Friday, March 25, 2022

சமதர்மம், சமத்துவம், சகோதரத்துவம் மற்றும் பெண் விடுதலை - 4

 சமதர்மம், சமத்துவம், சகோதரத்துவம் மற்றும் பெண் விடுதலை - 4


மனிதன் வேட்டைச் சமுதயாத்திலிருந்து, மேய்ச்சல் சமுதாயமாக மாறி, பின் விவசாயத்திற்கு மாறியது, அதன் பின் வணிகத்தின் எழுச்சியும், நகரத்தின் வளர்ச்சியும் சமூகத்தை நிறைய மாற்றின. முதலில் மனிதனுக்கு தேவை உணவு, உறைவிடம், உடை. தற்கால மனிதனுக்கு இந்த வரிசையில் ஒரு சிறு மாற்றம். உடை நடுவிலோ அல்லது முதலிலோ செல்லும். உணவுக்காக சிறு சிறு குடிகள் இடம் மாறி மாறி சென்றனர். நிரந்தர உணவு கிடைக்கத் தொடங்கிய போது, அவர்களைப் போலவே உணவு தேடி வரும் மற்ற குடிகளை தடுக்கத் தொடங்கினார். இதனடிப்படையிலும், குடிகளுக்குள்ளேயே மணம் முடித்துக் கொண்டனர். ஒவ்வொறு கூட்டம் அல்லது குடிக்கு ஒரு தலைமை, குடிச் சின்னம் வந்தது. செய்யும் தொழிலுக்கு ஏற்ப, உண்ணும் உணவுச் சூழலுக்கு ஏற்ப, வாழக்கை முறைக்கு ஏற்ப குழுக்களும் குடிகளும் உண்டாயின  


ஆனால் காலப்போக்கில், நிலவுடமைச் சமுதாயம் வரும்போது தான் சாதிய அமைப்புகள் உருவாகின்றன. அதன் பின்பு தான் கீழ் மேல், உயர்வு தாழ்வு என்ற அடிப்படை உருவாகிறது. அதன் பின்பு 10 நூற்றாண்டு அளவில் வலங்கை இடங்கை என்று இரு பிரிவு உண்டாகிறது. 


பொதுவாக பண்டைத் தமிழகத்தில், குடி அடுக்கு முறை இவ்வாறு வரும். குடித்தலைமைக்கு அடுத்து வருபவர், உழவுக் குடிகள், அதன் பின்பு ஆயர் அல்லது இடையர் போன்ற மேய்ப்பர்கள், அடுத்தது வணிகர், குயவர், கொல்லர், தச்சர், அதற்கு அடுத்தது குலத்தைக் காக்கும் மறவர்கள், படை வீரர்கள். அதற்கு பின்னர் வலையர், புலையர் போன்ற குடிமக்கள். இது ஒரு அமைப்பு முறை மட்டுமே. இதில் அடிமைத்தனம் இல்லை. 


கி மு 300 ல் கிரேக்கத்தில் இருந்து இந்தியா வந்த மெகஸ்தனிஸ் என்னும் பயணி இந்தியாவில் ஏழு வகையான மக்கள் அடுக்கு இருந்ததாக தனது பயணக் குறிப்பு நூலான இண்டிகா (INDIKA) எனும் நூலில் தெரிவித்து உள்ளார். 


1. தத்துவஞானி அல்லது அறிவார் - இவர்கள் எண்ணிக்கையில் மிகவும் குறைவு - இவர்களுடைய வேலை கல்வி மற்றும் கேள்வி

2. உழவர் - எண்ணிக்கையில் சற்று அதிகம் - தொழில் உழவு. போருக்கு செல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை - எதிரிகள் இவர்களைத் தாக்க மாட்டார்கள். அனைத்து நிலங்களும் அரசனுக்கு சொந்தம். விவசாயம் செய்து விளைந்ததில் நாலில் ஒரு பங்கு அரசுக்கு வரியாக கட்ட வேண்டும். 

