Friday, March 25, 2022

சமதர்மம், சமத்துவம், சகோதரத்துவம் மற்றும் பெண் விடுதலை - 3

 சமதர்மம், சமத்துவம், சகோதரத்துவம் மற்றும் பெண் விடுதலை - 3


இதெற்கெல்லாம் மேலே ஒரு படி சென்று நமது பாரதியார், குழைந்தைகளுக்கு சொல்லும் கவிதையில்


"சாதிகள் இல்லையடி பாப்பா குலத்

தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்

நீதி, உயர்ந்த மதி, கல்வி  - அன்பு

நிறைய உடையவர்கள் மேலோர் " என்றார்


பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று வள்ளுவன் சொன்னது போல பாரதியும்,


"காக்கை குருவி எங்கள் சாதி

காடும் மழையும் எங்கள் கூட்டம்" என்று எல்லா உயிருள்ள மற்றும் உயிரற்றவைகளையும் ஒரே சாதிக்குள் அடக்குகிறார்.


மேலும் பெண் விடுதலை பற்றியும் எழுதி உள்ளார்.


"பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் 

பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்

எட்டு மறைவினில் ஆணுக்கிங்கே பெண்

இளைப்பில்லை கான் என்று கும்மியடி"


தமிழகத்தில் தீண்டாமை மற்றும் சாதி ஒழிப்பு முற்காலம் தொட்டு இக்காலம் வரை நடந்து கொண்டே தான் இருக்கின்றன. இதைபோன்ற ஒரு தொடர் இயக்கம் வடநாட்டில் இல்லை. தென்னிந்தியாவில் எல்லா நூற்றாண்டுகளிலும் இதற்கான குரல்கள் ஒலித்துக் கொண்டேதான் இருந்தன. ஸ்ரீ ராமானுஜர் 10ம் நூற்றாண்டில் செய்த புரட்சி ஒரு மிகப் பெரிய புரட்சியாகும். அவரால் இந்த புரட்சியை சத்தமே இல்லாமல் மிக அமைதியாக செய்ய முடிந்ததற்கு காரணம், அவர் அரசியல் கலக்காமல் தனக்கென்று எந்த உள்நோக்கமும் இல்லாமல் ஆன்மீக வழியில் செய்ததே. அவர் காலத்தில் தாழ்த்தப்பட்டோர் "தெரு குலத்தோர்" என்று அழைக்கப்பட்டனர். இதனை "திருக்குலத்தோர்" என்று மாற்றிய பெருமை அவரையே சாரும். மேலும், தன் குருநாதர் தனக்கு உபதேசித்த மந்திரமான, "ஓம் நமோ நாராயணாய" என்ற மந்திரத்தை கோயில் கோபுரம் மேல் ஏறி நின்று ஊர் மக்கள் அனைவரும் கேட்க உபதேசித்தார். குரு தன்னிடம் எச்சரித்ததையும் பொருட்படுத்தாமல், தனக்கு நரகமே கிடைத்தாலும், இதை கேட்கும் அனைவரும் சொர்க்கம் செல்வர் என்று மகிழ்ந்து கூறினார். 


இதையே தான் வள்ளலாரும் 19ம் நூற்றாண்டில் ஆன்மிக வழியில் செய்து சாதித்துக் காட்டினார். 1872 ல் சத்தியஞான சபையை அமைத்தார். அந்தக் காலத்தில் தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் சில பிற்படுத்தப்பட்ட மக்கள் கோயிலுக்குள் நுழைய தடை இருந்தது. அத்தகைய தடைகளைத் தகர்த்து எல்லோரையும் அவருடைய சத்தியஞான சபையில் வழிபட வைத்தா பெருமை அவரையே சாரும்.  மூட பழக்கதிற்கு எதிராக,

"கலையுரைத்த கற்பனையே நிலையெனக் கொண்டாடும்

கண்மூடி வழக்கம் எலாம் மண்மூடிப் போக" என்று கண்மூடித்தனமான மூட நம்பிக்கைகளை கருணையுடன் கண்டித்தார். 


"ஒத்தாரும் உயர்ந்தாரும் தாழ்ந்தாரும் எவரும்

ஒருமையுளர் ஆகி உலகியல் நடத்த வேண்டும்" என்று சமத்துவ சமதர்ம சூழ்நிலையுண்டாக ஒரு ஆன்மீக வாதியாக வழிவகுத்தார் என்பது ஒரு பெருமை


ஆண் பெண் சமத்துவத்தைப் பற்றி அன்றே பாடிச் சென்றுள்ளார் என்பது ஐநூறு சிறப்பு

"ஆணினுள் பெண்ணும், பெண்ணினுள் ஆணும் 

அண்ணுறவகுத்த அருட்பெரும் ஜோதி"


மேலும் அவர் "சாதியையும் மதமும் சமயமும் பொய்யென ஆதியில் உணர்த்திய அருட்பெரும்ஜோதி" என்று தன்னுடைய அருட்பெரும்ஜோதி அகவலில், சாதி, மாதம், சமயம் எல்லாம் பொய்யென்று உரைக்கிறார். 


