Friday, March 25, 2022

சமதர்மம், சமத்துவம், சகோதரத்துவம் மற்றும் பெண் விடுதலை - 1

 சமதர்மம், சமத்துவம், சகோதரத்துவம் மற்றும் பெண் விடுதலை - 1


பெண் விடுதலை வேண்டும். சாதி வெறி தணிய வேண்டும். மத அரசியல் வேண்டாம். ஆனால் இவை எல்லாம் இப்பொழுது அதிகமாகத்தான் உள்ளது. இலக்கியம் என்ற சொல்லே நன்றாக உள்ளது. ஆனால் இப்பொழுது நாம் இந்து இலக்கியம், தலித் இலக்கியம், கிறித்துவ எழுத்துகள்,என்று ஏன் பிரிக்க வேண்டும். இந்த வருட புத்தக திருவிழாவில் கூட சில கருத்துக்களைக் கேட்க முடிந்தது. தலித் இலக்கிய வெளியீடுகள், திராவிட இலக்கிய வெளியீடுகள் என்று..... நாம் வேண்டாம் என்று சொல்லும் விடயங்களைத் தான் இலக்கியம் என்ற பெயரில் நிறைய வருகின்றனவா. இதற்க்கு மேல் ஒருவர் சென்று இரவிக்குமார் படமெடுத்தால் திரைப்படம் அதுவே ரஞ்சித் எடுத்தால் தலித் திரைப்படம். ஜெயமோகன் எழுதினால் இலக்கியம் அதுவே பெருமாள் முருகன் எழுதினால் தலித் இலக்கியம் (ஒரு புலனக் குழுவில் படித்தது). எழுத்தாளர் இமயம் அவர்கள், ஒரு நிகழ்ச்சியில் பேசும் பொது, தலித்துகளின் வாழ்க்கையை ஓறு தலித் எழுதினால் அது தலித் இலக்கியம் என்றும், அதையே வேறு ஒருவர் எழுதினால் இலக்கியம் என்று அழைக்கும் போக்கு தவறானது என்றார். தலித் எழுத்து என்றோ தலித் எழுத்தாளர் என்றோ பிரிப்பது சரியல்ல என்பது அவருடைய வாதம்.


மேலும் திருவள்ளுவர் கருத்து முக்கியமா? இல்லை அவருடைய மதம் மற்றும் ஜாதி முக்கியமா... அவருடைய கருத்துக்கள் யுகங்கள் தோறும் மாறி மாறி பல புதிய சிந்தனைகளை மக்களுக்கு கொடுத்துக் கொண்டிருகின்றன. நாம் அவற்றை எல்லாம் விட்டுவிட்டு அவருடைய மதத்தைப் பற்றி சிந்திப்பது எவ்வளவு ஒரு சிறு பிள்ளைத்தனம். அனைத்திலும் அரசியல் தேவையா? ஆனால் இப்பொழுது அனைத்திலும் அரசியலை காண முடிகிறது. மன்னர் ஆட்சியில் அனைத்திலும் அரசியல் தலையீடு இருப்பதை காண முடியும். ஆனால் இப்பொழுது மக்களாட்சி. அரசியல் தலையீடு எல்லாவற்றிலும் தேவையில்லை. அரசியலைப் பற்றி லெனின் சொன்னது "அதிகாரத்தைக் கைபற்றுவது தான் முக்கியமான விடயம்" 


இன்னும் சில பேர் ஒரு படி மேலே சென்று நான் ஒரு திராவிடன், பெரியாரைப் பின் பற்றுகிறேன் என்று கருத்துக்களை கூற முற்படுகின்றனர். ஆனால், பெரியாரின் சிந்தனைகளை அவருக்கு முன்பேயும் அவர் காலத்திலும் பலபேர் சொல்லி சென்று இருக்கின்றனர். அவர்களில் சிலர், புத்தர், கபீர், இராமானுஜர், திருவள்ளுவர், சிவவாக்கியர், அயோத்திதாசர், அம்பேத்கர், விவேகனந்தர், அய்யாவழி நாராயணர், காந்தி, வள்ளலார் (இராமலிங்க அடிகளார்), போன்றவார்களை கூறலாம். பெரியாரும் இந்த வரிசையில் ஒருவர் தான்.


