்லச் செல்ல, அது வலுவடைகிறது.
  • எரிமுன்னர் வைத்தூறு போலக் கெடும்: இதை பாதியளவு நீர் உள்ள குடுவையுடன் ஒப்பிடலாம். வைக்கோல் போர், சிறிய நெருப்புப் பொறியால் எளிதில் பற்றி எரிந்து, முழுவதுமாக அழிந்துவிடும். அதேபோல, சிறியதாக இருக்கும்போது தீர்க்கப்படாத பிரச்சனை, பெரிதாகி விட்டால், அது வாழ்க்கையையே அழிக்கும் சக்தி கொண்டதாக மாறிவிடும். பொதுவாக, பிரச்சனை விரிவடையும்போது, அதன் தாக்கம் அதிகமாக இருக்கும்.

மேலும் விரிவாகப் புரிந்துகொள்வோம்

  • ஆரம்ப எச்சரிக்கை அறிகுறிகள்: ஒரு பிரச்சனை சிறியதாக இருக்கும்போது, அது நுட்பமான அறிகுறிகளைக் காட்டும். உதாரணமாக, ஒரு சிறு உடல்நலக் கோளாறு, ஒரு சிறிய கருத்து வேறுபாடு, ஒரு வேலையில் ஏற்படும் சிறு பிழை. இவை குடுவையில் நீர் நிறைந்து இருக்கும் போது ஏற்படும் லேசான அசைவுகளைப் போன்றவை. இந்த அறிகுறிகளை நாம் கவனிக்க வேண்டும்.
  • புறக்கணிப்பின் விளைவுகள்: இந்த அறிகுறிகளை நாம் புறக்கணித்தால், பிரச்சனை வளரத் தொடங்கும். உடல்நலக் கோளாறு பெரிய நோயாக மாறலாம், கருத்து வேறுபாடு உறவுகளைச் சிதைக்கலாம், வேலையில் ஏற்பட்ட பிழை பெரிய இழப்பை ஏற்படுத்தலாம். இது, பாதி நிரம்பிய குடுவையில் நீர் அதிகமாகக் குலுங்குவது போன்றது. நிலையற்ற தன்மை அதிகரித்து, கட்டுப்பாட்டை இழக்கும் நிலை ஏற்படும்.
  • முன்னெச்சரிக்கை நடவடிக்கை: திருக்குறள் சொல்வதுபோல, வருமுன் காக்கும் அறிவு நமக்குத் தேவை. பிரச்சனைகளை அவற்றின் ஆரம்ப கட்டத்திலேயே அடையாளம் கண்டு, தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். ஒரு சிறிய கசிவை ஆரம்பத்திலேயே சரிசெய்வது, பெரும் வெள்ளத்தைத் தடுப்பது போன்றது.
  • மன அமைதி மற்றும் கட்டுப்பாடு: சிறிய பிரச்சனைகளைத் தீர்ப்பது, நம் மனதிலும், சூழலிலும் அமைதியையும், கட்டுப்பாட்டையும் நிலைநிறுத்த உதவும். பெரிய பிரச்சனைகளை எதிர்கொள்ளும்போது ஏற்படும் மன அழுத்தம், பதற்றம், குழப்பம் ஆகியவற்றைக் குறைக்கலாம்.

நடைமுறை வாழ்க்கை உதாரணங்கள்

  • கல்வி: ஒரு மாணவன் பாடத்தில் ஒரு சிறிய சந்தேகத்தை ஆரம்பத்திலேயே கேட்டுத் தீர்த்தால், அது பெரிய தேர்வின்போது அவனுக்கு உதவும். அதைத் தீர்க்காமல் விட்டால், அது தேர்வில் பெரும் தோல்விக்கு வழிவகுக்கும்.
  • நிதி மேலாண்மை: ஒரு சிறிய செலவைக் குறைப்பது அல்லது ஒரு சிறு தொகையைச் சேமிப்பது, எதிர்காலத்தில் பெரிய நிதி நெருக்கடியைத் தவிர்க்க உதவும்.
  • உறவு: ஒரு சிறிய மன வருத்தத்தை ஆரம்பத்திலேயே பேசித் தீர்த்தால், உறவுகள் வலுப்படும். அதைச் செய்யாமல் விட்டால், அது உறவில் பெரும் விரிசலை ஏற்படுத்தலாம்.

எனவே, திருக்குறள் நமக்கு உணர்த்துவதுபோல, பிரச்சனைகள் சிறியதாகவும், கட்டுப்பாட்டுக்குள்ளும் இருக்கும்போதே அவற்றை எதிர்கொண்டு தீர்க்க வேண்டும். அவை பெரிதாகவும், கட்டுக்கடங்காததாகவும் மாறுவதற்கு முன் செயல்பட வேண்டும். அதுவே, அறிவும், தொலைநோக்குப் பார்வையும் கொண்ட ஒருவரின் வாழ்க்கை முறையாக இருக்கும்.

 

Friday, March 25, 2022

சமதர்மம், சமத்துவம், சகோதரத்துவம் மற்றும் பெண் விடுதலை - 5

  சமதர்மம், சமத்துவம், சகோதரத்துவம் மற்றும் பெண் விடுதலை - 5


அண்ணல் அம்பேத்கர் சுதந்திர இந்தியாவிற்கு எழுதிய அரசியல் சாசனத்தில் தீண்டாமை மற்றும் சாதி ஒழிய குறிப்பிட்ட வகுப்பாளர்களுக்கு இட ஒதுக்கீடு கொண்டு வந்தார். அவரின் எழுத்துப்படி அவர் சிறிது வருடங்களுக்கே பரிந்துரைத்தார். ஆனால் அவ்வப்பொழுது உள்ள அரசுகளும் அரசியல்வாதிகளும் சமதர்மம் சமத்துவம் காண்பதை விட்டுவிட்டு நேரத்திற்கு ஏற்ப சாதி மதங்களுக்கு சலுகைகள் வழங்கி மக்களை இன்னும் எமாற்றி வருகின்றனர். அம்பேத்கர் சொன்ன குறிப்பிட்ட காலமும் கழிந்து நாம் இன்னும் அவற்றை தூக்கி பிடித்துக் கொண்டு உள்ளோம். அவர்களை நாம் முன்னேற்ற பாதையில் அழைத்து செல்லாமல் அவர்களை இன்னும் இட ஒதுக்கீடுக்கு போராடும் சமுதாயமாகவும், குறைந்த மதிப்பெண்கள் வாங்கும் சமுதாயமாகவும், அவர்களுக்கென்று தனி பள்ளிகளும் கல்லூரிகளும் தொடங்கி அவார்களுக்கு சரியாக பாடம் நடத்தி சொல்லித்தராமல், அவர்களை மற்றவர்களுடன் சரி சமமாக நடத்தாமல், சரி சம வாய்ப்புகள் வழங்காமல், இன்னும் அவர்களை அமர்த்தியே வைத்துள்ளோம். 


பெரியார் அரசியல் போராட்டங்கள் மூலம் சாதிக்க முடியாது என்று நம்பினார். ஆனாலும் பெரியார் அரசியல்வாதியாக பல காலம் இருந்தவர்தான். ஆனால் அம்பேத்கரோ அரசியல் போராட்டங்கள் மூலம் தான் விடுதலை பெற முடியும் என்று நம்பியவர். இன்று நடக்கும் விசயங்களை கவனித்தாலே தெரியும், அரசியல் போராட்டங்கள் மூலம் தான் தாழ்த்தப்பட்டவர்களுக்கு வெற்றி கிடைத்திருக்கிறது. மேலும் ஆன்மிகம், தனி மனித ஒழுக்கம் இரண்டிற்கும் பெரியார் அதிக மதிப்பு அளிக்காமல் போனது ஒரு வருத்தத்திற்குரியது. இங்கு நாம் குறிப்பிட்ட பெரும்பான்மையானவர்கள் ஆன்மீகத்தின் மூலம் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள். தன்னை ஒரு உதாரணபுருஷனாக்கி வாழ்ந்து காண்பித்தார்கள்.  


திராவிடத்தின் தந்தை பெரியார் என்றால் தமிழ் தேசத்தின் தந்தை அயோத்திதாசர் என்று கூறலாம். அம்பேத்கர் தீண்டாமை உருவான காலமாக கி பி 4ம் நூற்றாண்டை குறிபிடுகிறார். ஆனால் அயோத்திதாசரோ கல்வெட்டு ஆதாரங்கள் மற்றும் ஆவணங்களை கொண்டு தீண்டாமை பிற்கால சோழர் காலத்தில் தான் தோன்றியிருக்கக் கூடும் என்று கூறுகிறார். அதன் பின்னர், மொகலாய படையெடுப்பு, பின்னர் விஜய நகர பேரரசு, பாளையக்காரர்கள், காலனிய அரசுகள் போன்றவர்களின் ஆட்சியில் தான் தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றம் வந்தது. அம்பேத்கர் சொல்வது வட இந்தியாவில் சரியாக இருக்கும். இந்திய வரலாறு எழுதப்படும் போதே அது ஒரு வட இந்திய சிந்தனையுடன் தான் எழுதப்பட்டது. அதுவும் ஆங்கிலேய அதிகாரிகள் இந்தியாவை ஆளுவதற்காக எழுதப்பட்ட ஒரு வரலாறு. அதில் வேதங்களும், வேதக் கருத்துக்களும் தூக்கிப் பிடிக்கப்பட்டன. அசோகர் பல போராட்டங்களுக்கு பிறகே மன்னரானார். ஆனால் நாம் அதை வேறு மாதிரி எழுதி, இந்திய விடுதலைக்கு பிறகு, அவரை மகான் ஆக்கி விட்டோம். 


பெரியாருக்கு முன்பே பார்ப்பன எதிர்ப்பு, சுய மரியாதை, சமத்துவம், சகோதரத்துவம், தீண்டாமை ஒழிப்பு பற்றி பேசியவர்.  அம்பேத்கருக்கு முன்னரே, சாதிய கொடுமைகளிருந்து விடுதலை பெற புத்தமே தீர்வு என்று புத்தரை நோக்கி நகர்ந்த தீர்க்கதரிசி. 1881 ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது, தாழ்த்தப்ட்டோர் இந்துக்கள் அல்ல, மற்றாக பூர்வத் தமிழர் என்று பதிய கோரிக்கை வைத்தார். ஆதி தமிழர் மற்றும் ஆதி திராவிடர் அடையாளங்களை முன்வைத்தார். "திராவிட" என்ற அரசியல் சமூக பெயரை முதன் முதலில் உபயோகித்த பெருமை இவரையே சாரும். தீண்டத்தகாத இந்துக்கள் என்று இல்லை. அவர்கள் சாதியற்ற திராவிடர்கள் என்ற வாதத்தை முன் வைத்தார். 1892 ல் சென்னையில் நடந்த மகாஜனசபை மாநாட்டில் கலந்து கொண்டு, ஓடுப்பட்டோருக்கான உரிமைக்கும் ஆலய நுழைவுக்கும் குறள் கொடுத்தார். இந்த மாநாட்டிற்கு பின்னர் இலங்கை சென்று புத்த தீக்ஷை பெற்று பௌத்தத்திற்கு மாறினார். இவர் சாக்கிய பௌத்த சங்கத்தை தோற்றுவித்து புத்த மதம் பரப்பினார்.  சிந்தனைச்சிற்பி சிங்காரவேலரும் இவருடன் இணைந்து சாதியக் கொடுமைகளை எதிர்த்து போராடினார். . இவர் திராவிட மகாஜனசபை தொடங்கி நடத்திய போது, இவரின் மைத்துனர் ஆதி திராவிட மகாஜன சபை தொடங்கி ஆதிக்க சாதிக்களுக்கு எதிராக பலமாக போராடினார். 


திராவிட இயக்கங்கள் வந்த பிறகு அதிகாரம் ஒரு சாராரிடமிருந்து மற்றொரு சாரருக்கு மாறி உள்ளது என்பது உண்மை. ஆனால், சாதி மறைந்தது என்ற சொல்ல முடியாது. சாதி ஒழிய வேண்டும் என்பதை விட பிராமணர்கள், பார்ப்பான் அல்லது பிராமணீயம் ஒழிய வேண்டும் என்ற ஒற்றை சிந்தனைதான் வளர்ந்து வருகிறது என்ற சந்தேகமும் இல்லாமல் இல்லை. முன்னொரு காலத்தில் இருந்ததை விட இன்று மிக அதிகமான சாதிச் சங்கங்கள் வந்து விட்டன. சாதிக்கொரு கட்சியும் வந்து விட்டது. தேர்தல் நேரத்தில் இவர்களின் கூப்பாடுகள் தான் அதிகமாக உள்ளன.


ஆன்மீகத்தை பற்றி மார்க்ஸ் (Karl Marx) அவர்கள் கூறும் போது "அது மக்களுக்கான ஒரு போதை (opium of the people)" என்றார். பகுத்தறிவு என்பது, இந்திய தத்துவ மறபுகளில் பண்டைய காலம் தொட்டே உள்ளது. இப்பொழுது வந்த ஒரு தரிசன மரபு அல்ல. சாருவாகம், உலகாயுதம், சமணம், மீமாம்சம் என்று முன்பே உள்ளது. அப்பொழுது அரசியல் செய்பவர்கள் இந்திய தத்துவ மரபை கொச்சைப்படுத்துபவர்களாகவும் புரதான சிந்தனைகளை கேலி பண்ணி சிரிப்பவர்களாகவும், அதைபற்றி பேசுபவர்களை பழமைவாதிகள் என்று கருதுகின்ற போக்கு வளர்ந்து வருகிறது.  மேலும் இந்திய சிந்தனை பரப்பு ஒரு காலாவதியான மரபு என்று திராவிட சிந்தனையாளர்களால் கருதப்படுகிறது. கிரேக்கத்தில் மட்டும் அல்ல, இந்தியாவிலும் பகுத்தறிவு கேள்வி கேட்கும் மரபு பண்டைய காலங்களிலே இருந்து வந்துள்ளது. 


தத்துவம் என்ற சொல்லுக்கு உண்மை என்று பொருள். தத்துவ ஞானம் என்பது மெய்பொருள் அறிவது. ஒட்டுமொத்தமாக முழுமையான புரிதலுடம் பார்க்கும் மரபை தரிசனம் என்று சொல்லலாம்.   இதை தர்க்கபூர்வமாக கூற முற்பட்டால் தத்துவ தரிசனம் என்று திரு எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் கூறுவார்கள். மேற்கத்திய தத்துவ ஞானம் முழுக்க முழுக்க தர்க்கத்தை ஆதாரமாக கொண்டிருந்தது. ஆனால், கிழக்கத்திய தத்துவ ஞானம் வாழ்வியலை மையமாகக் கொண்டு சுற்றுகிறது. பிரான்ஸ் நாட்டு நாத்தீகர் ஜீன் பெரி லேமன் - Jean-Pierre Lehmann  - 'இந்து மதம் 'பற்றி தெரிவித்துள்ள கீழ்வரும் கருத்தும் கவனிக்கத் தக்கதாகும். “உலகிற்கு ஒரு ஒழுக்க முறை, ஆன்மீகம்,நேர்மை வழிகாட்டி தேவைப்படுகிறது.இந்தியாவில் உள்ள மதம் மற்றும் தத்தவப் பாரம்பரியங்கள் அந்த மூன்றையும் நன்கு 

வழங்கக் கூடியவையாகும்.”( The planet needs a sense of moral order, spirituality and an ethical compass. The Indian religious and philosophical traditions can provide a great deal of all three.) 


என்னைப் பொறுத்தவரை நாம் பகுத்தறிவு பேசிக்கொண்டு கலாச்சார அழிவு தான் செய்து கொண்டிருக்கிறோம். வெள்ளைகாரனும் மற்றவனும் நம்மை ஆள கொண்டு வந்த திராவிடம் என்ற ஒரு மாயையைப் பற்றி பேசி மேலும் அளும் வர்க்கம் ஆள வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்துக் கொண்டிருக்கிறோம். வாழ்ந்து காட்டி பின் வருபவர்களுக்கு வழிகாட்டுவதே கலாச்சாரம். சமூகத்தை நல் வழிபடுத்தும் முறை. நான் சிறு பிள்ளையாக இருந்த போது, என் ஆசிரியர் என்னிடம் கூறியது. நீ நன்றாக இருந்தால் உன் வீடு நன்றாக இருக்கும். உன் வீடு நன்றாக இருந்தால் உன் தெரு நன்றாக இருக்கும். உன் தெரு நன்றாக இருந்தால் உன் ஊர் நன்றாக இருக்கும். உன் ஊர் நன்றாக இருந்தால் உன் நாடு நன்றாக இருக்கும், உன் நாடு நன்றாக இருந்தால் இந்த உலகம் நன்றாக இருக்கும். இந்த உலகம் நன்றாக இருந்தால் அனைவரும் மகிழ்ச்சியாக இருப்பர். எனவே மாற்றம் தொடங்கவேண்டியது, ஒவ்வொருவரிடமும் இருந்தே தவிர, மொத்தமாக அரசியல் கட்சிகள் சொல்வது போல சமூக மற்றம் வர வாய்ப்பில்லை. 


இங்கு பெரியாரும், பெரியோர்களும் தோற்கவில்லை... திராவிடமும் தோற்கவில்லை. சமூக நீதி, சமத்துவம், சமதர்மம், பெண் விடுதலை, எதுவும் தோற்கவில்லை. மற்ற மாநிலங்களை விட தென்னிந்திய மாநிலங்களில் விழிப்புணர்வு அதிகமாகவே உள்ளது. ஆனால் இப்பொழுது இந்த கருத்துக்களை தேவையானவர்கள் அவர்களின் தேவைக்கு ஏற்றார் போல் எடுத்துக் கையாளுகின்றனர். அதனால், சமூகத்தில் ஒரு தவறான சிந்தனைப் போக்கு உருவாகி வருகிறது. இது கண்டிக்கத்தக்கது 


முற்றும்.

