சமதர்மம், சமத்துவம், சகோதரத்துவம் மற்றும் பெண் விடுதலை - 5
அண்ணல் அம்பேத்கர் சுதந்திர இந்தியாவிற்கு எழுதிய அரசியல் சாசனத்தில் தீண்டாமை மற்றும் சாதி ஒழிய குறிப்பிட்ட வகுப்பாளர்களுக்கு இட ஒதுக்கீடு கொண்டு வந்தார். அவரின் எழுத்துப்படி அவர் சிறிது வருடங்களுக்கே பரிந்துரைத்தார். ஆனால் அவ்வப்பொழுது உள்ள அரசுகளும் அரசியல்வாதிகளும் சமதர்மம் சமத்துவம் காண்பதை விட்டுவிட்டு நேரத்திற்கு ஏற்ப சாதி மதங்களுக்கு சலுகைகள் வழங்கி மக்களை இன்னும் எமாற்றி வருகின்றனர். அம்பேத்கர் சொன்ன குறிப்பிட்ட காலமும் கழிந்து நாம் இன்னும் அவற்றை தூக்கி பிடித்துக் கொண்டு உள்ளோம். அவர்களை நாம் முன்னேற்ற பாதையில் அழைத்து செல்லாமல் அவர்களை இன்னும் இட ஒதுக்கீடுக்கு போராடும் சமுதாயமாகவும், குறைந்த மதிப்பெண்கள் வாங்கும் சமுதாயமாகவும், அவர்களுக்கென்று தனி பள்ளிகளும் கல்லூரிகளும் தொடங்கி அவார்களுக்கு சரியாக பாடம் நடத்தி சொல்லித்தராமல், அவர்களை மற்றவர்களுடன் சரி சமமாக நடத்தாமல், சரி சம வாய்ப்புகள் வழங்காமல், இன்னும் அவர்களை அமர்த்தியே வைத்துள்ளோம்.
பெரியார் அரசியல் போராட்டங்கள் மூலம் சாதிக்க முடியாது என்று நம்பினார். ஆனாலும் பெரியார் அரசியல்வாதியாக பல காலம் இருந்தவர்தான். ஆனால் அம்பேத்கரோ அரசியல் போராட்டங்கள் மூலம் தான் விடுதலை பெற முடியும் என்று நம்பியவர். இன்று நடக்கும் விசயங்களை கவனித்தாலே தெரியும், அரசியல் போராட்டங்கள் மூலம் தான் தாழ்த்தப்பட்டவர்களுக்கு வெற்றி கிடைத்திருக்கிறது. மேலும் ஆன்மிகம், தனி மனித ஒழுக்கம் இரண்டிற்கும் பெரியார் அதிக மதிப்பு அளிக்காமல் போனது ஒரு வருத்தத்திற்குரியது. இங்கு நாம் குறிப்பிட்ட பெரும்பான்மையானவர்கள் ஆன்மீகத்தின் மூலம் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள். தன்னை ஒரு உதாரணபுருஷனாக்கி வாழ்ந்து காண்பித்தார்கள்.
திராவிடத்தின் தந்தை பெரியார் என்றால் தமிழ் தேசத்தின் தந்தை அயோத்திதாசர் என்று கூறலாம். அம்பேத்கர் தீண்டாமை உருவான காலமாக கி பி 4ம் நூற்றாண்டை குறிபிடுகிறார். ஆனால் அயோத்திதாசரோ கல்வெட்டு ஆதாரங்கள் மற்றும் ஆவணங்களை கொண்டு தீண்டாமை பிற்கால சோழர் காலத்தில் தான் தோன்றியிருக்கக் கூடும் என்று கூறுகிறார். அதன் பின்னர், மொகலாய படையெடுப்பு, பின்னர் விஜய நகர பேரரசு, பாளையக்காரர்கள், காலனிய அரசுகள் போன்றவர்களின் ஆட்சியில் தான் தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றம் வந்தது. அம்பேத்கர் சொல்வது வாடா இந்தியாவில் சரியாக இருக்கும். இந்திய வரலாறு எழுதப்படும் போதே அது ஒரு வாடா இந்திய சிந்தனையுடன் தான் எழுதப்பட்டது. அதுவும் ஆங்கிலேய அதிகாரிகள் இந்தியாவை ஆளுவதற்காக எழுதப்பட்ட ஒரு வரலாறு. அதில் வேதங்களும், வேதக் கருத்துக்களும் தூக்கிப் பிடிக்கப்பட்டன. அசோகர் பல போராட்டங்களுக்கு பிறகே மன்னரானார். ஆனால் நாம் அதை வேறு மாதிரி எழுதி, இந்திய விடுதலைக்கு பிறகு, அவரை மகான் ஆக்கி விட்டோம்.