புத்தர் ஒரு வைதீக எதிர்பாளர். இவரின் இயற்பெயர் சித்தார்த்த கௌதமர். சாக்கிய முனி என்றும் அழைக்கப்பட்டார், வைதீகத்தில் உள்ள சாதி மதம், சடங்குகளைக் கடுமையாக எதிர்த்தவர். மேலும் ஆசையே துன்பத்திற்கு காரணம். தான் தனது என்ற நிலையில் இருந்து விலகினால் ஞானம் பெறலாம் இதுவே விடுதலை அல்லது நிர்வான நிலை. புத்தரின் சமகால மதங்களாக நாம் சமணத்தையும், வைதீக சமயத்தையும் எடுத்துக் கொள்ளலாம். சமணம், வாழ்கை இல்லல்கள் நிறைந்தது என்றது. ஆனால் புத்தமோ அதற்கு தீர்வு தந்தது. சமண புத்த சமயங்களின் வளர்ச்சிக்கு ஆன்மீக அமைதியின்மையே காரணம். வைதீகம் சடங்குகள் நிறைந்ததாக இருந்தது. இது சாதாரண மக்களின் இன்னல்களை போக்குவதாக இல்லை. மக்களின் இன்னல்களுக்கு வைதீகம் சில சடங்குகளையும் வேள்விகளையுமே முன் வைத்தது. அது போன்ற சடங்குகளை சாமானியர்களால் செய்ய இயலவில்லை. இதன் உணமைகளையும் வாழ்க்கைத் தத்துவங்களையும் விளக்க வந்தவையே சமணமும் பௌத்தமும். வைதீகத்தில் கூறப்பட்டுள்ள தத்துவங்கள் எளிய மக்களுக்கு புரியும் படியாக இல்லை. எளிய மக்கள் மோட்சத்திற்கு செல்லவும் வாழ்க்கையை புரிந்து கொள்ளவும், தத்துவங்களை தெரிந்து கொள்ளவும் வேறு வழிகள் தேவைப்பட்டன. மேலும் இவைகள் மக்களுக்கு புரியும் மொழியில் இருக்க வேண்டும். இந்த தேவைகளை பூர்த்தி செய்ய வந்ததே சமணரான மகாவீரரும், புத்தரான சித்தார்த்தரும். இவ்விரு சமயமும் வணிகச் சமுதயத்தாலும் அவர்களது பங்களிப்பினாலும் வளர்ச்சி கண்டது. மகாவீரரும் புத்தரும் ஆளும் வர்கத்தில் பிறந்தவர்கள். வர்ணாசிரம தர்மத்தில் பிராமணர்களுக்கும் சத்திரியர்களுக்கும் கிடைத்த இடம் வைசியர்களான வணிகர்களுக்கு கிடைக்க வில்லை. ஆனால் வியாபாரத்தின் மூலம் வணிகர்களின் பொருளாதார நிலை மேம்பட்டு இருந்தாலும், வணிகர்கள் மூலமாக அதிக வரி வருவாய் அரசர்களுக்கு கிடைத்தாலும், சமூகத்தில் மூன்றாம் பிரஜையாக கருதப்பட்டனர். கீழ் சாதியினருக்கு பல சலுகைகள் மறுக்கப்பட்டன. எல்லா சலுகைகளும், அரசர்களுக்கும் பிராமணர்களுக்குமே கிடைத்தன. எனவே வணிகர்களும், மற்றவர்களும் சமணத்தையும் பௌத்தத்தையும் ஆதரிக்க தொடங்கினர். புத்தர் கடவுளைப் பற்றி கவலைப்பட்டவர் இல்லை. கடவுளைப் பற்றியோ வைதீகத்தைப் பற்றியோ ஏதாவது கேட்டால் அமைதியாக இருப்பார் பதில் சொல்லமாட்டார். ஆனால் மனித இன்னல்களுக்கான காரணத்தைப்பற்றியும் அதிலிருந்து விடுபடுவது பற்றியும் மிகத் தெளிவான போதனைகளை வழங்கி விட்டு சென்றார். பெரியாரிடம் அது இல்லை. அவர் இன்னல்களுக்காக குரல் கொடுத்தார் மக்களைச் சேர்த்து போராடினார். ஆனால், அந்த காலகட்டத்திற்கு தேவையான தெளிவான வழிகாட்டுதல் இல்லாமல் விட்டுச் சென்று விட்டார்.