சமதர்மம், சமத்துவம், சகோதரத்துவம் மற்றும் பெண் விடுதலை - 4

 சமதர்மம், சமத்துவம், சகோதரத்துவம் மற்றும் பெண் விடுதலை - 4


மனிதன் வேட்டைச் சமுதயாத்திலிருந்து, மேய்ச்சல் சமுதாயமாக மாறி, பின் விவசாயத்திற்கு மாறியது, அதன் பின் வணிகத்தின் எழுச்சியும், நகரத்தின் வளர்ச்சியும் சமூகத்தை நிறைய மாற்றின. முதலில் மனிதனுக்கு தேவை உணவு, உறைவிடம், உடை. தற்கால மனிதனுக்கு இந்த வரிசையில் ஒரு சிறு மாற்றம். உடை நடுவிலோ அல்லது முதலிலோ செல்லும். உணவுக்காக சிறு சிறு குடிகள் இடம் மாறி மாறி சென்றனர். நிரந்தர உணவு கிடைக்கத் தொடங்கிய போது, அவர்களைப் போலவே உணவு தேடி வரும் மற்ற குடிகளை தடுக்கத் தொடங்கினார். இதனடிப்படையிலும், குடிகளுக்குள்ளேயே மணம் முடித்துக் கொண்டனர். ஒவ்வொறு கூட்டம் அல்லது குடிக்கு ஒரு தலைமை, குடிச் சின்னம் வந்தது. செய்யும் தொழிலுக்கு ஏற்ப, உண்ணும் உணவுச் சூழலுக்கு ஏற்ப, வாழக்கை முறைக்கு ஏற்ப குழுக்களும் குடிகளும் உண்டாயின  


ஆனால் காலப்போக்கில், நிலவுடமைச் சமுதாயம் வரும்போது தான் சாதிய அமைப்புகள் உருவாகின்றன. அதன் பின்பு தான் கீழ் மேல், உயர்வு தாழ்வு என்ற அடிப்படை உருவாகிறது. அதன் பின்பு 10 நூற்றாண்டு அளவில் வலங்கை இடங்கை என்று இரு பிரிவு உண்டாகிறது. 


பொதுவாக பண்டைத் தமிழகத்தில், குடி அடுக்கு முறை இவ்வாறு வரும். குடித்தலைமைக்கு அடுத்து வருபவர், உழவுக் குடிகள், அதன் பின்பு ஆயர் அல்லது இடையர் போன்ற மேய்ப்பர்கள், அடுத்தது வணிகர், குயவர், கொல்லர், தச்சர், அதற்கு அடுத்தது குலத்தைக் காக்கும் மறவர்கள், படை வீரர்கள். அதற்கு பின்னர் வலையர், புலையர் போன்ற குடிமக்கள். இது ஒரு அமைப்பு முறை மட்டுமே. இதில் அடிமைத்தனம் இல்லை. 


கி மு 300 ல் கிரேக்கத்தில் இருந்து இந்தியா வந்த மெகஸ்தனிஸ் என்னும் பயணி இந்தியாவில் ஏழு வகையான மக்கள் அடுக்கு இருந்ததாக தனது பயணக் குறிப்பு நூலான இண்டிகா (INDIKA) எனும் நூலில் தெரிவித்து உள்ளார். 


1. தத்துவஞானி அல்லது அறிவார் - இவர்கள் எண்ணிக்கையில் மிகவும் குறைவு - இவர்களுடைய வேலை கல்வி மற்றும் கேள்வி

2. உழவர் - எண்ணிக்கையில் சற்று அதிகம் - தொழில் உழவு. போருக்கு செல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை - எதிரிகள் இவர்களைத் தாக்க மாட்டார்கள். அனைத்து நிலங்களும் அரசனுக்கு சொந்தம். விவசாயம் செய்து விளைந்ததில் நாலில் ஒரு பங்கு அரசுக்கு வரியாக கட்ட வேண்டும். 

3. ஆடு மற்றும் மாடு மேய்ப்பவர்கள் - இவர்கள் ஓரிடத்தில் தங்காது எல்லாம் இடமும் சென்று மேய்ப்பர். செல்லும் இடங்களில் வேட்டையாடி மிருகங்களையும் பறவைகளையும்  பிடிப்பதன் மூலம் அவர்கள் விவசாயிகளைக் காக்கின்றனர். அதற்கு பலனாக அரசன் அவர்களுக்கு உணவு அளிக்கின்றான்

4. ஆசாரியர்கள் மற்றும் வணிகர்கள் - இவர்களில் சிலர் ஆயுதம் செய்பவர்கள், கப்பல் கட்டுபவர்கள், பானை மற்றும் பண்டங்கள் செய்பவர், கலைப்பொருட்கள் செய்பவர்கள், பல்வேறு பொருட்களை உருவாக்குபவர்கள், இவற்றை  மற்றும் வேளாண் பொருட்களை வணிகம் செய்பவர்கள் அடங்குவர்.

5. போர்வீரர்கள் - எப்பொழுதும் நாட்டை காக்கவும் நாட்டு மக்களைக் காக்கவும் போர் முனைக்கு செல்லவும் தயாராக இருப்பவர்கள்.

6. ஒற்றர்கள் - நாட்டிற்கு உள்ளேயும், வெளியேயும் நடக்கும் எல்லா விசயங்களையும், ரகசியமாக, கவனமாக ஒற்றறிந்து அரசனுக்கு தெரிவிப்பது. 

7. அரசு அதிகாரிகள் - பொதுக் கடமைகள் மற்றும் அரசை நிர்வகிக்கும் பொறுப்பில் உள்ளவர்கள்


நமது சமுதாயம் முன்னேற்றத்தில் பின்னடைவைச் சந்திக்கும் ஒவ்வொரு தடைவையும், மகான்களும், முனிவர்களும், சித்தர்களும், புலவர்களும், கவிஞர்களும் அவதரித்து நம்மை வழி நடத்துகின்றனர். அதில் கபீர் தாசரும் ஒருவர். 


கபீரின் சில வாசகங்கள்.


"உன்னை உள்ளேயே தேடிப்பார், இராமபிரானையும் கிருஷ்ணரையும் நீ தரிசிக்கலாம். வெளியே சடங்குகளில் காலத்தை வீணாக்காதே. உன்னை மாற்றிக் கொள். கடவுளைக் காணலாம்"


"ஆணவத்தில் சிக்கிக் கொண்டபொழுது இறைவனை காண இயலவில்லை. அதே சமயம் இறைவன் வந்த போது நான் கரைந்து போனேன் அறியாமை என்ற இருள் அகன்று விட்டது. வெளிச்சத்தைக் கண்டேன்"


கபீர் குரு ராமானந்தரின் சீடர். அவர் சாதிய தடைகளையும் ஏற்றத் தாழ்வுகளையும் உடைத்தெறிந்து மனிதகுலம் ஒன்றே என்று பறைசாற்றினார். கபீரின் முக்கியமான போதனைகள் உலக சகோதரத்துவம், எல்லா உயிர்களிடத்திலும் அன்பு என்பதே.  


கபீரின் ஒரு வழித்தோன்றலாக நாம் அம்பேத்காரை காணலாம். ஆனால் அம்பேத்கர் பெரியாரை போல் சாதி மத எதிர்ப்பு என்ற ஒன்றை மட்டும் கொள்ளாமல்  அதற்கு தீர்வுகளையும் சொன்னார். அம்பேத்கர் ஒரு விதத்தில் காந்தியின் தலித் கொள்கையையும் காந்தியத்தையும் எதிர்த்தார். அதேபோல் மார்க்சியத்தையும் எதிர்த்தார். அவரின் ஒரு கூற்று. நாங்கள் ரஷிய புரட்சியை வரவேற்கிறோம். ஏனென்றால் அது சமத்துவத்தை அடிபடையாகக் கொண்டது. ஆனால், சுதந்திரம் மற்றும் சகோதரத்துவம் இல்லாமல் சமத்துவம் இருக்க முடியாது என்றார். இவை மூன்றையுமே தரவல்லது கம்யுனிசம் அல்ல. புத்தம் மட்டுமே. வயது வந்தோர் அனைவருக்கும் வாக்குரிமை என்பதை முதலில் பிரகடனம் செய்தவர் டாக்டர் அம்பேத்கர். ஆனால் அது முதல் வட்ட மேசை மாநாட்டில் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. அதன் பின்னர் அவர் தாழ்த்தப்பட்டோருக்கு தனித் தொகுதி கேட்டார். 


டாக்டர் அம்பேத்கர் இந்தியாவில் நிலவும் சுரண்டல் மட்டும் வறுமைக்கு தீர்வு சோசலிசம் மட்டுமே என்று உறுதியாக நம்பினார். ஆனால் அவர் மார்க்சியம் சொல்லும் பொருள் முதல் வாத கொள்கையை ஏற்க தயாராக இல்லை. பொருள் முதல் வாதம் மட்டுமே அடித்தளம் அல்ல. அதற்கு பொருள் மட்டும் அல்லாது சமூக, மத, அரசியல் ஜனநாயக அடித்தளமும் தேவை என்று கூறினார். 


மேலும் அம்பேத்கர், இந்து மதமும் ஒற்றுமையும் ஒன்றோடொன்று சேரவே முடியாது. அடிப்படையில் இந்து மதம் பிரிவை (சாதியை) கொள்கையாகக் கொண்டது. இந்துக்கள் ஒற்றுமையாக வாழ விரும்பினால் இந்துமதத்தைத் தூக்கியெறிய வேண்டும். இந்துமதம் உங்களுக்கு உரியதில்லை. சாதி, தீண்டாமை ஒழிப்பு அதில் இல்லை. அதிலிருந்து வெளியேறுங்கள். புத்த மார்க்கம் வைதீகத்திற்கு எதிர்ப்பானது. புத்தர் தர்க்கரீதியில் அறிவைப் பயன்படுத்தி ஆராய்ந்து சொன்னவர். புத்தம் மனிதர்களைப் பற்றிக் கவலைப்படுவது. ஒழுக்கத்தைப் போதித்தவர். அது மனிதர் பின்பற்றிவந்த மார்க்கம். சம அந்தஸ்து கொடுத்து சமமாய் நடத்தும் மார்க்கத்தில் சேருங்கள்.


அம்பேத்கர், பெரியார் மற்றும் காந்தி வாழ்ந்த நாட்களில், இதே கொள்கைக்காக போராடியவர், ஸ்ரீ நாராயணகுரு. தமிழகச் சூழலைக் காட்டிலும் சாதி மற்றும் தீண்டாமை பாகுபாடு கேரளத்தில் மிக அதிகம். தெருவிற்குள் செல்ல கூடாது. ஒரு சில சாதியினர் பத்தடி தள்ளி நின்று தான் பேச வேண்டும், சிலரோ அதற்கு மேலும். கடுமையான சாதிக் கட்டுபாடுகள். மற்றும் கீழ் சாதிப் பெண்கள் மார் மூட தடை. முலை வரி. என்று பல. சுவாமி விவேகநாதர் கூட கேரளத்தை ஒரு பைத்தியக்கார விடுதி என்றே அழைத்தார். 


கோயிலில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு அனுமதியில்லாத காரணத்தினால் அவர், அவர் வாழ்ந்த ஊராகிய அருவிபுரம் கிராமத்தில் ஒரு சிறிய கோயில் கட்டி அதில் சிவலிங்க பிரதிஷ்டை செய்து, அனைவருக்கும் அனுமதி அளித்தார். எப்படி ஒரு தாழ்த்தப்பட்டவர் சிவலிங்க பிரதிஷ்டை செய்யலாம் என்ற கேள்வி எழுந்த போது, இது நீங்கள் வணங்கும் சிவலிங்கம் பிரதிஷ்டை இல்லை என்று கூறினார். அங்கே ஒரு அறிவிப்பும் எழுதி வைத்தார். "சாதிபேதம் மதத்துவேஷம் ஏதுமின்றி அனைவரும் சோதரராய்வாழ்கின்ற வழிகாட்டி இடமே இது". கேரளா பூமியில் சுவாமி நாராயண குரு ஒரு வித்தியாசமான நிலைப்பாட்டை எடுத்தார். இந்திய அளவில் அது ஒரு சிறந்த நிலைப்பாடு. எல்லாவற்றிக்கும் எதிர் நிலைப்பாடு எடுக்காமல் அனைத்து கருத்துக்களையும் உள்வாங்குவது, அனைவரையும் நேசிப்பது, உயர்சாதியினரின் பண்பாடு கலாச்சாரம், கல்வி போன்றவற்றை ஒடுக்கப்ட்டவர் சுவீகரிப்பது, எதிர்ப்புக் கொள்கைகளை தவிர்த்து ஆக்கபூர்வமாகச் சிந்திப்பது என்று பயணித்தார். அவருடைய கொள்கையில் அவர் வெற்றியும் பெற்றார். கேரளத்தின் நிலை, தற்போதைய தமிழகத்தை விட நின்றாக உள்ளது. எழுத்தாளர் திரு . ஜெயமோகன், நாராயண குருவைப் பற்றிய  தன்னுடைய கட்டுரை ஒன்றில் கீழ்வருமாறு கூறியுள்ளது கவனிக்கத்தக்கது. அவருடைய வரிகளிலே "குலதெய்வங்களை இல்லாமல் செய்ததில் நாராயணகுருவிற்கு இன்னொரு நோக்கமும் இருந்திருக்கலாம். குலதெய்வங்கள் என்பவை ஒருவகையில் குலச்சின்னங்கள். அவை பழைமையை பிரதிநிதித்துவம் செய்பவை. ஈழவர்களின் பிற்பட்ட வாழ்க்கை முறையும் உலகநோக்கும் அவற்றிலும் ஊடுருவி இருந்தன.................  சிறுதெய்வங்களை அகற்றி பெருந்தெய்வங்களை பதிட்டை செய்தது வழியாக நாராயணகுரு அடிப்படைக் குறியீடுகளை மாற்றியமைக்கிறார்" 


இதே நூற்றாண்டில் பிறந்த அய்யா வைகுண்டரும் பெரியாருக்கு முன்பே சாதி ஒழிப்புக்கு மிகச் சிறந்த தொண்டாற்றியுள்ளார்.  வைகுண்டர் பிறந்த போதே தீண்டாமை அவரின் வாழ்வில் தொடங்கி விட்டது. அவர் பிறக்கும் பொது அவருக்கு இட்ட பெயர் முடிசூடும் பெருமாள். இது உயர் சாதியினர் வைக்கும் பெயர் என்று அரசனிடம் புகார் கொடுத்து பெயர் மாற்ற ஆணை பெற்றனர். அதன்பலனாக முத்துக்குட்டி என்ற பெயர் வைக்கப்பட்டது. 1833 ல் பொது வாழ்க்கையில் தன்னை இணைத்துக் கொண்டார். அப்பொழுது அந்த நாட்டை ஆண்ட சுவாதித் திருநாள் மகாராஜாவின் ஆட்சியில் பயங்கரமான சாதிக் கட்டுபாடுகள் இருந்தன. இந்த சமயத்தில் தான் சுவாமி அவர்கள் சமத்துவ சங்கம் என்ற ஒன்றை தோற்றுவித்தார். முட்டம் என்ற பகுதியில் சமுதாயக் காலனி அமைத்தார். உயர் சாதியினை எதிர்த்ததோடு அந்த பகுதி மன்னனையும் எதிர்த்தார். ஒரு புதிய சமய நெறியை உருவாக்கி சமத்துவ சமுதாயத்தை வளர்க்க பாடுபாட்டார். நூற்றாண்டுகளுக்கு முன்னரே கருவறைக்குள் சென்று வழிபடும் நிலையை ஏற்படுத்தினார். பிராமணர்கள் இல்லாமல் அவர்களது சடங்குகளை அவர்களே நடத்திக் கொள்ள அறிவுறுத்தினார்  


தொடரும்

சமதர்மம், சமத்துவம், சகோதரத்துவம் மற்றும் பெண் விடுதலை - 3

 சமதர்மம், சமத்துவம், சகோதரத்துவம் மற்றும் பெண் விடுதலை - 3


இதெற்கெல்லாம் மேலே ஒரு படி சென்று நமது பாரதியார், குழைந்தைகளுக்கு சொல்லும் கவிதையில்


"சாதிகள் இல்லையடி பாப்பா குலத்

தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்

நீதி, உயர்ந்த மதி, கல்வி  - அன்பு

நிறைய உடையவர்கள் மேலோர் " என்றார்


பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று வள்ளுவன் சொன்னது போல பாரதியும்,


"காக்கை குருவி எங்கள் சாதி

காடும் மழையும் எங்கள் கூட்டம்" என்று எல்லா உயிருள்ள மற்றும் உயிரற்றவைகளையும் ஒரே சாதிக்குள் அடக்குகிறார்.


மேலும் பெண் விடுதலை பற்றியும் எழுதி உள்ளார்.


"பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் 

பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்

எட்டு மறைவினில் ஆணுக்கிங்கே பெண்

இளைப்பில்லை கான் என்று கும்மியடி"


தமிழகத்தில் தீண்டாமை மற்றும் சாதி ஒழிப்பு முற்காலம் தொட்டு இக்காலம் வரை நடந்து கொண்டே தான் இருக்கின்றன. இதைபோன்ற ஒரு தொடர் இயக்கம் வடநாட்டில் இல்லை. தென்னிந்தியாவில் எல்லா நூற்றாண்டுகளிலும் இதற்கான குரல்கள் ஒலித்துக் கொண்டேதான் இருந்தன. ஸ்ரீ ராமானுஜர் 10ம் நூற்றாண்டில் செய்த புரட்சி ஒரு மிகப் பெரிய புரட்சியாகும். அவரால் இந்த புரட்சியை சத்தமே இல்லாமல் மிக அமைதியாக செய்ய முடிந்ததற்கு காரணம், அவர் அரசியல் கலக்காமல் தனக்கென்று எந்த உள்நோக்கமும் இல்லாமல் ஆன்மீக வழியில் செய்ததே. அவர் காலத்தில் தாழ்த்தப்பட்டோர் "தெரு குலத்தோர்" என்று அழைக்கப்பட்டனர். இதனை "திருக்குலத்தோர்" என்று மாற்றிய பெருமை அவரையே சாரும். மேலும், தன் குருநாதர் தனக்கு உபதேசித்த மந்திரமான, "ஓம் நமோ நாராயணாய" என்ற மந்திரத்தை கோயில் கோபுரம் மேல் ஏறி நின்று ஊர் மக்கள் அனைவரும் கேட்க உபதேசித்தார். குரு தன்னிடம் எச்சரித்ததையும் பொருட்படுத்தாமல், தனக்கு நரகமே கிடைத்தாலும், இதை கேட்கும் அனைவரும் சொர்க்கம் செல்வர் என்று மகிழ்ந்து கூறினார். 


இதையே தான் வள்ளலாரும் 19ம் நூற்றாண்டில் ஆன்மிக வழியில் செய்து சாதித்துக் காட்டினார். 1872 ல் சத்தியஞான சபையை அமைத்தார். அந்தக் காலத்தில் தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் சில பிற்படுத்தப்பட்ட மக்கள் கோயிலுக்குள் நுழைய தடை இருந்தது. அத்தகைய தடைகளைத் தகர்த்து எல்லோரையும் அவருடைய சத்தியஞான சபையில் வழிபட வைத்தா பெருமை அவரையே சாரும்.  மூட பழக்கதிற்கு எதிராக,

"கலையுரைத்த கற்பனையே நிலையெனக் கொண்டாடும்

கண்மூடி வழக்கம் எலாம் மண்மூடிப் போக" என்று கண்மூடித்தனமான மூட நம்பிக்கைகளை கருணையுடன் கண்டித்தார். 