பெரியாருக்கு முன்பே பார்ப்பன எதிர்ப்பு, சுய மரியாதை, சமத்துவம், சகோதரத்துவம், தீண்டாமை ஒழிப்பு பற்றி பேசியவர். அம்பேத்கருக்கு முன்னரே, சாதிய கொடுமைகளிருந்து விடுதலை பெற புத்தமே தீர்வு என்று புத்தரை நோக்கி நகர்ந்த தீர்க்கதரிசி. 1881 ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது, தாழ்த்தப்ட்டோர் இந்துக்கள் அல்ல, மற்றாக பூர்வத் தமிழர் என்று பதிய கோரிக்கை வைத்தார். ஆதி தமிழர் மற்றும் ஆதி திராவிடர் அடையாளங்களை முன்வைத்தார். "திராவிட" என்ற அரசியல் சமூக பெயரை முதன் முதலில் உபயோகித்த பெருமை இவரையே சாரும். தீண்டத்தகாத இந்துக்கள் என்று இல்லை. அவர்கள் சாதியற்ற திராவிடர்கள் என்ற வாதத்தை முன் வைத்தார். 1892 ல் சென்னையில் நடந்த மகாஜனசபை மாநாட்டில் கலந்து கொண்டு, ஓடுப்பட்டோருக்கான உரிமைக்கும் ஆலய நுழைவுக்கும் குறள் கொடுத்தார். இந்த மாநாட்டிற்கு பின்னர் இலங்கை சென்று புத்த தீக்ஷை பெற்று பௌத்தத்திற்கு மாறினார். இவர் சாக்கிய பௌத்த சங்கத்தை தோற்றுவித்து புத்த மதம் பரப்பினார். சிந்தனைச்சிற்பி சிங்காரவேலரும் இவருடன் இணைந்து சாதியக் கொடுமைகளை எதிர்த்து போராடினார். . இவர் திராவிட மகாஜனசபை தொடங்கி நடத்திய போது, இவரின் மைத்துனர் ஆதி திராவிட மகாஜன சபை தொடங்கி ஆதிக்க சாதிக்களுக்கு எதிராக பலமாக போராடினார்.
திராவிட இயக்கங்கள் வந்த பிறகு அதிகாரம் ஒரு சாராரிடமிருந்து மற்றொரு சாரருக்கு மாறி உள்ளது என்பது உண்மை. ஆனால், சாதி மறைந்தது என்ற சொல்ல முடியாது. சாதி ஒழிய வேண்டும் என்பதை விட பிராமணர்கள், பார்ப்பான் அல்லது பிராமணீயம் ஒழிய வேண்டும் என்ற ஒற்றை சிந்தனைதான் வளர்ந்து வருகிறது என்ற சந்தேகமும் இல்லாமல் இல்லை. முன்னொரு காலத்தில் இருந்ததை விட இன்று மிக அதிகமான சாதிச் சங்கங்கள் வந்து விட்டன. சாதிக்கொரு கட்சியும் வந்து விட்டது. தேர்தல் நேரத்தில் இவர்களின் கூப்பாடுகள் தான் அதிகமாக உள்ளன.
ஆன்மீகத்தை பற்றி மார்க்ஸ் (Karl Marx) அவர்கள் கூறும் போது "அது மக்களுக்கான ஒரு போதை (opium of the people)" என்றார். பகுத்தறிவு என்பது, இந்திய தத்துவ மறபுகளில் பண்டைய காலம் தொட்டே உள்ளது. இப்பொழுது வந்த ஒரு தரிசன மரபு அல்ல. சாருவாகம், உலகாயுதம், சமணம், மீமாம்சம் என்று முன்பே உள்ளது. அப்பொழுது அரசியல் செய்பவர்கள் இந்திய தத்துவ மரபை கொச்சைப்படுத்துபவர்களாகவும் புரதான சிந்தனைகளை கேலி பண்ணி சிரிப்பவர்களாகவும், அதைபற்றி பேசுபவர்களை பழமைவாதிகள் என்று கருதுகின்ற போக்கு வளர்ந்து வருகிறது. மேலும் இந்திய சிந்தனை பரப்பு ஒரு காலாவதியான மரபு என்று திராவிட சிந்தனையாளர்களால் கருதப்படுகிறது. கிரேக்கத்தில் மட்டும் அல்ல, இந்தியாவிலும் பகுத்தறிவு கேள்வி கேட்கும் மரபு பண்டைய காலங்களிலே இருந்து வந்துள்ளது.
