சமதர்மம், சமத்துவம், சகோதரத்துவம் மற்றும் பெண் விடுதலை - 2
சாதிப் பாகுபாடை சங்க காலப் புலவர்கள் பலர் கடிந்து பாடிச் சென்றுள்ளனர். ஆனால், நாம் அதை மறந்து விட்டு பெரியாரை வைத்து அரசியல் செய்கிறோம் என்றே எனக்கு தோன்றுகிறது.
திருவள்ளுவரோ
"பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்" என்று கூறி பிறக்கும் போது உயிர்கள் எல்லாம் ஒன்றே என்று சொல்லியுள்ளார். மேலும் மற்றொரு குறளில்
"பெருமைக்கு மேனைச் சிறுமைக்குந் தத்தங்
கருமமே கட்டளைக் கல்" என்று சொல்லியுள்ளார். இதையே நாலடியார் தனது 195 வது பாடலில்
நல்ல குலமென்றும் தீய குலமென்றும்
சொல்லளவு அல்லால் பொருளில்லை; - தொல் சிறப்பின்
ஒண்பொருள் ஒன்றோ தவம்கல்வி ஆள்வினை
என்றிவற்றான் ஆகும் குலம்.
நல்ல குலம்' என்றும் 'தீய குலம்' என்றும் கூறுவதெல்லாம் வெறும் சொல்லளவே ஆகும். அப்படிக் கூறுவதில் ஒரு பொருளும் இல்லை. பழமையான சிறப்புடைய மிக்க பொருளும், தவமும், கல்வியும், முயற்சியும் என்னும் இந்த நான்கினால் நல்ல குலம் அமைவதாகும். பிறப்பினால் கீழ் சாதி மேல் சாதி என்று இல்லை. செய்யும் செயலினாலும் அறிவினாலுமே உருவாகிறது என்று சொல்லி சென்றுள்ளார்.
சிவவாக்கியர் என்ற சித்தர் தனது பாடலில்
நட்ட கல்லை சுற்றி வந்து நாலு புட்பம் சாத்தியே
சுற்றி வந்து மொணமொணன்று சொல்லும் மந்திரம் ஏதடா
நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
சுட்ட சட்டி சட்டுவம் கறிச் சுவை அறியுமோ
இதில் சிவவாக்கியர் உருவ வழிபாட்டை எதிர்க்கிறார். நட்ட கல் பேசப்போவது இல்லை. அதை சுற்றி வந்து புட்பம் இட்டு மந்திரங்கள் சொல்லுவதால் ஒன்றும் பயனில்லை. ஏனென்றால் நாதன் நம் உள் இருக்கிறார். சமைத்த சட்டிக்கும் கரண்டிக்கும் சுவை தெரியாது. அதுபோல் கல்லை வணங்குவதால் பயன் ஒன்றும் இல்லை. ஆனால் இதையே சிலர் வேறு மாதிரியும் பொருள் கொள்ள சொல்கின்றனர். பேசுமோ என்பதை பேசும் ஓம் என்றும் அறியுமோ என்பதை அறியும் ஓம் என்றும் மாற்றினால் இந்த பாடல் வேறு பொருள் தரும்.
மேலும் அவர் ஒரே இனமாக கொள்ள வேண்டிய மனித இனத்தை, சாதிகள் மூலம் வேறுபடுத்தி பார்ப்பதை கூறும் போது
சாதி ஆவது ஏதடா சலந்திரண்ட நீரெல்லாம்
பூத வாசல் ஒன்றலோ பூதம் ஐந்தும் ஒன்றலோ
காதில் வாளி காரை கம்பி பாடகம் பொன் ஒன்றலோ
சாதி பேதம் ஓதுகின்ற தன்மை என்ன தன்மையோ
என்று கூறுகிறார். சாதி ஆவது என்றாள் என்ன? இவவுலகம் முழுமையும் நீரால் நிரம்பியுள்ளது. அதுபோலவே உயிரும் நீராகத்தான் உள்ளது. பஞ்ச பூதமும் ஒன்றுதான். காதில் கைகளில் அணியும் நகைகள் எல்லாம் தங்கமே.... அப்படியிருக்க ஒரே இனமான மனித இனத்தை சாதி பேசி பிரிப்பது தன்மையானது அல்ல.