"ஒத்தாரும் உயர்ந்தாரும் தாழ்ந்தாரும் எவரும்

ஒருமையுளர் ஆகி உலகியல் நடத்த வேண்டும்" என்று சமத்துவ சமதர்ம சூழ்நிலையுண்டாக ஒரு ஆன்மீக வாதியாக வழிவகுத்தார் என்பது ஒரு பெருமை


ஆண் பெண் சமத்துவத்தைப் பற்றி அன்றே பாடிச் சென்றுள்ளார் என்பது ஐநூறு சிறப்பு

"ஆணினுள் பெண்ணும், பெண்ணினுள் ஆணும் 

அண்ணுறவகுத்த அருட்பெரும் ஜோதி"


மேலும் அவர் "சாதியையும் மதமும் சமயமும் பொய்யென ஆதியில் உணர்த்திய அருட்பெரும்ஜோதி" என்று தன்னுடைய அருட்பெரும்ஜோதி அகவலில், சாதி, மாதம், சமயம் எல்லாம் பொய்யென்று உரைக்கிறார். 


பொதுவாக தமிழர்களுக்கு நிறுவனமயமாக்கப்பட்ட சமயங்கள் மற்றும் சடங்குகள் ஒன்றும் இருக்கவில்லை. ஐவகை நிலங்களை அடிப்படையாக கொண்ட சிறுதெய்வ வழிபடும், இயற்கை வழிபாடுமே இருந்தன. பொதுவாக பழங்குடி இனங்கள் அனைத்திலுமே இயற்கை வழிபாடு தான் பிரதானமானது. தொல்காப்பியரின் கூற்றுப்படி


மாயோன் மேய காடுறை உலகமும்

சேயோன் மேய மைவரை உலகமும்

வேந்தன் மேய தீம்புனல் உலகமும்

வருணன் மேய பெருமணல் உலகமும்

முல்லை குறிஞ்சி மருதம் நெய்தலெனச்

சொல்லிய முறையால் சொல்லவும் படுமோ


மாயோன் - திருமால் - முல்லை 

சேயோன் - முருகன் - குறிஞ்சி

வேந்தன் - இந்திரன் - மருதம்

வருணன் - வருணன் - நெய்தல்


குறிஞ்சியும் முல்லையும் தம் நிலைமை திரிந்து போகுமானால் பாலை ஆகும். இதன் தெய்வம் கொற்கை. பழங்குடி இனங்களிலிருந்து அரசர்களும் வேந்தர்களும் உருவான காலங்களில் குடிகள் சாதிகளாக மாற்றப்பட்டன. முதலில் செய்யும் தொழில் முறையிலும் பின்னர் பிறப்பின் அடிப்படையிலும். குடி என்பது வேறு, சாதி என்பது வேறு. குடி என்பது பிறப்பின் அடிப்படையில் மட்டுமே... சாதி என்பது, பிறப்பின் அடிப்படையிலும், முக்கியமாக தொழில் மற்றும் அகமண முறையிலும் உருவாக்கப்பட்டது. சங்க காலத்தில் சாதி என்னும் சொல் வழக்கில் இருந்தாலும், இந்த காலத்தில் நாம் குறிப்பது போல் இல்லை. அம்பேத்கர் சாதிகளை ஆராய்ந்து அகமணமே சாதிக்குரிய தனித்தன்மை என்று கூறியுள்ளார். 


தமிழகத்தில் சங்க காலத்தில், மக்கள் செய்து வந்த தொழிலுக்கு ஏற்ப பல குலங்கள் தோன்றி இருந்தன. அவற்றுள் சில அளவர், இயவர், இடையர், எயினர், கடம்பர், பரதவர், பறையர், பாணர், வண்ணார், வணிகர், புலையர், தேர்பாகர், துடியர், குறவர், குறும்பர், கூத்தர், கோசர், குயவர், உமணர், உழவர், கம்மியர், களமர், மழவர், கொல்லர், தச்சர், வேடுவர். இவர்கள் இவர்களது குலத் தொழில் செய்து பிழைத்தனர், மேலும் ஒருவருக்கொருவர் மணமும் (புறமண முறை) செய்து கொண்டனர். இங்கு தொழில் மாறலாம், ஆனால் தீண்டாமை பாகுபாடு இல்லை. கீழ்-மேல், உயர்வு-தாழ்வு என்ற நிலை இல்லை.  


குறுந்தொகைப் பாடல் ஒன்றில்


யாயும் ஞாயும் யாரா கியரோ

எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்

யானும் நீயும் எவ்வழி யறிதும்,

செம்புலப் பெயனீர் போல 

அன்புடை நெஞ்சம் தாங்கலந் தனவே


இப்பாடல் சங்ககாலத்தில் புறமண உறவுமுறை இருந்ததைப் தெளிவாக சொல்கிறது. இச்சமூகத்தில் சாதி என்ற ஒரு அமைப்பு இருப்பதற்கான வாய்ப்பு இல்லை என்றே கூறலாம். 


தொடரும்

சமதர்மம், சமத்துவம், சகோதரத்துவம் மற்றும் பெண் விடுதலை - 2

 சமதர்மம், சமத்துவம், சகோதரத்துவம் மற்றும் பெண் விடுதலை - 2

சாதிப் பாகுபாடை சங்க காலப் புலவர்கள் பலர் கடிந்து பாடிச் சென்றுள்ளனர். ஆனால், நாம் அதை மறந்து விட்டு பெரியாரை வைத்து அரசியல் செய்கிறோம் என்றே எனக்கு தோன்றுகிறது. 


திருவள்ளுவரோ 


"பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா 

செய்தொழில் வேற்றுமை யான்" என்று கூறி பிறக்கும் போது உயிர்கள் எல்லாம் ஒன்றே என்று சொல்லியுள்ளார். மேலும் மற்றொரு குறளில் 


"பெருமைக்கு மேனைச் சிறுமைக்குந் தத்தங்

கருமமே கட்டளைக் கல்" என்று சொல்லியுள்ளார். இதையே நாலடியார் தனது 195 வது பாடலில்


நல்ல குலமென்றும் தீய குலமென்றும்

சொல்லளவு அல்லால் பொருளில்லை; - தொல் சிறப்பின்

ஒண்பொருள் ஒன்றோ தவம்கல்வி ஆள்வினை

என்றிவற்றான் ஆகும் குலம்.


நல்ல குலம்' என்றும் 'தீய குலம்' என்றும் கூறுவதெல்லாம் வெறும் சொல்லளவே ஆகும். அப்படிக் கூறுவதில் ஒரு பொருளும் இல்லை. பழமையான சிறப்புடைய மிக்க பொருளும், தவமும், கல்வியும், முயற்சியும் என்னும் இந்த நான்கினால் நல்ல குலம் அமைவதாகும். பிறப்பினால் கீழ் சாதி மேல் சாதி என்று இல்லை. செய்யும் செயலினாலும் அறிவினாலுமே உருவாகிறது என்று சொல்லி சென்றுள்ளார்.


சிவவாக்கியர் என்ற சித்தர் தனது பாடலில் 


நட்ட கல்லை சுற்றி வந்து நாலு புட்பம் சாத்தியே 

சுற்றி வந்து மொணமொணன்று சொல்லும் மந்திரம் ஏதடா

நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்

சுட்ட சட்டி சட்டுவம் கறிச் சுவை அறியுமோ


இதில் சிவவாக்கியர் உருவ வழிபாட்டை எதிர்க்கிறார். நட்ட கல் பேசப்போவது இல்லை. அதை சுற்றி வந்து புட்பம் இட்டு மந்திரங்கள் சொல்லுவதால் ஒன்றும் பயனில்லை. ஏனென்றால் நாதன் நம் உள் இருக்கிறார். சமைத்த சட்டிக்கும் கரண்டிக்கும் சுவை தெரியாது. அதுபோல் கல்லை வணங்குவதால் பயன் ஒன்றும் இல்லை. ஆனால் இதையே சிலர் வேறு மாதிரியும் பொருள் கொள்ள சொல்கின்றனர். பேசுமோ என்பதை பேசும் ஓம் என்றும் அறியுமோ என்பதை அறியும் ஓம் என்றும் மாற்றினால் இந்த பாடல் வேறு பொருள் தரும். 


மேலும் அவர் ஒரே இனமாக கொள்ள வேண்டிய மனித இனத்தை, சாதிகள் மூலம் வேறுபடுத்தி பார்ப்பதை கூறும் போது


சாதி ஆவது ஏதடா சலந்திரண்ட நீரெல்லாம்

பூத வாசல் ஒன்றலோ பூதம் ஐந்தும் ஒன்றலோ

காதில் வாளி காரை கம்பி பாடகம் பொன் ஒன்றலோ

சாதி பேதம் ஓதுகின்ற தன்மை என்ன தன்மையோ


என்று கூறுகிறார். சாதி ஆவது என்றாள் என்ன? இவவுலகம் முழுமையும் நீரால் நிரம்பியுள்ளது. அதுபோலவே உயிரும் நீராகத்தான் உள்ளது.  பஞ்ச பூதமும் ஒன்றுதான். காதில் கைகளில் அணியும் நகைகள் எல்லாம் தங்கமே.... அப்படியிருக்க ஒரே இனமான மனித இனத்தை சாதி பேசி பிரிப்பது தன்மையானது அல்ல.


மற்றும் தீண்டாமை பற்றியும் சிவவாக்கியர் கூறியுள்ளார். 


பறைச்சியாவது ஏதடா, பணத்தியாவது ஏதடா

இறைச்சி தோல் எலும்பிலும் இலக்கமிட்டு இருக்குதோ

பறைச்சி போகம் வேறதோ மனத்தி போகம் வேறதோ

பறைச்சியும் பணத்தியும் பகுத்து பாரும் உம்முளே


என்று பயங்கரமாக சீறுகிறார். 


திருமூலர் "ஒன்றே குளம் ஒருவனே தேவன்" என்று எழுதினார். பின்னாளில் இது ஒரு திராவிட கொள்கையாக மாறியது. "என்னை நன்றாக இறைவன் படைத்தனன் தன்னை நன்றாக தமிழ் செய்யுமாறு" என்று தமிழையும் தூக்கி நிறுத்தி உள்ளார். ஆனால் இங்கும் பெரியார் வேறுபடுகிறார். இந்தி வேண்டாம் என்று மும்மொழிக் கொள்கையை எதிர்த்ததில் பெரியாருக்கு முதலில் சம்மதம் இல்லை. முதலில் மறுத்து விட்டு பின் எதிர்த்தார். அதற்கு அவரின் பதில், தமிழ் மட்டும் படிப்பதால், தமிழர்களுக்கு அறிவியல் சம்பந்தமாக பேசவோ, பொருளாதாரத்தில் முன்னேற்றம் காணவோ முடியாது என்பது. ஒரு வகையில் அவரின் கூற்று ஒத்துக் கொள்ளப்படவேண்டியதே.


கீழ் வரும் பாடலில், பார்ப்பன எதிர்ப்பையும் அன்றே பாடியுள்ளார், திருமூலர்.


பேர் கொண்ட பார்ப்பான் பிரான் தன்னை அர்ச்சித்தால்

போர் கொண்ட நாட்டுக்கு பொல்லா வியாதியாம்

பார் கொண்ட நாட்டுக்கு பஞ்சமும் ஆம் என்றே

சீர் கொண்ட நந்தி தெரிந்து உரைத்தானே


மேலும் ஒரு பாடலில் நடமாடும் மனித தெய்வத்திற்கு செய்யும் தொண்டு படமாடும் தெய்வத்திற்கு செய்தது போல் ஆகும் என்று அழகாக விலகுகிறார்.


 படமாடக் கோயில் பகவற்கு ஓன்று ஈயின்

நடமாடக் கோயில் நம்பர்க்கு ஆங்கு ஆகா 

நடமாடக் கோயில் நம்பர்க்கு ஓன்று ஈயின்

படமாக் கோயில் பகவர்க்கு அது ஆமே


இதையே தான் பெரியாரைப் பின்பற்றுபவர்கள் ஏன் கோயிலுக்கு சென்று 15 லிட்டர், 20 லிட்டர் பால் ஊத்துறீங்க, அதுக்கு பசிக்கிற ஆளுங்களுக்கு கொடுக்கலாமே என்று கூறுகின்றனர். ஆனால் இவற்றை திருமூலர் என்றோ சொல்லி விட்டார்.


மேலும், ஒவ்வையார் தனது பாடலில் 


"சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால் 

நீதி வழுவா நெறிமுறையின் மேதனியில்

இட்டார் பெரியோர், இடாதார் இழிகுலத்தோர்

பட்டாங்கில் உள்ளபடி" என்று கூறிச் சென்றுள்ளார்.


தொடரும்

சமதர்மம், சமத்துவம், சகோதரத்துவம் மற்றும் பெண் விடுதலை - 1

 சமதர்மம், சமத்துவம், சகோதரத்துவம் மற்றும் பெண் விடுதலை - 1


பெண் விடுதலை வேண்டும். சாதி வெறி தணிய வேண்டும். மத அரசியல் வேண்டாம். ஆனால் இவை எல்லாம் இப்பொழுது அதிகமாகத்தான் உள்ளது. இலக்கியம் என்ற சொல்லே நன்றாக உள்ளது. ஆனால் இப்பொழுது நாம் இந்து இலக்கியம், தலித் இலக்கியம், கிறித்துவ எழுத்துகள்,என்று ஏன் பிரிக்க வேண்டும். இந்த வருட புத்தக திருவிழாவில் கூட சில கருத்துக்களைக் கேட்க முடிந்தது. தலித் இலக்கிய வெளியீடுகள், திராவிட இலக்கிய வெளியீடுகள் என்று..... நாம் வேண்டாம் என்று சொல்லும் விடயங்களைத் தான் இலக்கியம் என்ற பெயரில் நிறைய வருகின்றனவா. இதற்க்கு மேல் ஒருவர் சென்று இரவிக்குமார் படமெடுத்தால் திரைப்படம் அதுவே ரஞ்சித் எடுத்தால் தலித் திரைப்படம். ஜெயமோகன் எழுதினால் இலக்கியம் அதுவே பெருமாள் முருகன் எழுதினால் தலித் இலக்கியம் (ஒரு புலனக் குழுவில் படித்தது). எழுத்தாளர் இமயம் அவர்கள், ஒரு நிகழ்ச்சியில் பேசும் பொது, தலித்துகளின் வாழ்க்கையை ஓறு தலித் எழுதினால் அது தலித் இலக்கியம் என்றும், அதையே வேறு ஒருவர் எழுதினால் இலக்கியம் என்று அழைக்கும் போக்கு தவறானது என்றார். தலித் எழுத்து என்றோ தலித் எழுத்தாளர் என்றோ பிரிப்பது சரியல்ல என்பது அவருடைய வாதம்.


மேலும் திருவள்ளுவர் கருத்து முக்கியமா? இல்லை அவருடைய மதம் மற்றும் ஜாதி முக்கியமா... அவருடைய கருத்துக்கள் யுகங்கள் தோறும் மாறி மாறி பல புதிய சிந்தனைகளை மக்களுக்கு கொடுத்துக் கொண்டிருகின்றன. நாம் அவற்றை எல்லாம் விட்டுவிட்டு அவருடைய மதத்தைப் பற்றி சிந்திப்பது எவ்வளவு ஒரு சிறு பிள்ளைத்தனம். அனைத்திலும் அரசியல் தேவையா? ஆனால் இப்பொழுது அனைத்திலும் அரசியலை காண முடிகிறது. மன்னர் ஆட்சியில் அனைத்திலும் அரசியல் தலையீடு இருப்பதை காண முடியும். ஆனால் இப்பொழுது மக்களாட்சி. அரசியல் தலையீடு எல்லாவற்றிலும் தேவையில்லை. அரசியலைப் பற்றி லெனின் சொன்னது "அதிகாரத்தைக் கைபற்றுவது தான் முக்கியமான விடயம்" 


இன்னும் சில பேர் ஒரு படி மேலே சென்று நான் ஒரு திராவிடன், பெரியாரைப் பின் பற்றுகிறேன் என்று கருத்துக்களை கூற முற்படுகின்றனர். ஆனால், பெரியாரின் சிந்தனைகளை அவருக்கு முன்பேயும் அவர் காலத்திலும் பலபேர் சொல்லி சென்று இருக்கின்றனர். அவர்களில் சிலர், புத்தர், கபீர், இராமானுஜர், திருவள்ளுவர், சிவவாக்கியர், அயோத்திதாசர், அம்பேத்கர், விவேகனந்தர், அய்யாவழி நாராயணர், காந்தி, வள்ளலார் (இராமலிங்க அடிகளார்), போன்றவார்களை கூறலாம். பெரியாரும் இந்த வரிசையில் ஒருவர் தான்.