தத்துவம் என்ற சொல்லுக்கு உண்மை என்று பொருள். தத்துவ ஞானம் என்பது மெய்பொருள் அறிவது. ஒட்டுமொத்தமாக முழுமையான புரிதலுடம் பார்க்கும் மரபை தரிசனம் என்று சொல்லலாம். இதை தர்க்கபூர்வமாக கூற முற்பட்டால் தத்துவ தரிசனம் என்று திரு எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் கூறுவார்கள். மேற்கத்திய தத்துவ ஞானம் முழுக்க முழுக்க தர்க்கத்தை ஆதாரமாக கொண்டிருந்தது. ஆனால், கிழக்கத்திய தத்துவ ஞானம் வாழ்வியலை மையமாகக் கொண்டு சுற்றுகிறது. பிரான்ஸ் நாட்டு நாத்தீகர் ஜீன் பெரி லேமன் - Jean-Pierre Lehmann - 'இந்து மதம் 'பற்றி தெரிவித்துள்ள கீழ்வரும் கருத்தும் கவனிக்கத் தக்கதாகும். “உலகிற்கு ஒரு ஒழுக்க முறை, ஆன்மீகம்,நேர்மை வழிகாட்டி தேவைப்படுகிறது.இந்தியாவில் உள்ள மதம் மற்றும் தத்தவப் பாரம்பரியங்கள் அந்த மூன்றையும் நன்கு
வழங்கக் கூடியவையாகும்.”( The planet needs a sense of moral order, spirituality and an ethical compass. The Indian religious and philosophical traditions can provide a great deal of all three.)
என்னைப் பொறுத்தவரை நாம் பகுத்தறிவு பேசிக்கொண்டு கலாச்சார அழிவு தான் செய்து கொண்டிருக்கிறோம். வெள்ளைகாரனும் மற்றவனும் நம்மை ஆள கொண்டு வந்த திராவிடம் என்ற ஒரு மாயையைப் பற்றி பேசி மேலும் அளும் வர்க்கம் ஆள வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்துக் கொண்டிருக்கிறோம். வாழ்ந்து காட்டி பின் வருபவர்களுக்கு வழிகாட்டுவதே கலாச்சாரம். சமூகத்தை நல் வழிபடுத்தும் முறை. நான் சிறு பிள்ளையாக இருந்த போது, என் ஆசிரியர் என்னிடம் கூறியது. நீ நன்றாக இருந்தால் உன் வீடு நன்றாக இருக்கும். உன் வீடு நன்றாக இருந்தால் உன் தெரு நன்றாக இருக்கும். உன் தெரு நன்றாக இருந்தால் உன் ஊர் நன்றாக இருக்கும். உன் ஊர் நன்றாக இருந்தால் உன் நாடு நன்றாக இருக்கும், உன் நாடு நன்றாக இருந்தால் இந்த உலகம் நன்றாக இருக்கும். இந்த உலகம் நன்றாக இருந்தால் அனைவரும் மகிழ்ச்சியாக இருப்பர். எனவே மாற்றம் தொடங்கவேண்டியது, ஒவ்வொருவரிடமும் இருந்தே தவிர, மொத்தமாக அரசியல் கட்சிகள் சொல்வது போல சமூக மற்றம் வர வாய்ப்பில்லை.
இங்கு பெரியாரும், பெரியோர்களும் தோற்கவில்லை... திராவிடமும் தோற்கவில்லை. சமூக நீதி, சமத்துவம், சமதர்மம், பெண் விடுதலை, எதுவும் தோற்கவில்லை. மற்ற மாநிலங்களை விட தென்னிந்திய மாநிலங்களில் விழிப்புணர்வு அதிகமாகவே உள்ளது. ஆனால் இப்பொழுது இந்த கருத்துக்களை தேவையானவர்கள் அவர்களின் தேவைக்கு ஏற்றார் போல் எடுத்துக் கையாளுகின்றனர். அதனால், சமூகத்தில் ஒரு தவறான சிந்தனைப் போக்கு உருவாகி வருகிறது. இது கண்டிக்கத்தக்கது
முற்றும்.
No comments:
Post a Comment