மற்றும் தீண்டாமை பற்றியும் சிவவாக்கியர் கூறியுள்ளார்.
பறைச்சியாவது ஏதடா, பணத்தியாவது ஏதடா
இறைச்சி தோல் எலும்பிலும் இலக்கமிட்டு இருக்குதோ
பறைச்சி போகம் வேறதோ மனத்தி போகம் வேறதோ
பறைச்சியும் பணத்தியும் பகுத்து பாரும் உம்முளே
என்று பயங்கரமாக சீறுகிறார்.
திருமூலர் "ஒன்றே குளம் ஒருவனே தேவன்" என்று எழுதினார். பின்னாளில் இது ஒரு திராவிட கொள்கையாக மாறியது. "என்னை நன்றாக இறைவன் படைத்தனன் தன்னை நன்றாக தமிழ் செய்யுமாறு" என்று தமிழையும் தூக்கி நிறுத்தி உள்ளார். ஆனால் இங்கும் பெரியார் வேறுபடுகிறார். இந்தி வேண்டாம் என்று மும்மொழிக் கொள்கையை எதிர்த்ததில் பெரியாருக்கு முதலில் சம்மதம் இல்லை. முதலில் மறுத்து விட்டு பின் எதிர்த்தார். அதற்கு அவரின் பதில், தமிழ் மட்டும் படிப்பதால், தமிழர்களுக்கு அறிவியல் சம்பந்தமாக பேசவோ, பொருளாதாரத்தில் முன்னேற்றம் காணவோ முடியாது என்பது. ஒரு வகையில் அவரின் கூற்று ஒத்துக் கொள்ளப்படவேண்டியதே.
கீழ் வரும் பாடலில், பார்ப்பன எதிர்ப்பையும் அன்றே பாடியுள்ளார், திருமூலர்.
பேர் கொண்ட பார்ப்பான் பிரான் தன்னை அர்ச்சித்தால்
போர் கொண்ட நாட்டுக்கு பொல்லா வியாதியாம்
பார் கொண்ட நாட்டுக்கு பஞ்சமும் ஆம் என்றே
சீர் கொண்ட நந்தி தெரிந்து உரைத்தானே
மேலும் ஒரு பாடலில் நடமாடும் மனித தெய்வத்திற்கு செய்யும் தொண்டு படமாடும் தெய்வத்திற்கு செய்தது போல் ஆகும் என்று அழகாக விலகுகிறார்.
படமாடக் கோயில் பகவற்கு ஓன்று ஈயின்
நடமாடக் கோயில் நம்பர்க்கு ஆங்கு ஆகா
நடமாடக் கோயில் நம்பர்க்கு ஓன்று ஈயின்
படமாக் கோயில் பகவர்க்கு அது ஆமே
இதையே தான் பெரியாரைப் பின்பற்றுபவர்கள் ஏன் கோயிலுக்கு சென்று 15 லிட்டர், 20 லிட்டர் பால் ஊத்துறீங்க, அதுக்கு பசிக்கிற ஆளுங்களுக்கு கொடுக்கலாமே என்று கூறுகின்றனர். ஆனால் இவற்றை திருமூலர் என்றோ சொல்லி விட்டார்.
மேலும், ஒவ்வையார் தனது பாடலில்
"சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்
நீதி வழுவா நெறிமுறையின் மேதனியில்
இட்டார் பெரியோர், இடாதார் இழிகுலத்தோர்
பட்டாங்கில் உள்ளபடி" என்று கூறிச் சென்றுள்ளார்.
தொடரும்
No comments:
Post a Comment