புத்தர் ஒரு வைதீக எதிர்பாளர். இவரின் இயற்பெயர் சித்தார்த்த கௌதமர். சாக்கிய முனி என்றும் அழைக்கப்பட்டார், வைதீகத்தில் உள்ள சாதி மதம், சடங்குகளைக் கடுமையாக எதிர்த்தவர். மேலும் ஆசையே துன்பத்திற்கு காரணம். தான் தனது என்ற நிலையில் இருந்து விலகினால் ஞானம் பெறலாம் இதுவே விடுதலை அல்லது நிர்வான நிலை. புத்தரின் சமகால மதங்களாக நாம் சமணத்தையும், வைதீக சமயத்தையும் எடுத்துக் கொள்ளலாம். சமணம், வாழ்கை இல்லல்கள் நிறைந்தது என்றது. ஆனால் புத்தமோ அதற்கு தீர்வு தந்தது. சமண புத்த சமயங்களின் வளர்ச்சிக்கு ஆன்மீக அமைதியின்மையே காரணம். வைதீகம் சடங்குகள் நிறைந்ததாக இருந்தது. இது சாதாரண மக்களின் இன்னல்களை போக்குவதாக இல்லை. மக்களின் இன்னல்களுக்கு வைதீகம் சில சடங்குகளையும் வேள்விகளையுமே முன் வைத்தது. அது போன்ற சடங்குகளை சாமானியர்களால் செய்ய இயலவில்லை. இதன் உணமைகளையும் வாழ்க்கைத் தத்துவங்களையும் விளக்க வந்தவையே சமணமும் பௌத்தமும். வைதீகத்தில் கூறப்பட்டுள்ள தத்துவங்கள் எளிய மக்களுக்கு புரியும் படியாக இல்லை. எளிய மக்கள் மோட்சத்திற்கு செல்லவும் வாழ்க்கையை புரிந்து கொள்ளவும், தத்துவங்களை தெரிந்து கொள்ளவும் வேறு வழிகள் தேவைப்பட்டன. மேலும் இவைகள் மக்களுக்கு புரியும் மொழியில் இருக்க வேண்டும். இந்த தேவைகளை பூர்த்தி செய்ய வந்ததே சமணரான மகாவீரரும், புத்தரான சித்தார்த்தரும். இவ்விரு சமயமும் வணிகச் சமுதயத்தாலும் அவர்களது பங்களிப்பினாலும் வளர்ச்சி கண்டது. மகாவீரரும் புத்தரும் ஆளும் வர்கத்தில் பிறந்தவர்கள். வர்ணாசிரம தர்மத்தில் பிராமணர்களுக்கும் சத்திரியர்களுக்கும் கிடைத்த இடம் வைசியர்களான வணிகர்களுக்கு கிடைக்க வில்லை. ஆனால் வியாபாரத்தின் மூலம் வணிகர்களின் பொருளாதார நிலை மேம்பட்டு இருந்தாலும், வணிகர்கள் மூலமாக அதிக வரி வருவாய் அரசர்களுக்கு கிடைத்தாலும், சமூகத்தில் மூன்றாம் பிரஜையாக கருதப்பட்டனர். கீழ் சாதியினருக்கு பல சலுகைகள் மறுக்கப்பட்டன. எல்லா சலுகைகளும், அரசர்களுக்கும் பிராமணர்களுக்குமே கிடைத்தன. எனவே வணிகர்களும், மற்றவர்களும் சமணத்தையும் பௌத்தத்தையும் ஆதரிக்க தொடங்கினர். புத்தர் கடவுளைப் பற்றி கவலைப்பட்டவர் இல்லை. கடவுளைப் பற்றியோ வைதீகத்தைப் பற்றியோ ஏதாவது கேட்டால் அமைதியாக இருப்பார் பதில் சொல்லமாட்டார். ஆனால் மனித இன்னல்களுக்கான காரணத்தைப்பற்றியும் அதிலிருந்து விடுபடுவது பற்றியும் மிகத் தெளிவான போதனைகளை வழங்கி விட்டு சென்றார். பெரியாரிடம் அது இல்லை. அவர் இன்னல்களுக்காக குரல் கொடுத்தார் மக்களைச் சேர்த்து போராடினார். ஆனால், அந்த காலகட்டத்திற்கு தேவையான தெளிவான வழிகாட்டுதல் இல்லாமல் விட்டுச் சென்று விட்டார்.


இப்பொழுது எதை எடுத்தாலும், பெரியாரை மேற்கோள் காட்டுவது என்ற ஒரு தவறான போக்கு வந்து விட்டது. பெரியார் ஒரு கருத்தை ஏன் சொன்னார், எதற்காக சொன்னார், அதன் விளைவு என்ன? என்று தெரியாமல், நான் பெரியாரை படித்தேன் அவர் இவ்வாறு சொல்லியிருக்கிறார் என்று சில வரிகளைக் கொண்டு விளக்க முற்படுகின்றனன்ர். இது ஒரு தவறான போக்கு. அது மாற வேண்டும். பெரியாரின் மிகப் பெரிய கொள்கை, எதையுமே உயர்த்தி பிடிக்காதே. தமிழை உயர்த்தினால், உடனே அது ஒரு காட்டு மிராண்டி மொழி என்றார். தமிழ்த்தாய்க்கு சிலை வைப்பதை கண்டித்தார். கண்ணகிக்கு சிலை வைத்து அதை பாராட்டிய பொழுது கடுமையாக நடந்து கொண்டார். கடவுள் வழிபாடு என்று ஒரு கூட்டம் சென்ற போது அதை கண்டித்தார். கடவுளை கற்பித்தவன் முட்டாள் என்றார். புத்தர் கூட கடவுள் இல்லை என்று தான் கூறினார். ஆனால், புத்தமதம் வளர்ந்து அது ஒரு நிறுவனமயப் படுத்திய போது புத்தரே கடவுளானார். குரு என்ற நிலையில் இருந்து கடவுள் என்ற நிலைக்கு தள்ளப்பட்டார்.


பெரியார் பெண் விடுதலை பற்றி பேசினார், கட்டுபாடற்ற பாலுணர்வு பற்றி பேசினார், பாலுணர்வு சுதந்திரம் பற்றி பேசினார் என்று தனக்கு தேவையான சில கொள்கைகளை மட்டும் எடுத்துப் பேசும் கூட்டம் ஓன்று உருவாக்கி உள்ளது. இதனால், வரப்போகும் பாதிப்பு என்பது மிகப் பெரியது. முக்கியமாக கற்பு என்பது தமிழ்ப் பண்பாடா? என்றால் இல்லை. காதலும் களவு மனமும் தமிழ்ப் பண்பாடு. ஆணுக்கும் பெண்ணுக்கும் காதல் பிறக்க ஒரு விதமான ஈர்ப்பு இருந்தால் மட்டும் போதாது. உண்மையான அன்பும், புரிதலும், நம்பிக்கையும் வேண்டும். இல்லையென்றால் அது காதல் அல்ல. இவை மூன்றும் இல்லையென்றால் அது, கட்டுபாடற்ற பாலுணர்வு கொள்கை அல்லது பாலியல் புரட்சி ஆகும். இந்த மூன்றும் இல்லாத உறவு காதல் அல்ல அது தமிழ்ப் பண்பாடும் அல்ல. இந்த விடயங்களை இன்றைய தலைமுறையிடம் நாம் சரியாக கொண்டு செல்லாவிட்டால் நாம் பேசும் சமூக நீதி கேள்விக்குள்ளாக்கபடும். சமூக நீதி என்பது இட ஒதுக்கீடு மட்டுமே அல்ல. அதையும் தாண்டி. 


பெரியார் பெண்கள் மட்டுமே ஒழுக்க விதிகளுடன் வாழவேண்டும், ஆண்கள் எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்று இருந்த சமுதாயத்தில் சொன்ன கருத்துக்களை இப்பொழுது பொருத்திப் பார்ப்பது தவறு. பாரதியார் கூட, கற்பு என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் பொது என்றார். பெரியார் அவருடைய பாணியில், "கணவனைத் தவிர பெண் மற்ற ஆண்களுடன் உறவு வைத்துக் கொள்ள பெண்களுக்கு உரிமை வேண்டும்" என்றார். விசயங்களை மொத்தமாக படித்து புரிந்து கொள்ள வேண்டும். ஆனால் இப்பொழுது புதிதாக வந்த பெரியாரியவாதிகளும், போலி முற்போக்காளர்களும் பேசுவதைப் பார்த்தால், பயமாக இருக்கிறது. மீண்டும் நாம் காட்டு மிராண்டி வாழ்க்கைக்கு திரும்பி விட்டோமா என்று. பெரியார் கேட்டது என்னவென்றால் பெண்ணுக்கு வகுக்கப்பட்ட ஒழுக்க நெறி ஆணுக்கு ஏன் வகுப்படவில்லை. பெரியார் வகுக்கப்பட்ட ஒழுக்கத்தைதான் எதிர்த்தாரே ஒழிய சமுதாயத்தில் ஒழுக்கம் குறைந்து சீரழிய வேண்டும் என்று சொல்லவில்லை.

தொடரும்

Wednesday, February 9, 2022

புதியதலைமுறை

 புதியதலைமுறை - 06.02.2022


புவனேஷ் ஒரு கிராமத்தில் இருந்து நகரத்திற்கு வேலைக்கு வந்த ஒரு இளைஜன். இவனுடைய முதலாளி நகரத்தில் புதிதாகத் துவங்கிய ஒரு கிளைக்கு இவனை மேனேஜராக நியமித்து இருந்தார். இவனும் இவனுண்டு இவன் வேலை உண்டு என்று இருந்து வந்தான். வேலையும் கையுமாக நாட்கள் ஓடின. ஒரு நாள் வேலை முடிந்து வீட்டுக்கு படியேறிச் செல்லும் போது எதிர்த்த வீட்டு மாடியில் ஒரு பெண் ஒரு பாட்டிக்கு உதவியாக நடந்து செல்வதை எதேச்சையாக பார்த்தான். அவள் இவனைக் கவனிக்கவில்லை. இவனும் தற்செயலாக ஒரு பெண்ணைப் பார்ப்பது போல் பார்த்துச் சென்று விட்டான்.

ஒரு நாள் புவனேஷ் ஆபிஸ் செல்வதற்காக கிளம்பினான். நல்ல மழை பெய்து கொண்டிருக்கும் ஒரு காலை வேளை. மிகவும் ரம்மியமான ஒரு சூழல். ரசித்துக் கொண்டு நின்றிருந்தான். வெய்யில் பூமியில் பிறந்த ஒருவனுக்கு மழை என்றால் கேட்கவா வேண்டும். மழை என்றாலே ஒரு கொண்டாட்டம் தான். இருப்பதை விட இல்லாததை நினைத்துக் கொண்டாடுவது மனித இயல்பு. 

கவிதா நர்சிங் முடித்து விட்டு ஒரு வாலண்டரி ஹெல்த் சர்வீசஸ் கம்பெனியில் வேலை பார்த்து வந்தாள். அவர்கள் வயதானவர்களைக் கவனிக்க ஹோம் நர்ஸ் அனுப்பும் சர்வீஸ் செய்து கொண்டு இருந்தார்கள். அதற்கு சர்வீஸ் சார்ஜ் வாங்கிக் கொள்வார்கள். அதில் ஒரு பகுதி அங்கு வேலை செய்பவர்களுக்கு சம்பளமாக வழங்கப்படும். அவளும் சொந்த ஊரை விட்டு விட்டு இங்கு ஒரு வீட்டில் ஹோம் நர்ஸாக வேலை செய்து கொண்டிருக்கிறாள். அவள் இப்பொழுது வேலை செய்யும் வீட்டில் ஒரு வயதான 85 வயது நிறைந்த ஒரு பாட்டி இருக்கிறாள். அவர்கள் வீட்டின் எதிபுற மாடியில் தான் புவனேஷ் குடியிருக்கிறான். கவிதா பாட்டிக்கு உதவி செய்யும் நேரம் தவிர மற்ற நேரங்களில் அவளின் பொழுது போக்கு மொட்டை மாடியில் நிழலில் நின்று வேடிக்கை பார்ப்பது தான். அவ்வாறு பார்த்துக் கொண்டிருக்கும் போது, யதேச்சையாக வேலைக்கு கிளம்ப தயாராக நின்று கொண்டிருந்த புவனேஷை கவனித்தாள். இவளைப் போலவே அவனும் மழையை ரசித்துக் கொண்டிருந்தான். கவிதா காலை மற்றும் மாலை வேலைகளில் இவனைக் கவனிக்க தவறுவதேயில்லை. அவளுக்கொரு சிந்தனை. யார் இவன்? காலையில் கிளம்பினால் இரவுதான் வருகிறான் அதுவும் மிகவும் தாமதமாக. எப்பொழுதுமே வேலை தானா. என்ன வேலை செய்கிறான். ஏதாவது சொந்தமாக தொழில் செய்து கொண்டு இருக்கிறானா? இந்து வந்து சில நாட்கள் ஆகி விட்டன. ஆனால் மாடியில் அதிகமாக காண முடிவதில்லேயே? என்று தனக்குள்ளேயே சிந்தித்துக் கொண்டிருந்தாள். 

அவளும் மழையில் நனைந்து கொண்டு மழையையும் மழையால் குளித்த ஊரையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள். மழை பூமிக்கு இறைவனால் கொடுக்கப் பட்ட ஒரு கொடை. பாவப்பட்ட மனிதனின் கண்ணீரை வெளியில் தெரியாமல் மறைப்பதற்கான அருட்கொடை. உழவனின் உணவு உற்பத்திக்காக கடவுள் கொடுத்த முதலீடு. ஓடும் மழை நீர் மனிதனின் மன அழுக்கை துடைத்து புது மனிதனை மனிதத்தை உருவாக்க நினைக்கிறது. ஆனால் மனிதன் மனிதத்தை மறந்து போனான். 

"கவிதா........ " பாட்டி அழைப்பது கேட்டது. 

"சொல்லுங்க பாட்டி "

"எனக்கு உட்கார்ந்து இருக்கக் கொஞ்சம் சிரமமாக உள்ளது. என்னை கொஞ்சம் கைத்தாங்கலாக அழைத்துச் சென்று படுக்க வை, அப்புறம் கொஞ்சம் தண்ணீர் வேண்டும்."

"இதோ தருகிறேன் பாட்டி"

பாட்டிக்கு கொஞ்சம் தண்ணீர் கொடுத்து விட்டு, உணவுக்கு முன் சாப்பிட வேண்டிய சில மருந்துகளையும் கொடுத்துவிட்டு, பின் மெதுவாக கைத்தாங்கலாக பாட்டியை அழைத்துச் சென்று அவருக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட கட்டிலில் படுக்க வைத்து, தலைப் பகுதியை சற்று உயர்வாக வைத்தாள். பாட்டி சாப்பிடுவதற்கு இன்னும் அரை மணி நேரம் உள்ளது. அரை மணி நேரம் கழித்து உணவு எடுத்து வர வேண்டும் என்று நினைத்துக் கொண்டு மீண்டும் மாடிக்கு வந்தாள். மழை நின்று விட்டது. எதிர்த்த வீட்டு மாடியிலும் அவனைக் காணவில்லை. வேலைக்கு சென்று விட்டான் போலும். 

புவனேஷ் அன்று அலுவலகம் செல்லாமல் நேராக வாடிகையாளரை காண சென்றான். வாடிக்கையாளர் இன்று தருவதாக சொன்ன காசோலையை வாங்கிக் கொண்டு "வேறு ஏதாவது ஆர்டர்கள் இருக்கா?" என்று கேட்டான். வாடிக்கையாளரும் "எங்கே சார் ஆர்டர்? முன்னாடி மாதிரியெல்லாம் வியாபாரம் இல்லை சார். எல்லோரும் குவாலிட்டி பார்க்காமல் விலையைத்தான் பார்கிறார்கள். அப்ப எல்லாம் வாங்கும் பொருள் நல்லதா இருக்கா? இது தேவையா? எவ்வளவு நாள் நாம் உபயோகிக்க முடியும் என்று பார்த்து வாங்குவார்கள். இப்பொழுது எல்லாம் கண்ணுக்கு கவர்ச்சியாகவும் விலை மலிவாகவும் உள்ளதா என்று மட்டுமே பார்க்கிறார்கள்" 

"அம்மாடி....." என்று கடையின் உள்ளே திரும்பி வேலை செய்யும் பெண்ணைப் பார்த்து "ஏதாவது வேண்டுமாம்மா" என்று கேட்டார். அவளும் ஒரு துண்டு சீட்டில் தேவையான பொருட்களை எழுதி புவனேஷிடம் தந்தாள். 

வாங்கிக் கொண்டு அலுவலகம் வரும் போது மதியம் ஆகி விட்டது. புவனேஷ் அந்த ஆர்டரை ஒரு ஓரமாக வைத்து விட்டு ஆபிஸ் பையனை அழைத்து அந்த காசோலையை பாங்கில் செலுத்திவிட்டு வருமாறு பணித்தான். பின் தன்னுடைய வேலையில் முழுகி விட்டான். ஆங்கிலத்தில் சொல்வது போல வொர்க்கஹாலிக். வேலை என்று வந்து விட்டால் அது முடியும் வரை உலகம் கண்ணை மூடிக் கொள்ளும்.

கவிதாவும் மாடிக்கு வரும் போதெல்லாம் அவளை அறியாமல் எதிவீட்டைப் பார்ப்பதை ஒரு வழக்க்கமாக வைத்து இருந்தாள்.  ஏன் இப்படி என்று அவளுக்கே தெரியவில்லை. எதிர்வீட்டு மாடிக்கு அருகிலேயே இன்னொரு வீடும் கட்டப்பட்டு கொண்டிருந்தது. வீடு மேலே எழுந்து முதல் தளம் வரை வந்து விட்டது. அதில் எல்லோருமே வெளி மாநிலத்தவர். அங்கேயே தங்கி, அங்கேயே சமைத்து, உண்டு, உறங்கி வேலை பார்த்து வந்தனர். அதனால் வேலையும் சீக்கிரமாக நடந்தது. அதையும் வேடிக்கை பார்த்தாள். பாட்டிக்கு காலை மாலை இருவேளை வாக்கிங் அழைத்துச் செல்வது, மூன்று வேளை உணவு எடுத்து வந்து கொடுப்பது, மாத்திரை மருந்து கொடுக்க வேண்டிய நேரத்துக்கு கொடுத்து விட்டால் வேறு வேலை ஒன்றும் இல்லை. பின் பாட்டி அழைத்தால் உதவிக்கு செல்ல வேண்டும். பாட்டிக்கு ஓய்வு அதிகம் தேவைபடுவதால் டிவியும் பார்க்க முடியாது. அது ஒரு விதமான தனிமை.

அன்று இது போல் ஒரு காலை வேளையில் நித்தியபடியாகச் செய்யும் எல்லா வேலையும் முடித்துவிட்டு மொட்டை மாடியில் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள். அவளை அறியாமல் அவளின் பார்வை எதிர் வீட்டு மாடிக்கு சென்றது. மணி சுமாராக 11 இருக்கலாம். புவனேஷ் வீட்டின் கதவு திறந்து இருந்தது. சாதாரணமாக இந்த வேளையில் கதவு திறந்து இருப்பது இல்லையே என்ற சந்தேகப் பார்வையுடன் பார்த்துக் கொண்டிருந்தாள். இப்பொழுது புவனேஷ் வீட்டைப் பூட்டிக் கொண்டு எதோ ஒரு பேக்கை எடுத்துக் கொண்டு வெளியில் கிளம்பினான். கவிதா எதோ ஒரு உந்துதல் காரணமாக தன்னை அறியாமல் அவனைப் பார்த்து கையை அசைத்தாள். ஆனால் அவன் கண்டு கொண்டதாக தெரியவில்லை. தன்னை தானே நொந்து கொண்டு, செய்தது தவறு என்று உள்ளுணர்வு பயம் காட்ட, திரும்பாலாம் என்று நினைத்தவளுக்கு அங்கே புவனேஷும் கை காட்டுவது போல் தெரிந்தது. இவள் சிரித்தாள். அவனும் இவள் சிரிக்கிறாள் என்று தோன்ற அவனும் சிரித்து வைத்தான். பின் கிளம்பிச் சென்று விட்டான். இரண்டு நாட்கள் கழித்து திரும்பி வந்தான். அவளும் எதிர் மாடியில் இருந்து சைகை மூலம் எங்கே காணோம் என்று கேட்க இவனும் சைகை மூலமே வெளியூர் சென்றதை தெரிவித்தான். இந்த சிரிப்பும் கையசைப்பும் சில நாட்கள் தொடர்ந்தன. 