பொதுவாக தமிழர்களுக்கு நிறுவனமயமாக்கப்பட்ட சமயங்கள் மற்றும் சடங்குகள் ஒன்றும் இருக்கவில்லை. ஐவகை நிலங்களை அடிப்படையாக கொண்ட சிறுதெய்வ வழிபடும், இயற்கை வழிபாடுமே இருந்தன. பொதுவாக பழங்குடி இனங்கள் அனைத்திலுமே இயற்கை வழிபாடு தான் பிரதானமானது. தொல்காப்பியரின் கூற்றுப்படி


மாயோன் மேய காடுறை உலகமும்

சேயோன் மேய மைவரை உலகமும்

வேந்தன் மேய தீம்புனல் உலகமும்

வருணன் மேய பெருமணல் உலகமும்

முல்லை குறிஞ்சி மருதம் நெய்தலெனச்

சொல்லிய முறையால் சொல்லவும் படுமோ


மாயோன் - திருமால் - முல்லை 

சேயோன் - முருகன் - குறிஞ்சி

வேந்தன் - இந்திரன் - மருதம்

வருணன் - வருணன் - நெய்தல்


குறிஞ்சியும் முல்லையும் தம் நிலைமை திரிந்து போகுமானால் பாலை ஆகும். இதன் தெய்வம் கொற்கை. பழங்குடி இனங்களிலிருந்து அரசர்களும் வேந்தர்களும் உருவான காலங்களில் குடிகள் சாதிகளாக மாற்றப்பட்டன. முதலில் செய்யும் தொழில் முறையிலும் பின்னர் பிறப்பின் அடிப்படையிலும். குடி என்பது வேறு, சாதி என்பது வேறு. குடி என்பது பிறப்பின் அடிப்படையில் மட்டுமே... சாதி என்பது, பிறப்பின் அடிப்படையிலும், முக்கியமாக தொழில் மற்றும் அகமண முறையிலும் உருவாக்கப்பட்டது. சங்க காலத்தில் சாதி என்னும் சொல் வழக்கில் இருந்தாலும், இந்த காலத்தில் நாம் குறிப்பது போல் இல்லை. அம்பேத்கர் சாதிகளை ஆராய்ந்து அகமணமே சாதிக்குரிய தனித்தன்மை என்று கூறியுள்ளார். 


தமிழகத்தில் சங்க காலத்தில், மக்கள் செய்து வந்த தொழிலுக்கு ஏற்ப பல குலங்கள் தோன்றி இருந்தன. அவற்றுள் சில அளவர், இயவர், இடையர், எயினர், கடம்பர், பரதவர், பறையர், பாணர், வண்ணார், வணிகர், புலையர், தேர்பாகர், துடியர், குறவர், குறும்பர், கூத்தர், கோசர், குயவர், உமணர், உழவர், கம்மியர், களமர், மழவர், கொல்லர், தச்சர், வேடுவர். இவர்கள் இவர்களது குலத் தொழில் செய்து பிழைத்தனர், மேலும் ஒருவருக்கொருவர் மணமும் (புறமண முறை) செய்து கொண்டனர். இங்கு தொழில் மாறலாம், ஆனால் தீண்டாமை பாகுபாடு இல்லை. கீழ்-மேல், உயர்வு-தாழ்வு என்ற நிலை இல்லை.  


குறுந்தொகைப் பாடல் ஒன்றில்


யாயும் ஞாயும் யாரா கியரோ

எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்

யானும் நீயும் எவ்வழி யறிதும்,

செம்புலப் பெயனீர் போல 

அன்புடை நெஞ்சம் தாங்கலந் தனவே


இப்பாடல் சங்ககாலத்தில் புறமண உறவுமுறை இருந்ததைப் தெளிவாக சொல்கிறது. இச்சமூகத்தில் சாதி என்ற ஒரு அமைப்பு இருப்பதற்கான வாய்ப்பு இல்லை என்றே கூறலாம். 


தொடரும்

No comments:

Post a Comment

சமதர்மம், சமத்துவம், சகோதரத்துவம் மற்றும் பெண் விடுதலை - 5

  சமதர்மம், சமத்துவம், சகோதரத்துவம் மற்றும் பெண் விடுதலை - 5 அண்ணல் அம்பேத்கர் சுதந்திர இந்தியாவிற்கு எழுதிய அரசியல் சாசனத்தில் தீண்டாமை மற்...