இப்பொழுது எதை எடுத்தாலும், பெரியாரை மேற்கோள் காட்டுவது என்ற ஒரு தவறான போக்கு வந்து விட்டது. பெரியார் ஒரு கருத்தை ஏன் சொன்னார், எதற்காக சொன்னார், அதன் விளைவு என்ன? என்று தெரியாமல், நான் பெரியாரை படித்தேன் அவர் இவ்வாறு சொல்லியிருக்கிறார் என்று சில வரிகளைக் கொண்டு விளக்க முற்படுகின்றனன்ர். இது ஒரு தவறான போக்கு. அது மாற வேண்டும். பெரியாரின் மிகப் பெரிய கொள்கை, எதையுமே உயர்த்தி பிடிக்காதே. தமிழை உயர்த்தினால், உடனே அது ஒரு காட்டு மிராண்டி மொழி என்றார். தமிழ்த்தாய்க்கு சிலை வைப்பதை கண்டித்தார். கண்ணகிக்கு சிலை வைத்து அதை பாராட்டிய பொழுது கடுமையாக நடந்து கொண்டார். கடவுள் வழிபாடு என்று ஒரு கூட்டம் சென்ற போது அதை கண்டித்தார். கடவுளை கற்பித்தவன் முட்டாள் என்றார். புத்தர் கூட கடவுள் இல்லை என்று தான் கூறினார். ஆனால், புத்தமதம் வளர்ந்து அது ஒரு நிறுவனமயப் படுத்திய போது புத்தரே கடவுளானார். குரு என்ற நிலையில் இருந்து கடவுள் என்ற நிலைக்கு தள்ளப்பட்டார்.


பெரியார் பெண் விடுதலை பற்றி பேசினார், கட்டுபாடற்ற பாலுணர்வு பற்றி பேசினார், பாலுணர்வு சுதந்திரம் பற்றி பேசினார் என்று தனக்கு தேவையான சில கொள்கைகளை மட்டும் எடுத்துப் பேசும் கூட்டம் ஓன்று உருவாக்கி உள்ளது. இதனால், வரப்போகும் பாதிப்பு என்பது மிகப் பெரியது. முக்கியமாக கற்பு என்பது தமிழ்ப் பண்பாடா? என்றால் இல்லை. காதலும் களவு மனமும் தமிழ்ப் பண்பாடு. ஆணுக்கும் பெண்ணுக்கும் காதல் பிறக்க ஒரு விதமான ஈர்ப்பு இருந்தால் மட்டும் போதாது. உண்மையான அன்பும், புரிதலும், நம்பிக்கையும் வேண்டும். இல்லையென்றால் அது காதல் அல்ல. இவை மூன்றும் இல்லையென்றால் அது, கட்டுபாடற்ற பாலுணர்வு கொள்கை அல்லது பாலியல் புரட்சி ஆகும். இந்த மூன்றும் இல்லாத உறவு காதல் அல்ல அது தமிழ்ப் பண்பாடும் அல்ல. இந்த விடயங்களை இன்றைய தலைமுறையிடம் நாம் சரியாக கொண்டு செல்லாவிட்டால் நாம் பேசும் சமூக நீதி கேள்விக்குள்ளாக்கபடும். சமூக நீதி என்பது இட ஒதுக்கீடு மட்டுமே அல்ல. அதையும் தாண்டி. 


பெரியார் பெண்கள் மட்டுமே ஒழுக்க விதிகளுடன் வாழவேண்டும், ஆண்கள் எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்று இருந்த சமுதாயத்தில் சொன்ன கருத்துக்களை இப்பொழுது பொருத்திப் பார்ப்பது தவறு. பாரதியார் கூட, கற்பு என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் பொது என்றார். பெரியார் அவருடைய பாணியில், "கணவனைத் தவிர பெண் மற்ற ஆண்களுடன் உறவு வைத்துக் கொள்ள பெண்களுக்கு உரிமை வேண்டும்" என்றார். விசயங்களை மொத்தமாக படித்து புரிந்து கொள்ள வேண்டும். ஆனால் இப்பொழுது புதிதாக வந்த பெரியாரியவாதிகளும், போலி முற்போக்காளர்களும் பேசுவதைப் பார்த்தால், பயமாக இருக்கிறது. மீண்டும் நாம் காட்டு மிராண்டி வாழ்க்கைக்கு திரும்பி விட்டோமா என்று. பெரியார் கேட்டது என்னவென்றால் பெண்ணுக்கு வகுக்கப்பட்ட ஒழுக்க நெறி ஆணுக்கு ஏன் வகுப்படவில்லை. பெரியார் வகுக்கப்பட்ட ஒழுக்கத்தைதான் எதிர்த்தாரே ஒழிய சமுதாயத்தில் ஒழுக்கம் குறைந்து சீரழிய வேண்டும் என்று சொல்லவில்லை.

தொடரும்

No comments:

Post a Comment

சமதர்மம், சமத்துவம், சகோதரத்துவம் மற்றும் பெண் விடுதலை - 5

  சமதர்மம், சமத்துவம், சகோதரத்துவம் மற்றும் பெண் விடுதலை - 5 அண்ணல் அம்பேத்கர் சுதந்திர இந்தியாவிற்கு எழுதிய அரசியல் சாசனத்தில் தீண்டாமை மற்...