ஒருநாள் கவிதா மாடியில் இருந்து கொண்டு போன் நம்பர் என்ன என்று சைகை செய்தாள். இவனும் சைகை மூலமே நம்பரைச் சொல்ல அவளால் புரிந்து கொள்ள முடியவில்லை. பின் பாட்டி அழைப்பதைக் கேட்டு உள்ளே சென்று விட்டாள். 

புவனேஷ் அன்று இரவு தன்னுடைய மொபைல் நம்பரை ஒன்று ஒன்றாக பேப்பரில் எழுதி அவற்றை முறையாக வெட்டி நம்பர் கார்டு செய்தான். அடுத்த நாள் ஆபிஸ் கிளம்பும் போது அதையும் எடுத்துக் கொண்டு வெளியில் வந்தான். சாரல் மழை லேசாக பெய்து கொண்டிருந்தது. சாரல் மழை காரணமாக பக்கத்தில் வீட்டு வேலை செய்யும் தொழிலார்கள் மழைக்கு நனையாமல் ஓரமாக ஒதுங்கி நின்று இருந்தனர். கவிதாவும் பாட்டிக்கு தேவையான ஒத்தாசைகள் எல்லாம் செய்து முடித்துவிட்டு தனிமையைக் கழிக்க மொட்டை மாடிக்கு வந்தாள். புவனேஷை கண்டவுடன் ஒரு மகிழ்ச்சி. ஒரு பூரிப்பு.இன்னும் வேலைக்குச் செல்லவில்லையா என்று கைகைளை அசைத்துக் கேட்டாள். இவனும் இல்லையென்று சைகை செய்தான். 

பின் தான் வைத்திருந்த நம்பர் கார்டை ஒன்று ஒன்றாக வரிசைப்படி எடுத்துக் காண்பித்தான். முதலில் கவிதாவுக்கு புரியவில்லை. பின் உள்ளே சென்று பேனா பேப்பர் எடுத்து வந்து குறித்துக் கொண்டாள். பின் புவனேஷ் ஒரு விரலை காதின் பக்கமும் மற்றொன்றை வாயின் பக்கமும் வைத்து போன் பேச சொல்லிவிட்டு கிளம்பினான். பக்கத்துக்கு வீட்டில் வேலை செய்யும் தொழிலாளர்களும் இதனைக் கவனித்தனர். புவனேஷ் மனதில் அவர்கள் இருப்பதை மறந்து விட்டோமே என்று தோணல். அவன் அவர்களைப் பார்த்து ஒரு அசட்டுச் சிரிப்பு சிரித்து விட்டு, முகத்தில் தோன்றிய அசட்டுக் களையை துடைத்துக் கொண்டு அலுவலகம் கிளம்பினான். 

அலுவலகம் வந்ததுமே தினசரி வேலைகளைக் கவனித்து கொண்டு காலையில் நடந்ததை மறந்தே போனான். சரியாக ஒரு மூன்று மணியிருக்கும். ஒரு புது நம்பரில் இருந்து அழைப்பு வந்தது. வேலையின் காரணமாக அதை எடுக்கவில்லை. மீண்டும் சிறிது நேரம் கழித்து அதே நம்பரில் இருந்து அழைப்பு. புவனேஷ் புதிய வடிகையளராக இருக்குமோ என்ற சந்தேகத்துடன் போனை எடுத்து பேசினான். 

"ஹலோ.... ஐ ஆம் புவனேஷ், யார் பேசுறது" 

"ஹலோ....." என்று ஒரு பெண் குரல். மிகவும் தயக்கத்துடன், படபடப்பாக... மீண்டும் "ஹலோ....." என்றது அந்த குரல். இப்பொழுது அது கிணற்றுக்குள் இருந்து வருவது போல் கேட்டது. 

புவனேஷ் " நீங்கள் பேசுவது எனக்கு கேட்கிறது? யார் பேசுவது. உங்களுக்கு என்ன வேண்டும்" என்றான். 

"நான்..... நான் தான்... கவி..... கவிதா....."

"சொல்லுங்க கவிதா.... உங்களுக்கு என்ன வேண்டும்." என்று ஒரு வாடிக்கையாளரிடம் பேசுவது போல பேசினான். 

"என்னைத் தெரிகிறதா? நான் யார்.... ரென்று" என்றது அந்த பெண்ணின் குரல்.

வேலைப்பளுவின் காரணமாக புவனேஷ் சற்று கோபத்துடன் "நான் வேறு வேலையில் பிசியாக இருக்கிறேன். போனில் எல்லாம் முகம் தெரியாது. அழைத்த விவரத்தைக் கூறுங்கள். உங்களுக்கு என்ன வேண்டும்"

"நான் வேண்டுமென்றால் பிறகு கூப்பிடட்டுமா...." என்று தயக்கத்துடன் கேட்டது அந்த பெண்ணின் குரல்.

"வேண்டாம். எனக்கு நிறைய வேலைகள் முடிக்க வேண்டியுள்ளன. என்ன வேண்டும் என்று கூறுங்கள். வியாபாரம் சம்பந்தமாக பேச வேண்டுமென்றால் நான் உங்கள் அழைப்பை என்னுடைய விற்பனைப் பிரிவுக்கு மாற்றி தருகிறேன். அவர்களுடன் பேசுங்கள்" என்று தொடர்பை மாற்ற போனான். 

"இல்லை. கொஞ்சம் பொறுங்கள். நான் தான் கவிதா.... உங்கள் வீட்டிற்கு எதிர்த்த வீட்டில் உள்ளவள்..... அந்த பாட்டிக்கு...." என்று முடிக்கும் முன்பே புவனேஷ் குறுக்கிட்டான். 

"சொல்லுங்க கவிதா..... சாரி.... இன்று கொஞ்சம் பிசியாக இருந்ததால் நான் உங்களுக்கு நம்பர் கொடுத்ததை மறந்து விட்டேன். இதுவரை உங்களுடம் பேசாததால் உங்கள் பெயர் எனக்கு தெரியாது. உங்கள் குரலையும் தெரியவில்லை. சாரி.... என்னுடைய பெயர் புவனேஷ்"

மேலும் தொடர்ந்தான். "நீங்கள் கீழ் வீட்டில் இருக்கும் கனகராஜின் மகளா.... அது உங்கள் பாட்டியா.... என்ன படிச்சுருக்கிறீங்க..." 

"இல்லை... நான் கனகராஜின் மகள் அல்ல.... நான் நர்சிங் படித்து விட்டு இங்கு ஹோம் நர்சாக வேலைக்கு வந்துள்ளேன். பாட்டியை கவனித்துக் கொள்வது தான் என் வேலை"

"பாட்டி கனகராஜின் அம்மாவா..."

"ஆமாம். அவர்களுக்கு 85 வயது ஆகிறது. சுகர், பிரஷர் மற்றும் வயதின் காரணாமாக உள்ள பாதிப்புக்கள் எல்லாம் உள்ளன. நடப்பது, தனியே செல்வது, இருப்பது எல்லாம் கடினம்"

"இவர்களைப் போன்றவர்களைப் பார்த்துக் கொள்வதற்கு மிகப் பெரிய பொறுமை, சகிப்புத் தன்மை  வேண்டும் அல்லவா."

"ஆமாம்...... வேலைப்பளு குறைவுதான். ஆனால் தனிமை தான் அதிகம். குழந்தைகளோ வீட்டு அம்மாவோ மேலே வர மாட்டார்கள். கனகராஜ் சார் மட்டும் தினமும் ஒருதடவை மாலையில் வருவார். வரும்போது பாட்டி மிகவும் சந்தோசப்படுவார்கள். அவரும் சில நிமிடங்கள் இருந்து விட்டு சென்று விடுவார். நானும் பாட்டியும் மட்டும் தான். பாட்டி ஒய்வு எடுக்கும் பொழுது நான் மொட்டை மாடியில் வந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பேன். அப்பொழுது தான் உங்களைக் கவனித்தேன்." 

"ஆஹா.... ம்...... நல்லது" என்றான் புவனேஷ்.

"நீங்கள் என்னை கவனிக்கவே இல்லை. நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்பது போல் காலையில் சென்றால் இரவு திரும்புவது என்று இருந்தீர்கள். என்னமோ தெரியவில்லை, உங்களுடன் நட்பு கொள்ள வேண்டும் என்று தோன்றியது. அதான்..." என்று இழுத்தாள் கவிதா.

"அதனால் என்ன.... தாரளமாக....."

"சரி மீண்டும் சமயம் கிடைக்கும் போது பேசுகிறேன். பாட்டி அழைக்கிறார்கள்" என்று போனை கட் செய்து விட்டு சென்றாள்.

போனில் பேசிய பிறகு புவனேஷுக்கு கை கால் ஓடவில்லை. நினைவுகள் தேங்கி விட்டன. எதோ பறப்பது போல ஒரு உணர்வு. எத்தனை நேரம் போச்சு என்று தெரியவில்லை. மனது மிகவு லேசாக, உடம்பு ரொம்ப லேசாக. மனது முழுவதும் மகிழ்ச்சியுணர்வு.எதோ கிடைக்காத ஒன்று கை கூடியது போல. தெய்வத்தின் முன் அவன் மட்டும் நிற்பது போன்ற பரவச நிலை. தீடிரென்று கதவு தட்டும் சப்தம். புவனேஷின் கீழ் வலை செய்யும் ஒருவர் "மே ஐ கம்மின்" என்றார்.

"எஸ். ப்ளீஸ்....." என்றான் புவனேஷ்

"சார் எச் ஓ வுக்கு அனுப்புவதற்கு ஒரு ரிபோர்ட் தருவதாக சொன்னீர்கள். ஆனால் இன்னும் வரவில்லை. கொரியர் பாய் வேறு வந்து விட்டான். அதான்...." என்று சொன்னான். 

உடன் புவனேஷ் நினைவு திரும்பியவனாக "ஐந்து நிமிடம்.... இப்பொழுதே தருகிறேன் ... கொஞ்சம் வெயிட் பண்ணுங்க" என்று விட்டு தன்னுடைய அலுவலக வேளையில் முழுகினான். எப்படி தன்னையே மறந்தான் என்று அவனுக்கே தெரியவில்லை.

பின்னர் வழக்கம் போல காணும் போது சைகைப் பேச்சு தொடர்ந்தது. மூன்று நாட்கள் கழித்து அதே போல் ஒரு உரையாடல். புவனேஷ் அவனைப் பற்றியும் கவிதா அவளைப் பற்றியும் பேச ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள முயன்றனர். இருவர்களாக இருந்தவர்கள் நண்பர்களாக மாறினர். எப்பொழுதாவது வெளியில் செல்லும் பொது சந்திக்க நேர்ந்தாலும் ஒரு புன்னகை தவிர வேறொன்றும் இல்லை. மற்றவர்கள் பார்த்து தவறாக எடுத்துக் கொள்ளக்கூடாது என்பதால்.

இப்படியே சென்று கொண்டிருந்த நட்பு, 6 மாதங்களில் அதன் அடுத்த பரிமாணத்தை எட்டிப் பார்க்க ஆரம்பித்தது. அவளுக்கு இந்த வீட்டினருடன் இருந்த ஒப்பந்த காலம் முடிந்து செல்ல வேண்டிய நேரமும் வந்தது. ஒப்பந்தம் நீட்டிக்கப்படும் என்றுதான் நம்பியிருந்தாள். ஆனால் நீட்டிக்கப்படவில்லை.

புவனேஷ் கவிதாவின் நம்பரைப் பார்த்து போனை எடுத்துப் பேசினான். 

"சொல்லு கவிதா..."

"அடுதவாரம் 10 தேதியுடன் என்னுடைய இந்த வீட்டுடனான காண்ட்ராக்ட் முடிகிறது. அவர்கள் நீட்டிக்கவில்லையென்றால் நான் 10 ம் தேதியுடன் செல்ல நேரிடும். என்னுடைய கம்பெனி என்னை மதுரைக்கு வரச் சொல்லுவார்கள். அங்கு சென்று வேறு ஏதாவது வாய்ப்பு இருக்கா என்று தெரிந்து கொள்ள வேண்டும் மேலும் இந்த ஒப்பந்த காலத்திற்கான பாக்கி சம்பள தொகையையும் பெற்று கொள்ள வேண்டும். பின் வீட்டிற்கு சென்று ஒரு வார காலம் ஒய்வு எடுத்து விட்டு வேறு வாய்ப்பு கிடைத்தால் அங்கு செல்ல வேண்டும்"

எதோ ஒரு சிந்தனையில் "ம்.........." என்றான்.

"என்ன ம்....."

"இல்லை யோசிக்கிறேன்"

"என்ன யோசனை"

இந்த குறுகிய கால நட்பு, என்னுடைய ஒரு கனாக் காலமாக மாறப் போகிறதை நினைக்கும் போது ஒரு வருத்தம். என்னால் மறக்கக முடியாது. ஏன் மீண்டும் இந்த ஊர் தான் வேண்டும் என்று கேட்டு வாய்ப்பு கிடைத்தால் வரமுடியாதா?

"இங்கு கேட்டு வாங்க முடியாது. அவர்கள் தருவதைத்தான் ஏற்று கொள்ள வேண்டும்"

"முயன்றால் முடியாதா?"

"முயன்று பார்க்கலாம்"

"எப்பொழுது மதுரைக்கு"

"10 ம் தேதி இரவு"

"நானும் அலுவலக விசயமாக அன்று இரவு மதுரை செல்ல உள்ளேன். ஒன்றாக செல்லலாமா?"

"ஐயோ.... சந்தோசம்...... நல்லா வாங்க, எனக்கும் ஒரு வழித்துணை."

10 ம் தேதி இருவரும் ஒன்றாக மதுரைக்கு புறப்பட்டோம். இருவருக்கும் அடுத்தடுத்த இருக்கை. நடத்துனர் வந்து டிக்கெட் கொடுக்கும் வரை பிரகாசமாக எறிந்த விளக்கு, அவர் சென்று அவருடைய இருக்கையில் அமர்ந்ததும் அணைக்கப்பட்டது. ஒரு சிறிய விளக்கொளி மட்டும். இந்த இரண்டு ஜோடி கண்களைத் தவிர மற்ற கண்கள் எல்லாம் கனவுலகம் சென்றுவிட்டன. மௌனம். வார்த்தைகள் பேச முடியாததை மௌனம் பேசும். உள்ளங்கள் ஒன்றை ஒன்று பார்த்துக் கொண்டிருந்தன. இரவின் அரசி, தன்னுடைய மேனியெங்கும் வைரங்கள் போன்று மின்னும் நட்சத்திரங்களை ஆடையாக அணிந்து வானில் பிரகாசித்துக் கொண்டிருந்தாள். இன்னும் நிலவில் பாட்டி உடகார்ந்து கொண்டு வெற்றிலை இடித்துக் கொண்டிருந்தாள். இரவின் அரசியும், நிலவின் பாட்டியும் இந்த இருவரையும் பத்திரமாக கவனித்துக் கொண்டிருந்தார்கள். அவன் அவளுடைய கையை எடுத்து தனது கைக்குள் வைத்துக் கொண்டு மூடினான். அவள் அவன் மேல் ஆதாரவகச் சாய்ந்து கொண்டாள். இருவரின் கண்களும் உறங்கவில்லை உள்ளங்களும் உறக்கத்திற்கு விடுமுறை அளித்தன.

காலை சரியாக 5.30 மணியளவில் மதுரை வந்து சேர்ந்தார்கள். இருவரும் தேநீர் அருந்திவிட்டு நின்றார்கள். 

அவள் புவனேஷைப் பார்த்து, "எங்கே தங்கப் போகிறீர்கள்"  என்றாள். 

"எப்பொழுதுமே நான் மதுரை வந்தால் கணேஷ் லாட்ஜில் தான் தங்குவேன். என்னுடைய வாடிக்கையாளர்களில் பலர் அதன் அருகில் தான் உள்ளனர்"

"உங்கள் வீட்டில் உங்களது கல்யாண ஏற்பாடுகள் ஏதாவது..." என்று சாதாரணமாகப் பேசுவது போல மெதுவாகக் கேட்டாள்.

"அம்மா அப்பா பார்த்துக் கொண்டே இருக்கிறார்கள், இன்னும் முடிவாகவில்லை."

"உள்ளூர் பெண்களை மட்டுமா பார்க்கிறார்கள். இல்லை வெளியூர் என்றாலும் பார்க்கிறார்களா?"

"உள்ளூர் வெளியூர் என்று இல்லை. எங்கிருந்தாலும்..... ஆனால் பெண் கொஞ்சம் படித்தவளாக மிகவும் பொறுமைசாலியாக, எல்லோரையும் அரவணைத்துச் செல்லும் பெண்ணாக எங்களுடைய கட்டுமானத்தில் உள்ள பெண்ணாக பார்க்கிறார்கள். இல்லையென்றால் ஒதுக்கி வைத்து விடுவார்கள்."

புவனேஷ் சொன்னவுடன் அவள் கண்கள் லேசாக நனைந்தன. அதை கவிதா வெளிக்காட்ட விரும்பவில்லை. வேறு பக்கம் திரும்பி அதை மறைத்து, பின் புவனேஷைப் பார்த்து,

"சரி..... நான் கிளம்புகிறேன். அலுவலகம் திறந்திருக்கும். எனக்காக யாரவது காத்துக் கொண்டிருப்பார்கள். அங்கேயே ஒரு கெஸ்ட் ரூம் உள்ளது. அங்கு சென்று ரிப்போர்ட் செய்து விட்டு கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துவிட்டு குளித்து ரெடியாகி மற்ற வேலைகளைப் பார்க்க வேண்டும்" என்று சொன்னாள்.

உடன் புவனேஷ் "கவி...... உன்னை தொடர்பு கொள்ள வேறு ஏதாவது நம்பர் இருக்கிறதா....."

"எங்கள் கம்பெனி விதிகளின் படி, நாங்கள் தனியாக நம்பர் வைத்துக் கொள்ள அனுமதியில்லை. நாங்கள் செல்லும் இடங்களில் உள்ள நம்பர்களையே பயன்படுத்தவேண்டும். அதனால் நானே உங்களை அழைக்கிறேன்" என்றாள்.

"அப்படியென்றால் இதுநாள் வரை நீ என்னை தொடர்பு கொள்ள உபயோகித்த நம்பர் என்னவாயிற்று"

"அது அந்த வீட்டில் பாட்டியை கவனித்துக் கொள்வதற்காக உபயோகபடுத்திய ஒரு நம்பர். வரும் போது அவர்களிடமே கொடுத்து விட்டேன்."

இருவரும் சிறிது நேரம் மௌனமாக நின்று விட்டு பிரிந்து சென்றார்கள். புவனேஷுக்கு வேலை ஒன்றும் ஓடவில்லை. அவளின் நினைப்பு. விடுதியிலேயே இருந்தான். என்ன செய்வது என்று ஒன்றும் புரியவில்லை. ஒருவழியாக அன்றைய பொழுது கடந்தது. மீண்டும் இரவின் ராணி வந்தாள். ஒன்றும் புரியாத தனிமையாக அந்த இரவு கடந்தது. அவள் அழைப்பாள் பேசலாம் என்றிருந்த புவனேஷுக்கு மிகப்பெரிய ஏமாற்றம். காலையில் அவளுடனான உரையாடல் மீண்டும் மீண்டும் மனதில் ஓடிக் கொண்டே இருந்தது. மறுநாள் காலை எல்லா அலுவலக வேலையையும் அவசர அவசரமாக செய்து முடித்து தன்னிடம் திரும்பினான். ஆனால், சிந்தையெல்லாம் கவிதா..... 

ஒரு ஆணுக்கு எப்பொழுதுமே ஒரு பெண் துணை தேவைப்படுகிறது. அம்மா, அக்கா, மனைவி, மகள், சகோதரி, சொந்தக்காரி, தோழி....... ஒரு பெண்ணின் அன்பும் அருகாமையும் இல்லாத நிலையில் தான் பெண்மை உணரப்படுகிறது. இருக்கும்போது நாம் அதைப்பற்றி கவலை கொள்வதில்லை.  அதன் மகிமை தெரிவதில்லை.

எதிர்வீட்டை காண நேரும்போதெல்லாம் மனதிற்குள் ஒரு வெறுமை.... தொண்டை அடைக்கும் உணர்வு. எதுவும் இல்லாத வெறுமையில், எது எதை அடைக்கும் என்றே புரிந்து கொள்ள முடியவில்லை. அதை மறப்பதற்காகவே அலுவலகத்தில் முழு மூச்சில் வேலை செய்தான் புவனேஷ். கம்பெனியும் நல்ல நிலைமையில் சென்று கொண்டிருந்தது.

ஒரு வருடம் உருண்டோடியது. ஒரு புது நம்பரில் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. அதை புவனேஷ் எடுத்தவுடன், அவனைப் பேச அனுமதிக்காமல்.....

"ஹாய் புவனேஷ்....."

"எஸ் புவனேஷ்...... யார் பேசறீங்க....."

"ஹே.... என்னை தெரியல... வாய்ஸ் வச்சு ஐடெண்டிபை பண்ண முடியலையா?"

புவனேஷ் யோசித்துக் கொண்டே. "இல்லை....." என்றான். அவனுக்கு சந்தேகம் இது கவிதாவாக இருக்குமோ என்று.....  ஆனால் அவள் பேசும் விதம் கொஞ்சம் வித்தியாசமாக இருந்ததால் சரியாக கணிக்க முடியவில்லை.

"ஓகே கே.... ரொம்ப முளிக்காதீங்க.... நான்தான் கவிதா. எப்பிடி இருக்கீங்க....."

புவனேஷும், "ஹாய், கவி...... எப்பிடி இருக்க... ரொம்ப நாளாச்சு..... பேச்செல்லாம் மாறிப்போச்சு.... இப்போ எங்க இருக்க? உன்னைப் பார்க்கணும் போல இருக்கு பேசணும் போல இருக்கு." என்றான் மிக ஆவலுடன்.

"நான் இப்போ பெங்களுர்ல ஒரு தமிழ் குடும்பத்துல ஒரு தாத்தாவைப் பார்த்துக்க வந்துருக்கேன். இங்கே வந்ததால பேச்சு வழக்கு கொஞ்சம் மாறிடுச்சு.... உங்களை மறக்கணும் நட்பை கஷ்டப்படுத்தக் கூடாது என்பதற்காக தான் நான் உங்களைத் தொடர்பே கொள்ளவில்லை. தவறாக எடுத்துக் கொள்ளவேண்டாம்"

"நல்லது.... எனக்கும் புரிகிறது..... இதுதான் உன்னுடைய நம்பரா?"

"இல்லை இதுவும் இங்கு எனக்கு தரப்பட்ட நம்பர். நான் நாளை காலை உங்கள் ஊரில் இருப்பேன். அங்கு ஒரு வேலை உள்ளது. அதை முடித்துவிட்டு திரும்பிவிடுவேன். அன்று நான் உங்கள் அறையில் தங்கிக் கொள்ளலாமா.... அனுமதி கிடைக்குமா" என்றாள்.

"தாராளமாக.... நான் பஸ் ஸ்டான்ட் வந்து பிக்அப் செய்யட்டுமா"

"ஓகே.... அங்கு வந்தவுடன் நான் உங்களை அழைக்கிறேன்..... பை... குட் நைட்" என்று இணைப்பை துண்டித்தாள்.

நட்பு தொடர்கிறது மீண்டும்.

Tuesday, February 8, 2022

மூவேந்தர்

 மூவேந்தர் - 08.02.2022

 மூவேந்தர் என அழைக்கப்படுபவர்கள் சேர சோழ பாண்டிய மன்னர்களாவர். இவர்களே பண்டைய தமிழகத்தையும் தென்னிந்தியா முழுமையுமே ஆண்டவர்கள். இவர்களில் பாண்டியர்கள் நீண்ட நெடிய பாரம்பரியம் உள்ளவர்கள். உலகத்திலேயே மிக நீண்ட நெடுங்காலம் ஆண்ட மரபை உடையது பாண்டிய பேரரசு. எந்த மன்னர் குலத்துக்கும் இல்லாத நீண்ட வரலாறு பாண்டியர்களுக்கு உண்டு. 

 பாண்டியர்களின் கொடி மீன் கொடியாகும். இவர்களின் தலைநகரம் மதுரை ஆகும். வைகை ஆற்றுப் பகுதியே பாண்டியப் பகுதியாகும். மற்றொரு வற்றாத ஜீவ நதி தாமிரபருணியும் ஓடியது. பாண்டியர்கள் ஆண்ட பகுதிகளாக மதுரை, திருநெல்வேலி, சிவகங்கை, புதுக்கோட்டை, இராமநாதபுரம் போன்ற பகுதிகளாகும். இவர்கள் வேப்பம்பூ மாலை அணிவார்கள். பாண்டியர்கள் தங்கள் பெயர்களுடன் மாறன், வழுதி, வர்மன், செழியன், முதுகுடுமி போன்ற ஓட்டுக்களைச் சேர்த்துக் கொண்டனர். இவர்கள் சந்திர குலத்தைச் சேர்ந்தவர்களாக தங்களை அறிவித்துக் கொண்டனர். பாண்டிய முத்துக்கள் உலகத்திலேயே மிகர் சிறந்த முத்துக்களாக கொண்டாடப்பட்டன.  இவர்கள் கிபி 14-ம்  நூற்றாண்டு வரை சிறப்பாக இப்பகுதியை ஆண்டனர். 

 சோழர்களின் கொடி புலிக் கொடியாகும். நெல் அதிகமா விளையும் பகுதி சோழ நாடாகும். "சோழநாடு சோறுடைத்தது" என்பது பழமொழி. சோழர் குலம் வளம் பொருந்திய காவிரி ஆற்றுபடுகையிலேயே தோன்றியது. கிபி 2-ம்  நூற்றாண்டுக்கு பின்னர் வலிமை குறைந்து சிற்றரசராகி பின் கிபி 9-ம்  நூற்றாண்டில் மீண்டும் வலிமை பெற்றுத் தெற்காசியா முழுவதும் தன் குடையின் கீழ் கொண்டு வந்து ஆண்ட வம்சம். கிபி 13-ம்  நூற்றாண்டு வரை சோழராட்சி நிலவியது. பின் மீண்டும் சரியத் தொடங்கியது. சோழர்கள் அத்தி மாலை அணிந்திருந்தனர். இவர்கள் தங்களை சூர்ய குலத்தைச் சேர்ந்தவர்களாக அறிவித்துக் கொண்டனர். இவர்கள் தங்கள் பெயர்களுடன் சென்னி, வளவன், கிள்ளி, ஆதித்யன், இராஜராஜன் போன்ற ஓட்டுகளைச் சேர்த்துக் கொண்டனர்.. 

 சேரர்கள் தமிழகத்தின் மேற்குக் கடற்கரைப் பகுதியை ஆண்ட மன்னர் வம்சம் ஆகும். கரூர் மற்றும் வஞ்சியைத் தலைநகராக கொண்டு ஆண்டு வந்தனர். சேரர்களின் கொடி விற்கொடி ஆகும். இப்போது கேரளா மாநிலமாக உள்ள சில பகுதிகளும், தமிழகத்தின் கோவை மற்றும் கன்னியாகுமரிப் பகுதிகளும் சேர நாட்டுப் பகுதிகளாகும். அமராவதி, நொய்யல் மற்றும் பேரியாறு போன்ற நதிகள் உள்ளன. மலைகளுக்கும் மலையில் விளையும் வாசனை திரவியங்களுக்கும் பெயர் பெற்ற நாடாகும். இவர்கள் தங்கள் பெயர்களுடன் சேரலாதன், குட்டுவன், கடுங்கோ, குடக்கோ, இரும்பொறை, வாழியாதன், கோதை, மாக்கோதை போன்ற ஓட்டுக்களைச் சேர்த்துக் கொண்டனர். சேரர்களின் மாலை பனம்பூ ஆகும். இவர்கள் தங்களை அக்கினிக் குலத்தைச் சேர்ந்தவர்களாக அறிவித்துக் கொண்டனர்

உணர்வு

 உணர்வு - 25.௦9.2021


ஊரின் நடுவே ஒரு அழகான கோயில், பலவிதமான சிற்ப வேலைப்பாடுகளுடன், அதைப் பார்த்துக் கொண்டிருக்கும் போது நேரம் போவதே தெரியவில்லை. நம்மில் பலரும் கோயிலுக்கு செல்கிறோம். ஆனால் ஒருவர் கூட கோயிலை முழுமையாக பார்ப்பது இல்லை.கோயில் என்பது ஒரு வழிபடும் இடம் மட்டும் அல்ல. அது ஒரு சமுதாய சின்னம். பண்பாடு நாகரிகம்  மற்றும் நமது கலைகளை வளர்க்கும் ஒரு சமுதாய கூடம். பக்தர்களுக்கு அது ஒரு வழிபாட்டுக் கூடம். நேரடியாக சென்று கருவறை முன் நின்று வழிபடுகின்றனர். அல்லது வரிசையில் சென்று வழிபடுகின்றனர். இன்று அறநிலையத் துறையின் கீழ் பலவேறு கோயில்கள் வருவதால் கோயிலை சுற்றி வர கூட முடிவதில்லை. பரிவார தெய்வங்களை காண கூட அனுமதியில்லை. அவ்வாறு காணவேண்டும் என்றால் நமக்கு ஏதாவது ஒரு அதிகாரியின் துணையோ அல்லது அர்ச்சகரின் துணையோ வேண்டும். இல்லாவிட்டால் எல்லா கோயில்களிலும் ஜருகண்டி.... ஜருகண்டி.... தான். கருவறை வழிபாட்டுக் பின்னர், கோயிலை மூன்று சுற்று சுற்றி விட்டு சிறிது நேரம் அமர்ந்து விட்டு சென்று விடுகின்றனர். சிவன் கோயில் என்றால் சண்டிகேஸ்வருக்கு ஒரு சொடுக்கு அல்லது கை தட்டல் மற்றும் எழுந்து வரும் போது எல்லாவற்றையும் உதறிவிட்டு எழுந்து வருவர். ஆனால் அங்கு பலவிதமான சிற்பங்கள் உள்ளன, சித்திரங்கள் உள்ளன, அதில் எத்தனை விதமான கதைகள், கற்பனைகள், காவியங்கள். இவை எதையுமே நாம் ரசிப்பதில்லை, மற்றும் தெரிந்து கொள்ள விரும்புவது இல்லை. இங்கு உள்ள ஒவ்வொன்றின் பின்னனியிலும் ஒரு கதை உண்டு, காவியம் உண்டு... மற்றும் காமம், காதல், வீரம், பண்பாடு, சிற்பியின் கை வண்ணம், சிந்தனை அப்பப்பா....

நான்  சென்ற கோயில் பழைமையான நாக வழிபாடு உள்ள ஒரு கோயில். கோயில் திருவிழா என்று நினைக்கிறேன். நல்ல கூட்டம். மக்கள் முகங்களில் எல்லாம் மகிழ்ச்சி. ஊரே உறவினர் மற்றும் விருந்தாளிகள், பகதர்களின் கூட்டத்தில் நிரம்பி வழிந்தது. பிரசங்கி ஒருவர் பிரசங்கித்துக் கொண்டிருந்தார். தெய்வத்தின் பெருமை பற்றியும், வழிபடும் முறைகள் பற்றியும். என்னை பொறுத்தவரை தெய்வ வழிபாடு என்பது நம்பிக்கை சம்பந்தப்பட்ட விசயம். மேலும் அது நமக்கு ஒரு மன அமைதியையும், உறுதியையும் தர வேண்டும். பற்றி கொள்வது தானே பக்தி. அல்லாமல் முறைகள் மற்றும் சடங்குகளில் நம்பிக்கை இல்லை. இன்று தெய்வங்கள் மதங்கள் என்ற பெயரில் நிறுவனப் படுத்தப்பட்டு உள்ளது. நிறுவனப் படுத்தும் போது கட்டாயம் முறைகள் மற்றும் சடங்குகள் தவிர்க்க முடியாதவை. சிறிது நேரம் நின்று பிரசங்கம் கேட்டு விட்டு கோயிலுக்குள் சென்றேன். பக்தர்கள் கூட்டம் ஜெ... ஜெ... என்றிருந்தது. நடந்து வந்த களைப்பு வேறு. தெய்வத்தைப் பார்க்கும் துடிப்பு வேறு. திடீரென்று பார்த்தால் நான் கர்ப்பகிரகத்தின் முன் நிற்கிறேன் அடியார்கள் கூட்டம் என்னைத் தள்ளி முன் வரிசையில் நிற்க வைத்து விட்டது. தீபத்தின் ஒளியில் தெய்வத்தைக்  கண்ட பொழுது, ஒரு அமைதி. ஒரு வெறுமை. மனதில் ஒன்றுமே கேட்க தோன்றவில்லை. அவனுக்கு தெரியாதா எனக்கு என்ன வேண்டும் என்று. நான் மட்டும் அங்கு நிற்பது போல் ஒரு அமைதி. அவ்வளவு ஒரு அமைதி. எல்லாம் அவன் செயல். பிரசாதம் வாங்கிக் கொண்டு, பிரகாரம் வந்து வாயிலின் வெளியில் வந்தேன். இன்னும் பிரசங்கம் முடியவில்லை. சிறிது நேரம் நின்று கேட்டேன். 

பிரசங்கம் முடிந்தவுடன் பேசியவர், நாளை ஒரு யாகம் இருப்பதாகவும், அந்த யாகம் முடிந்தவுடன் நாகர் தோன்றி ஆசியருளுவார் என்று கூறினார். எனக்கு ஒரே ஆச்சர்யம். நாகர் தோன்றி ஆசி அருளுவது ஒரு புதுச் செய்தியாக இருந்தது. அதனால் நாளை வருவது என்று முடிவு செய்து கிளம்பினேன். யாரவது சாமியடுவார்கள் என்று நினைத்துச் சென்றேன்.

காலையில் எழுந்து நீராடி விட்டு, தெய்வத்தை மனதில் தொழுது விட்டு கோயிலுக்கு சென்றேன். காலையில் இருந்து ஒன்றும் சாப்பிடாததால் பசித்தது. கோயிலின் அருகிலேயே ஒரு ஹோட்டல் இருந்தது. சென்று சூடாக நான்கு இட்லியும், ஒரு பில்டர் காப்பியும் குடித்தேன். எனக்கு இந்த ஊர் புதிது தான். நான் நண்பன் ஒருவனைக் காண நீண்ட தூரம் சென்று கொண்டிருந்தேன். வழியில் பயணக் களைப்பு நீங்க கொஞ்சம் தங்கிச் செல்லலாம் என்று இங்கு வண்டியை நிறுத்தினேன். காணும் போதே கிராமத்து திருவிழாவுக்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன. புதிய புதிய மனிதர்களையும், அவர்களின் செயல், பேச்சு மற்றும் பண்பாட்டுக் கூறுகளையும் காணும் போது நமக்கு ஒரு புத்துணர்வும் புதிய அனுபவமும் கிடைக்கிறது. நான் என்ற பிம்பம் மாறி நாம் என்ற பிம்பம் கிடைக்கிறது. 

ஊர்த் திருவிழா என்பதால் அனைவரும் புத்தாடை அணிந்து, பலகாரங்கள் பல செய்து, பலருடன் அதைப் பகிர்ந்து ஒரே கோலாகலமாக இருந்தது. இதைப் பார்க்கும் பொழுது, எனக்கு எனது சிறுவயது நினைவலையும், எனது பாட்டியுடன் எங்கள் ஊர் சித்திரை திருவிழாவும் கலந்து கொண்டு கொண்டாடிய தினத்தையும் நினைவு வருகிறது. மீண்டும் அந்த நாட்கள் கிடைக்குமா? மனதில் ஒரு ஏக்கம். 

கோயிலுக்கு சென்றேன், யாகம் நடந்து கொண்டிருந்தது. மந்திர ஒலியைத் தவிர வேறு ஒன்றும் கேட்கவில்லை. எல்லோர் முகத்திலும் ஒரு எதிர்பார்ப்பு. வேறு விதமான பேச்சுக்கள் இல்லை. யாகத்தின் நடுவே ஒரு வித்தியாசமான உருவில் ஒரு மிகச் சிறிய உருவம் ஓன்று வெளியே வந்தது போல் எனக்கு தோன்றியது. அது ஒரு நீண்ட வாலுடனும் தலைப்பகுதி ஒரு சிறிய கடற்குதிரையின் உருவத்துடன் தோற்றம் அளித்தது. அது என்னை நோக்கி வந்ததை உணர்ந்தேன். மனதில் ஒரு சிறிய பயம். தொண்டைக்குளிக்குள் ஒரு பந்து மேலேயும் கீழேயும் செல்லாமல் தவிப்பதை என்னால் உணர முடிந்தது. யாகம் நடக்கும் இடத்திலிருந்து ஒரு சப்தம். "உடனே அதனைப் பிடிக்க வேண்டும். அதை குளிர்வித்து சாந்திப் படுத்த வேண்டும்" என்று யாரோ ஒருவர் கத்தினது எனது காதுகளில் விழுந்தது. நான் அதைப் பிடிக்க முயன்ற பொழுது அது என் கையில் இருந்து வழுவிக் கொண்டு சென்றது. கையில் எதோ ஒரு வழுவழுப்பை  உணர்ந்தேன். மீண்டும் அதை பிடிக்க முயன்றேன். அப்பொழுது அது என் கையில் மாட்டிக் கொண்டு விஸ்வரூபம் எடுத்தது. என்னால் நம்பவே இயலவில்லை. சிறிதாக இருந்த ஒரு உருவம் இப்பொழுது பல மடங்கு பெரிதாகி படமெடுத்து நின்றது. கழுத்தில் ஒரு நீல நிறம் தெரிந்தது. கண்கள் கூசின. நீண்ட நேரம் அதை காண இயலவில்லை. என்றாலும் மீண்டும் மீண்டும் பார்த்தேன். என்னைப் போல் எல்லாவருக்கும் ஒரு ஆச்சர்யம் அதிசயம். 

நிமிர்ந்து பார்க்கும் பொழுது அந்த உருவம் விண்ணுக்கும் மண்ணுக்கும் தொடுவது போல் இருந்தது. என்னவொரு  அழகு, என்னவொரு ஆனந்தம். அதன் தலை காற்றாடி போல ஆடிக் கொண்டிருந்தது. மிகப் பெரிய ஒரு குடையின் கீழே நாங்கள் இருப்பதைப் போல் உணர்ந்தேன். கோயில் மணி அடிப்பது போல் ஒரு உணர்வு. 

டிங், டிங்... டிங், டிங்... டிங், டிங்... டிங், டிங்... 

"இந்த அலாரம் வைச்சு பெட் காபி குடிக்கிற பழக்கத்தை என்னைக்குதான் விடுவீங்களோ? என்னங்க..... மணி 6 ஆச்சு. பெட் காபி வச்சுருக்கேன்.... ஆற்றதுக்குள்ள எந்திருச்சு குடிங்க..." என்று என் மனைவியின் குரல் கேட்டு எழுந்தேன்.

Monday, January 24, 2022

சல சல மழையில்

ல சல மழையில்...

ங்கு போல் பனியில்....

சங்கீதம் பாட.....

சந்ததாளம் போட......

இசையென வந்திடுவாய் இனிய பூங்குயிலே......

Tuesday, January 18, 2022

தர்மம்

 காந்தி மார்க்கெட்டில் 

                    கழைக்கூத்தாடியின் துண்டு.....!

காந்தி ரோடு சிக்னலில்

                    கையில் குழந்தையுடன் தாய்.....!

கண்ணாடிக் கூண்டில் 

                       கையில் குழந்தையுடன் மாதா......!

ஆம்.... தர்மம் வாழ்கிறது......

Thursday, November 25, 2021

நீதிமன்றப் பூனை

 நீதிமன்றப் பூனை - 25.11.2021


மீதிக்கு தவிக்கிறது ஒரு வெள்ளைப்பூனை வெளியே.

நீதிக்கு தவிக்குது ஒரு கூட்டம் கருப்பு பூனை உள்ளே....

Tuesday, August 10, 2021

ஒரு சிறு உரையாடல் - திருவள்ளுவரைப் பற்றி....

 [11:46 AM, 7/29/2021] Hong Kong Somu Annan: "ஆதிபகவன் முதற்றே"   "ஆதிபகலவன்"   இதில் எது சரி ? இதுவரை உரை எழுதிய யாரும் ஏன் பகலவன் என்று பொருள் கொள்ளவில்லை ?

[11:55 AM, 7/29/2021] RM S Viswanathan: ஆதி பகவன் என்பதே சரி..... இதுவரை உரை எழுதியவர்கள் எல்லாம் பகவன் என்றே எழுதியுள்ளனர். 

அதிகாரம் 1 கடவுள் வாழ்த்து – குறள் 1 

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி 
பகவன் முதற்றே உலகு 

மு.வ விளக்கம்: எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாக கொண்டிருக்கின்றன. அதுபோல உலகம் கடவுளை அடிப்படையாக கொண்டிருக்கிறது. 

சாலமன் பாப்பையா விளக்கம்: எழுத்துக்கள் எல்லாம் அகரத்தில் தொடங்குகின்றன; (அது போல) உலகம் கடவுளில் தொடங்குகிறது. 

கலைஞர் விளக்கம்: அகரம் எழுத்துக்களுக்கு முதன்மை; ஆதிபகவன், உலகில் வாழும் உயிர்களுக்கு முதன்மை

[12:14 PM, 7/29/2021] Hong Kong Somu Annan: பகலவன் என்று சூரியனையும், நீரின்றி அமையாது உலகு என்பதில் வருணனையும் பொருள்படக் கூறியிருந்தாரேயானால் வள்ளுவர் ஒரு இந்து தானே ?

[12:37 PM, 7/29/2021] RM S Viswanathan: இந்த கோட்பாடு சிரமண மதங்களிலும் உண்டு. இவர் இந்துவா, ஆசீவகரா, சமணரா அல்லது புத்தம் சார்ந்தவரா என்ற ஒரு பெரிய ஆராய்ச்சி இன்றும் நடந்து கொண்டுதானிருக்கிறது. 

திருவள்ளுவரும், சமயமும்

திருவள்ளுவர், திருக்குறளில், குறிப்பிட்ட கடவுள்கள் குறித்து எந்த கருத்தும் கூறவில்லை. திருக்குறளில் கூறப்பட்டுள்ள அறக் கோட்பாடுகள், சமண சமய நீதி நெறிகளை நெருங்கி உள்ளதால், திருவள்ளுவர் ஒரு சமணராக இருந்திருக்கக் கூடும் என்றே வரலாற்றாளர்கள் கருதுகிறார்கள்.

திருவள்ளுவரும், சைவமும்

திருவள்ளுவரை, திருவள்ளுவநாயனார் என சைவர்கள் அழைக்கின்றனர். இவரை சைவர் என்றும், இவருடைய திருக்குறளை, சைவ நூல் என்றும் சைவர்கள் நம்புகிறார்கள். திருவாவடுதுறை ஆதீனமாகிய, கொரடாச்சேரி சிவத்திரு வாலையானந்த அடிகள், ‘திருவள்ளுவர் சித்தாந்த சைவர்’ எனும் நூலை எழுதியுள்ளார். அதில், திருவள்ளுவரின் சமயம் சார்ந்த கருத்துகள் அனைத்தும் சைவ சித்தாந்தத்தினை விளக்குவதைப் பற்றி எழுதியுள்ளார்.
அழுக்காறாமை எனும் அதிகாரத்திலும், ஆள்வினையுடைமை எனும் அதிகாரத்திலும் திருவள்ளுவர், திருமகளையும் அவளுடைய மூத்தவளான தவ்வையையும் குறிப்பிடுகிறார். இந்த இரண்டு குறள்களிலுமே, தற்போது வழக்கில் இருக்கும் திருமகளின் தன்மையும், மூதேவியின் தன்மையும் ஒத்துப் போகின்றன.

அயோத்திதாசரும் தன்னுடைய திருவள்ளுவ ஆராய்ச்சியில் திருவள்ளுவரை சமண மதத்தவராகவே காண்கிறார். மேலும், திருவள்ளுவர் தனியாக தந்து உள்ள ஊழ் என்னும் அதிகாரமும் ஒரு காரணம். 

அறத்துப்பாலில் வள்ளுவர் மூன்று இயல் வைத்து உள்ளார். அதில் இல்லறவியலுக்கு 20 அதிகாரமும், துறவறவியலுக்கு 13 அதிகாரங்களும், ஊழியலுக்கு ஒரே ஒரு அதிகாரமும் தந்து உள்ளார். 

ஆனால், அவர் எச்சமயமோ, அவரின் குறள் இப்பொழுதும், படிக்கும் தோறும் புது புது அர்த்தத்தை காலத்திற்கு தகுந்தார் போல் தந்து கொண்டு இருக்கிறது.

Thursday, August 5, 2021

திருக்குறளும் தலைமைத்துவமும் 2

 Published in Lions Club of Chennai East Coast, Chennai Bulletin - "The Waves" - Month of Aug 2021

திருக்குறளும் தலைமைத்துவமும் 2

ஒரு தலைவனுக்குத் தேவையான ஆளுமைத்திறனை வளர்க்க அற்புதமான விளக்காக இருப்பது நமது திருக்குறள். திருக்குறள் ஒன்றை ஒருவன் முழுமையாகப் படித்துத் தெரிந்து கொண்டு விட்டால் அது தரும் ஞானம் அளவிட முடியாதது. இதைப்போல் ஒரு உயர்வான ஒப்பற்ற இலக்கியம் வேறு எங்கும் கிடையாது. மணிமேகலையின் அட்சய பாத்திரம் போல அள்ள அள்ள குறையாதக் கருத்துச் சுரங்கம். இலங்கை ஜெயராஜ் என்ற பேச்சாளர், அடிக்கடி குறிப்பிடும் ஒன்று, "தமிழைப் படிக்க வேண்டுமா? திருக்குறளை படி. தெய்வத்தை படிக்க வேண்டுமா? திருவாசகம் படி" என்பதே. எவர் எம்மதத்தைச் சார்ந்தவர் என்றாலும், எல்லோருடைய வீடுகளிலும் இருக்க வேண்டிய இரண்டு முக்கியமான புத்தகங்கள், திருக்குறளும், திருவாசகமும். 

"அஞ்சாமை ஈகை அறிவூக்கம்  இந்நான்கும் 
எஞ்சாமை வேந்தர்க் கியல்பு".

ஒரு தலைவனுக்குத் தேவையான முக்கியமான பண்புகளில் அஞ்சாமை ஒரு முக்கியமான பண்பு. எடுத்த கொள்கையில் உறுதியாக இருப்பது. அல்லது நினைத்த காரியத்தில் நாம் அஞ்சாமல் துணிவுடன் இருப்பது முதல் பண்பாகும். ஈகை என்ற வார்த்தைக்கு தற்போதைய சூழ்நிலையில் ஞானம் தர்மம் என்ற இரண்டு பொருள்களையுமே எடுத்துக்கொள்ளலாம். தனக்குத் தெரிந்ததை மற்றவர்களுக்கு விளங்கப்படுத்துவதும், தன்னிடம் உள்ள பொருளைத் தேவைப்படுவோருக்கு கொடுப்பதும் ஒரு தலைவனுக்கு அழகு. அறிவூக்கம் என்பதை அறிவு + ஊக்கம் என்று பிரித்து எடுத்துக் கொள்ள வேண்டும். தான் ஈடுபட்டுள்ள துறையில் மிகச் சிறந்த அறிவு பெற்றவனாக இருப்பதும் ஒரு செயலைத் தொடர்ந்து வெற்றி கரமாக செய்ய ஊக்கமுடயவனாக  இருப்பதும் ஒரு தலைவனின் மிகச் சிறந்த இயல்பு.

திருக்குறளும் தலைமை தத்துவமும்-1

Published in Lions Club of Chennai East Coast, Chennai Bulletin - "The Waves" - Month of July 2021

எல்லோருக்கும் உள்ள ஒரு பொதுவான ஆசை என்னவென்றால் சாதிக்க வேண்டும் !,  வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும். வெற்றி பெற என்ன செய்ய வேண்டும். கலாம் சொன்னதுபோல கனவு காணவேண்டும். ஒரு இலட்சியக் கனவு. இருந்தால், நம்மாலும் முன்னேற முடியும். மேலாண்மைத் துறையின் தந்தை  அல்லது குரு என்று அழைக்கப்படும் பீட்டர் ட்ரட் க்கக் ர் கருத்துப்படி "தலைவர்க ளின் முக்கியமான பணி, இலக்குகளை தீர்மானிப்பது மற்று ம் அதனை எவ்வாறு செயல்படுத்துத்துவது என்பதே".  

நம் தமிழ் இலக்கியத்தில், பதினெண்கீழ்க்கணக் க்குக நூலான திருக்குக் றளில், வள்ளுவர் 

"வெள்ளத்து அனைய மலர்நீர் நீட்டம் மாந்தர்தம் 

உள்ளத்தனையது உயர்வுர் " - என்று கூறுகிறார். 


ஒருவனுடைய கனவு இலட்சியம் நிறைவேறினால் அவன் வெற்றி பெற்றவனகிறான். இதையே தான் வள்ளுவர் தமது குறளில் எண்ணங்கள் என்ற கருத்தில் கூறுகிறார். நம்முடைய எண்ணங்கள் எவ்வளவு உயர்ந்ததாக இருக்குமோ அந்த அளவு உயர்ந்ததாக இருக்கும்  நாம் பெரும் வெற்றியும்.        நீரில் இருக்குக் ம் பூவின் தண்டு, நீர் நிலை எவ்வளவு ஆழம் இருக்குமோ அந்தந் அளவு நீளம் உள்ளதாக இருக்கும், நீரின் ஆழம் அதிகரிக்கக் அதிகரிக்கக் த் தண்டின் நீளமும் அதிகமாகிக் கொண்டு இருக்கும். அது போல மனிதர் உள்ளத்தில் உள்ள எண்ணங்கள் எவ்வளவு உயர்ந்ததாக இருக்குமோ அந்தந் அளவுக்கு தங்கள் வாழ்கையில் உயர்ந்த வெற்றியை பெறுவர் என்று திருவள்ளுவர் கூறுகிறார்.

Thursday, July 8, 2021

கிழக்காசிய நாடுகளில் செட்டியார்களின் பங்கு

Published in NBC-1000 Days Celebration Souvenir 2019 and Namadhu Chettinad Magazine July 2021

கிழக்காசிய நாடுகளின் முன்னேற்றத்தில் நம் நகரத்தார்களின் பங்கு குறிப்பிடத்தக்கது. நம்மில் பலரும் இன்று வரை பர்மாவின் ஏற்றம் மிக்க வாழ்வையும் இரண்டாம் உலகப் போருக்குப் பின் நம் இனத்தாரைச் சோகத்தில் ஆழ்த்திய நிகழ்வையும் பற்றி மட்டும் பேசிக்கொண்டிருக்கிறோம். ஆனால் நம்மால் தான் பெரும்பாலான கிழக்காசிய நாடுகள் 19 மற்றும் 20 ஆம் நூற்றாண்டுகளில் மிக வேகமாக வளர்ச்சி அடைந்தன. அந்தக் காலத்தில், சமுதாயத்தில் பெரிய மனிதர்களுக்கு மட்டுமே கடன் கிடைக்கும் என்ற சூழல் இருந்தது. இதை மாற்றியவர்கள் இந்தியாவின் வணிகச் சமுதாயமான செட்டியார்கள் எனப் பரவலாக அறியப் பெற்ற நகரத்தார்களே.

 

நம் இனத்தார் முதலில் சென்றது, இலங்கைக்குத் தான். இன்னும் இலங்கையில் செட்டி தெரு உள்ளது. அங்குதான் நாம் கிட்டங்கிகளைத் திறந்து இலங்கையின் பொருளாதரத்தை செம்மைப் படுத்தினோம். இப்பொழுது அதன் பெயர் கடற்கரைச் சாலை (SEA STREET). டச்சுகாரர்கள் உடன் 1656 ஆம் வருடம் 17 ஆம் நூற்றாண்டில் சென்று அங்குள்ள தோட்டங்களைப் பார்த்துக் கொண்டும் மற்றும் இலங்கையின் விவசாய மற்றும் தொழில் முன்னேற்றத்தில் முக்கிய பங்காற்றியும் வந்தோம். ஆனால், அங்கு பெரிதாக நம்மால், நம் தொழிலை வளர்த்துக் கொள்ள இயலவில்லை. அதற்குக் காரணம் டச்சின் MONOPOLISTIC TRADING POLICY. 1796ல் இலங்கை இங்கிலாந்தின் வசம் வந்தது. அது முதல் நமக்கு ஏறுமுகம் தான். இலங்கையின் முதல் வங்கியான Bank of Ceylon 1841ல் ஆரம்பிக்கப்பெற்றது. இதுவே இலங்கையின் முதல் வங்கி. என்றாலும் வங்கி மற்றும் மூலதன நடைமுறைகள் அத்தனையுமே நம் செட்டியார்கள் வசம்தான் இருந்தன. அதற்கு முக்கியமான காரணங்கள் நம்மவர்களின் நம்பிக்கை, ஒற்றுமை, சாதி சார்ந்த வளர்ச்சி, நமது சுமூக உறவு. இலங்கையின் பொருளாதார எழுத்தாளர்கள் அனேகர் நம்மைக் குறிப்பிடும்போது “Merchant Bankers of Ceylon” or “the only Bankers” என்று தான் எழுதுகிறார்கள். மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்தவர்கள், அவர்களின் வங்கிகளின் மூலமாக பணத்தைப் பெற்று இலங்கையின் தோட்டங்களில் முதலீடு செய்தனர். ஆனால் இலங்கையின் மக்களுக்குப் பெரிய தலைவலியே மூலதனப் பற்றாக்குறைதான். அது நம்மவர்கள் வரவிற்குப் பிறகு மாறத் தொடங்கியது. நமது செட்டியார்களின் மூலதனம் அவர்களின் உறவுகளுக்குள்ளிருந்தே  எடுகப்பப்பெற்றது. அதற்கும் மேலே மூலதனம் வேண்டிய போது மேற்கத்திய வங்கிகள் அல்லது இந்தியாவில் இருந்த இங்கிலாந்து வங்கிகளிடம் இருந்து பெறப்பட்டது. மேலும் நமது செட்டியார்கள் அவர்களுடைய வாடிக்கையாளர்களின் நன்மதிப்பு மற்றும் நம்பிக்கையை தமக்குள்ளும் மற்ற வங்கியாளர்களிடமும் பகிர்ந்து கொண்டனர். அதனால் ஏமாற்றப்படுவது தவிர்க்கப்பட்டது. நம் செட்டியார்களின் தொழில் திறமையே அவர்களின் வளர்ச்சிக்கு முழுமுதல் காரணம். நாம் கிடைக்கும் வாய்ப்புக்களை உபயோகபடுத்துவதில் வல்லவர்கள். முதலில் நாம் வணிகம் செய்யவே இலங்கை சென்றோம். ஆனால் இலங்கையில் சாமானியர்களுக்கு முதலீடு கிடைக்காத காரணத்தினாலும், மேற்கத்திய நாடுகளுக்குத் தேவையான, தோட்டப் பொருளாதாரமான, காப்பி, தேயிலை, ஏலக்காய், மிளகு மற்றும் இரப்பருக்கு ஏற்றுமதி வாய்ப்புகள் அதிகம் என்பதாலும், வங்கித் தொழிலில் முதலீடு செய்து சிறப்பாக செய்து வந்தோம். 

 

பிறகு நாம் சென்றது பர்மாவிற்கு. நாம் கொல்கத்தாவில் இருந்து, பிரிடிஷாருடன் 1826-ல் ஆங்கிலோ-பர்மா போர் நடந்தபோது இந்தியப் பணியாளர்கள் மற்றும் இராணுவத்தினருடன் இங்கிலாந்தின் ஆதிக்கத்திற்கு உட்பட்ட பகுதிகளை நோக்கிச் சென்றோம். பர்மாவை நாம் அரிசியின் தொட்டில் என்றே சொல்லலாம். மேற்கத்திய நாடுகள் ஆசியாவின் வளங்களை குறிவைத்து வர ஆரம்பித்தனர். அவர்களின் தேவையோ வளங்கள். ஆனால் அவர்களுக்கு முதலீடு செய்யப் பயம். அதனால் அவர்கள் நம்மை இடை ஈட்டாளர்களாக வைத்துக் கொண்டார்கள். 1869ல் திறக்கப்பட்ட சூயெஸ் கால்வாய் பல விதமான வணிக வாய்ப்புகளுக்குத் திறவு கோலாக அமைந்தது. அதற்கு முன்பெல்லாம் மேற்கத்திய நாடுகளுக்குச் செல்வது என்றால் குறைந்தது 6 முதல் 8 மாதங்கள் வரை ஆகும்.  சூயெஸ் திறப்பு, பயண நாட்களைப் பாதிக்கும் மேலாகக் குறைத்தது மற்றும் வர்த்தக வாய்ப்புகளையும் கூட்டியது. 1869ல் கொண்டு வரப்பட்ட பர்மாவின் நிலங்கள் சட்டமும் நமக்கு நல்ல வாய்புகளை உருவாக்கி தந்தது. நிலங்களை ஈடாக வைத்து வட்டித் தொழில் விரிவடைந்தது. இது பல செட்டியார்களை பர்மாவின் பக்கம் திருப்பியது. 1930 ஆம் வருடத்திய கணக்குப் படி, 2000க்கும் மேலான செட்டியார் கடைகள் பர்மாவில் இருந்தன. சிறிய ஊர்களிலும் கூடக் கடைகள் இருந்தன. அதிகமான கடைகள் ஐராவதி ஆற்றின் பாசன மற்றும் காட்டுப் பகுதியிலும், ரங்கூனிலும் இருந்தன. பர்மாவின் தோட்டங்களுக்கும் தொழிற்சாலைகளுக்கும் புத்துணர்வு அளித்து வளர்த்தது நமது சமூகமே. விவசாயப் பொருளாதராத்திற்கும், மேற்கத்திய வங்கிகளுக்கும் ஒரு பாலமாக திகழ்ந்து வந்தோம். 1930 ல் நடந்த Burma Provincial Banking Enquiry அறிக்கையில் நம் கடைகளைப் பொறுத்தவரை நிலையான வணிக நேரமோ, விடுமுறை நாட்கள் என்றோ இல்லை. எல்லா நாட்களும், எல்லா நேரமுமே வணிக நேரம் தான். பங்குனி உத்திரம், தைப்பூசம் மற்றும் செட்டியார்களின் பண்டிகைகளைத் தவிர மற்ற நாட்கள் எல்லாமே வேலை நாட்கள் தான். அதனால் பணம் கொடுத்தவர் வாங்குவதற்கும், கடன் தேவைப் படுபவர் பெறுவதற்கும் எந்த நேரம் வேண்டுமானாலும் செல்லலாம் என்ற நிலை இருந்தது. இதுவும் பொருளாதரத்தை முன்னேற்ற உதவியது. 

 

இதைத் தொடர்ந்து பிரிட்டனின் காலனியாதிக்கத்தில் இருந்த மலாயா, சிங்கப்பூர், இந்தோனேசியா, தாய்லாந்து மற்றும் பிரான்ஸின் காலனியாதிக்கத்தில் இருந்த வியட்நாம், லாவோஸ், கம்போடியாவிற்கு, மேற்கத்திய வங்கிகளின் துணையோடும் அரசாங்கத்தின் துணையோடும் சென்றோம் என்றால் மிகையில்லை. இங்கு நாம் விவசாயத்திற்கு மட்டும் இல்லாது டின், ரப்பர், மண்ணிற்குக் கிழே இருக்கும் கனிம வளத்தை எடுக்கும் தொழிற்சாலைக்கும் நிதியுதவி செய்துள்ளோம். வட்டி விகிதங்களையும் குறுகிய காலத்திற்கு என்றும், நீண்ட காலத்திற்கும் என்றும், இடைக் காலத்திற்கு என்றும் பிரித்துக் கொடுத்துள்ளோம். பொருள் மற்றும் நிலத்திற்கு ஈடாக என்றால் ஒரு வட்டி, எதுவேயில்லாமல் நம்பிக்கையின் பேரில் கொடுப்பது என்றால் ஒரு வட்டி என்று பல விதங்களில் இன்றைய வங்கிகளைப் போல் செயல்பட்டு வந்தோம். தொழிலின் மேல் நம்மவர்கள் வைத்த நம்பிக்கை, நமது திறமை, மற்றும் ஒற்றுமையே நம்மவர்களின் வெற்றிக்கு முக்கியமான காரணம். எண்ணிகையில் நாம் சிறியவர்களாக இருந்தாலும், நமது எண்ணங்களில் நாம் பெரியவர்கள். செட்டி வட்டி என்றே ஓன்று உள்ளது. இது அவரவர், தீர்மானிப்பது அல்ல. எல்லோருக்கும் பொதுவான ஒரு இடத்தில் கூடி, சூழ்நிலைகளைப் பற்றி விவாதித்து, சேர்ந்து ஒருமனதாக முடிவெடுப்பார்கள். 

 

வெளிநாடுகளுக்குச் சென்ற செட்டியார்கள் அனைவருமே, பழங்காலத்தைப் போன்று தனது பெண்டு, பிள்ளைகளை அழைத்துக்கொண்டு குடும்பமாகச் செல்லவில்லை. எல்லோருமே, தனித் தனியாகத் தான் சென்றார்கள். சொல்லிக்கொண்டு, வாய்க்கரிசி வாங்கிக் கொண்டு, திரும்பி வருவோமோ, அல்லது வரமாட்டோமோ என்று தான் சென்றார்கள். செட்டிக் கப்பலுக்கு செந்தூரன் துணை, என்பதே தாரக மந்திரம். அதனால் தொழிலே முதல் என்று வாழ்ந்தார்கள். வந்த வருமானத்தில் ஒரு பகுதியைக் கோவிலுக்கும், நமது சமூகம் சார்ந்த ஊர்களின் சமூக முன்னேற்றத்திற்காகவும் செலவழித்து வந்தனர். செட்டியார்கள் கோட்டை கோட்டையாய் வீடு கட்டியதும் இந்தச் சமயத்தில் தான். பர்மா தேக்கு, இத்தாலியன் மார்பிள், ரங்கூன் மாப்பிள்ளை சீப்பு, கண்ணாடி, பீங்கான் அப்பப்பா..... எத்தனை.... எத்தனை.... சொல்லிக்கொண்டே செல்லலாம்.

 

பர்மா தேக்கு இந்திய வந்த கதையே ஒரு சுவாரசியம் தான்..... ஐராவதி நதிப்பகுதியை வளமான விவசாயப் பகுதியாக மாற்ற வேண்டும். அப்பொழுது அங்கு இருந்த நல்ல தரமான தேக்கு மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டன. நாம் அதை அப்படியே ஐராவதி நதியில் போட்டு, நதி கடலில் சேரும் இடத்தில் வந்து நாகப்பட்டினம் அல்லது தொண்டி செல்லும் கப்பலின் பின் பகுதியில் விலாசம் சேர்த்து அனுப்பி விடுவோம். கடலில் உள்ளே நீரோட்டம் என்று ஓன்று உண்டு. காற்றின் திசைக்கேற்ப வருடத்தில் சிலகாலம் ஒரே திசையை நோக்கிச் செல்லும். அந்தப் படகும் அவ்வாறே செல்லும். தண்ணீரில் செல்வதால், மரத்தின் கணம் படகை ஒன்றும் செய்யாது. மேலும், நீரோட்டத்தின் போக்கில் செல்வதால், சென்றடைய வேண்டிய இடத்தைச் சரியாகச் சென்றடையும். தமிழகம் வந்த பிறகு, அனுப்பியவரின் உறவினர் வந்து அதை எடுத்துச் சென்று, வீடுகளுக்கும், மரச் சாமான்கள் செய்யவும் உபயோகப்படுத்திக் கொண்டனர். அவ்வாறு வந்தது தான் இன்றைய செட்டிநாட்டுப் பகுதிகளில் உள்ளவை. 

 

இவ்வாறு சென்று கொண்டிருந்த வேளையில் தான், எதிர்பார்க்காத மூன்று பெரிய  விஷயங்கள் நம்மை ஆட்டம் கொள்ளச் செய்தன. ஓன்று, காலனியாதிக்கத்தில் இருந்த நாடுகளில் சுதந்திர வேட்கை பரவியது. எல்லா நாடுகளும் சுதந்திரம் கேட்டன. இரண்டாவது, 1925ல் பிரபலமான அன்றைய மெட்ராஸில் இருந்த செட்டியார் வங்கி திவாலானது. மூன்றாவது, பொருளாதார மந்த நிலை. அமெரிக்கா நாட்டின் பங்குச்சந்தை வீழ்ச்சியின் காரணமாக ஒரு விதமான பொருளாதார மந்த நிலை 1929ல் அந்நாட்டில் தொடங்கியது. 

 

சுதந்திர வேட்கையின் காரணமாக அந்தந்த நாட்டு மக்கள் வெளி நாட்டினர் அனைவரையுமே ஆதிக்கச் சக்தியாக பார்க்கத் துவங்கினர். மேலும், நம் இனத்தவர் அனைவருமே, மிகச் சிலரைத் தவிர, ஆண்கள் மட்டுமே வியாபாரத்திற்குச் செல்வதை வழக்கமாய் கொண்டிருந்தோம். குடும்பமாக வாழவில்லை. வரும் இலாபத்தையும் முழுவதுமாக, நமது ஊருக்கே கொண்டு சென்றோம். கோவில்களையும், சிறு சிறு தர்மங்களையும் தவிர நாம் அனைத்தையுமே நமது ஊருக்குக் கொண்டு வந்தோம். நமது ஊரில் தர்மங்களை நன்றாக எல்லோருக்கும் செய்தோம். ஆனால் பிழைக்கச் சென்ற இடத்தில் பெரிதாகச் செய்யவில்லை. இதனால் தானோ என்னோவோ, நம்மை ஆதிக்கச் சக்தியாகக் காணத் துவங்கி விட்டனர். 

 

1925ல் திவாலான வங்கியின் காரணமாக மேற்கத்திய வங்கிகள் செட்டியார்களுக்குக் கடன் கொடுப்பதை நிறுத்தின. வங்கி திவலானதற்க்கு நிறைய காரணங்கள் சொல்லப்பட்டன. மேற்கத்திய வங்கிகளும், இதற்கு ஒரு காரணம். இது நம்மேல் மற்றவர்களுக்கு இருந்த நம்பிக்கையை இழக்கச் செய்தது. ஆனால், இது நம்மைப் பெரிதாகத் தாக்கவில்லை. இலங்கையில் மட்டுமே இதனால் பாதிப்பு இருந்தது. 

 

பொருளாதார மந்த நிலையால், பொருள்களின் விலைகள் சரிந்தன. ஏற்றுமதி குறைந்ததால் பொருள்கள் தேங்கின. கடன் வங்கியவர்களால் கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியவில்லை. இதனால் கடனுக்கு ஈடாக கொடுத்த அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் எல்லாம் செட்டியார்கள் வசம் வந்தன. அதை விற்கவும் முடியவில்லை, அதை வைத்துக்கொண்டு என்ன செய்வது என்றும் தெரியவில்லை. ஏனென்றால் நாம் செய்ததோ நிதி சார்ந்த தொழில். நமது தேவையும் நிதி மட்டுமே. மேலும் நாம் வணிகம் செய்யத் தனியாக சென்றவர்கள். நாயர் (Nair, 2013) என்ற ஆராய்ச்சியாளரின் கருத்துப்படி, நமது முதலீடு பின்வரும் நாடுகளில்....

 

நாடு

முதலீடு

பர்மா

62.50 %

மலேயா & சிங்கப்பூர் 

21.00 %

இலங்கை

11.50 %

மெட்ராஸ் மாகாணம்

00.80%

மற்றவை

04.20 %

மொத்தம்

100.00%

  

பர்மாவில் நமது முதலீடு 62.50 சதவீதம் என்றால் யோசித்துப் பாருங்கள். அந்த நாடே செட்டியார்களுடயது என்றே சொல்லலாம். கடனைத் திருப்பிச் செலுத்த முடியாத காரணத்தால் அந்தக் கடனுக்கு ஈடாக நிலங்கள் எல்லாம், செட்டியார் வசம் வந்துவிட்டன. ஒரு சிலர் செட்டியார்கள் அநியாய வட்டி வாங்கியதாகவும் ஆடிக்குத் தை ஒரு வருடம் என்று கணக்கிட்டு வட்டி வாங்கியதாகவும் சொல்வார்கள். ஆனால் அது தவறு.  எந்தவொரு ஆணைய அறிக்கையின் படியும் அது ஆவணப்படுத்தப்படவில்லை. ஒரு சிலர் 1930க்குப் பிறகு அதிக வட்டி வாங்கியதாகக் கூறப்படுகிறது. இது பொருளாதார மந்த நிலையினால் வந்த வினை, மற்றும் நம்முடன் போட்டி போட இயலாத இயலாமையால் சீனர்கள் பர்மியர்கள் மனதில் தூவிய நச்சு விதை.

 

இதே சமயத்தில் தான் (1930) இந்தோ பர்மீஸ் கலவரம் மூண்டது. செட்டியார்களையும் அவர்கள் இந்தியர்களாகப் பார்த்தனர். அப்பொழுது நிறைய சட்டங்கள் இயற்றப்பட்டு நமது வணிகம் சுருக்கப்பட்டது. வட்டி மற்றும் கடன்கள், அரசாங்கம் நிர்ணயித்த விலைக்கே கொடுக்க வேண்டும். 1938 ஆம் வருடம், நன்றாக விளைகின்ற நிலங்கள் அனைத்தும் நமது பகுதிகளில் இருந்த போதும், புதிதாகக் கடன் வழங்க வழி இல்லை என்ற நிலை.

 

1932ல் இலங்கை அரசாங்கம் வருமான வரிச் சட்டத்தில் (Income Tax Ordinanace, 1932) பல்வேறு வரிகளைச் செட்டியார் வணிகத்தின் மீது கொண்டு வந்தனர். பணப்பரிமாற்ற சட்டத்தின் மூலம், பல்வேறு நிபந்தனைகளை விதித்து அந்த வணிகத்தையும் இலங்கை வங்கியின் கீழ் கொண்டு வந்தனர். அதனால் நிதி வணிகம் செய்ய இயலாத நிலைக்குத் தள்ளப்பட்டோம். செட்டியார்கள் இலங்கைக்குச் சென்றது வணிகம் செய்யவே தவிர அங்கு வீடு வாசல் வாங்கிக் கொண்டு இருக்க வேண்டும் என்பதற்கு அல்ல. 1925 முதல் இந்தியாவில் இருந்து இலங்கைக்குச் சென்ற நிதி குறைந்து, இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு அதிக அளவில் கொண்டு வரப்பட்டது. 

 

இதே காலகட்டத்தில் தான், காலனியாதிக்கத்தில் இருந்த எல்லா நாடுகளிலும், வங்கிப் பணிகளை ஆராய ஒரு ஆணையம் உருவாக்கப்பட்டது. அதன் பரிந்துரைகளின் பேரில் மத்திய வங்கிகள் உருவாக்கப்பட்டு, நிதி சம்பந்தமான அனைத்துப் பணிகளும் அதன் கீழ் சென்றன. 

 

ஒரு சில ஆணையங்கள் 

 

Madras Provicial Banking Committee Enquiry – 1929-30

Ceylon Banking Commission – 1934

Burma provincial Banking Enquiry – 1930 and so on. 

 

இதையெல்லாம் தவிர, 1939 முதல் 1942 வரை நடந்த இரண்டாவது உலக யுத்த சமயத்தில் பர்மா காலனியாதிக்கத்திலிருந்து ஜப்பானின் கைக்குச் சென்றது. இந்தியர்கள் எல்லாம் கிடைத்ததை எடுத்துக் கொண்டு கால் நடையாகவோ, கால் நடைகளின் உதவியுடனோ திரும்பினர். 

 

ஆனால், மற்ற நாடுகளில் இருந்து நாம் அவ்வாறு வெளியேறவில்லை. நிதி சார்ந்த தொழிலில் வந்த சில நடைமுறைச் சிக்கலினால், நாம் அத்தொழிலைக் குறைத்துக் கொண்டு வேலைக்குச் செல்ல ஆரம்பித்தோம். மற்ற புதிய தொழில்களைத் தொடங்க ஆரம்பித்தோம். முருகப்பா குழுமம், செட்டிநாடு குழுமம் உள்ளிட்ட ஒரு சில செட்டியார்கள் இதை முன்பே கவனித்து, வெள்ளையர்கள் தங்கள் சொத்துகளை விற்பதை ஊன்றிக் கவனித்து, முன் ஜாக்கிரதையாக மற்ற நாடுகளில் புதிதாக முதலீடு செய்யாமல், அங்கிருந்து வரும் இலாபப் பணத்தை அப்படியே இந்தியாவில் முதலீடு செய்தனர். 

 

இவ்வாறு நாம் வர்த்தக சமுகத்திலிருந்து, நிதி சமுதாயமாக மாறி, இப்பொழுது அதிகமாக வேலைக்குச் செல்பவர்களாக மாறி விட்டோம். மீண்டும் நாம் ஒரு வர்த்தக சமுதாயமாக, கொண்டு விற்று வரும் சமுகமாக, புதிய சூழ்நிலைகளுக்கேற்ப தொழில் செய்யும் வர்க்கமாக மாற வேண்டும் என்பதே நம் குறிக்கோள்.

 

 

Drawings by my Daughter