3. ஆடு மற்றும் மாடு மேய்ப்பவர்கள் - இவர்கள் ஓரிடத்தில் தங்காது எல்லாம் இடமும் சென்று மேய்ப்பர். செல்லும் இடங்களில் வேட்டையாடி மிருகங்களையும் பறவைகளையும்  பிடிப்பதன் மூலம் அவர்கள் விவசாயிகளைக் காக்கின்றனர். அதற்கு பலனாக அரசன் அவர்களுக்கு உணவு அளிக்கின்றான்

4. ஆசாரியர்கள் மற்றும் வணிகர்கள் - இவர்களில் சிலர் ஆயுதம் செய்பவர்கள், கப்பல் கட்டுபவர்கள், பானை மற்றும் பண்டங்கள் செய்பவர், கலைப்பொருட்கள் செய்பவர்கள், பல்வேறு பொருட்களை உருவாக்குபவர்கள், இவற்றை  மற்றும் வேளாண் பொருட்களை வணிகம் செய்பவர்கள் அடங்குவர்.

5. போர்வீரர்கள் - எப்பொழுதும் நாட்டை காக்கவும் நாட்டு மக்களைக் காக்கவும் போர் முனைக்கு செல்லவும் தயாராக இருப்பவர்கள்.

6. ஒற்றர்கள் - நாட்டிற்கு உள்ளேயும், வெளியேயும் நடக்கும் எல்லா விசயங்களையும், ரகசியமாக, கவனமாக ஒற்றறிந்து அரசனுக்கு தெரிவிப்பது. 

7. அரசு அதிகாரிகள் - பொதுக் கடமைகள் மற்றும் அரசை நிர்வகிக்கும் பொறுப்பில் உள்ளவர்கள்


நமது சமுதாயம் முன்னேற்றத்தில் பின்னடைவைச் சந்திக்கும் ஒவ்வொரு தடைவையும், மகான்களும், முனிவர்களும், சித்தர்களும், புலவர்களும், கவிஞர்களும் அவதரித்து நம்மை வழி நடத்துகின்றனர். அதில் கபீர் தாசரும் ஒருவர். 


கபீரின் சில வாசகங்கள்.


"உன்னை உள்ளேயே தேடிப்பார், இராமபிரானையும் கிருஷ்ணரையும் நீ தரிசிக்கலாம். வெளியே சடங்குகளில் காலத்தை வீணாக்காதே. உன்னை மாற்றிக் கொள். கடவுளைக் காணலாம்"


"ஆணவத்தில் சிக்கிக் கொண்டபொழுது இறைவனை காண இயலவில்லை. அதே சமயம் இறைவன் வந்த போது நான் கரைந்து போனேன் அறியாமை என்ற இருள் அகன்று விட்டது. வெளிச்சத்தைக் கண்டேன்"


கபீர் குரு ராமானந்தரின் சீடர். அவர் சாதிய தடைகளையும் ஏற்றத் தாழ்வுகளையும் உடைத்தெறிந்து மனிதகுலம் ஒன்றே என்று பறைசாற்றினார். கபீரின் முக்கியமான போதனைகள் உலக சகோதரத்துவம், எல்லா உயிர்களிடத்திலும் அன்பு என்பதே.  


கபீரின் ஒரு வழித்தோன்றலாக நாம் அம்பேத்காரை காணலாம். ஆனால் அம்பேத்கர் பெரியாரை போல் சாதி மத எதிர்ப்பு என்ற ஒன்றை மட்டும் கொள்ளாமல்  அதற்கு தீர்வுகளையும் சொன்னார். அம்பேத்கர் ஒரு விதத்தில் காந்தியின் தலித் கொள்கையையும் காந்தியத்தையும் எதிர்த்தார். அதேபோல் மார்க்சியத்தையும் எதிர்த்தார். அவரின் ஒரு கூற்று. நாங்கள் ரஷிய புரட்சியை வரவேற்கிறோம். ஏனென்றால் அது சமத்துவத்தை அடிபடையாகக் கொண்டது. ஆனால், சுதந்திரம் மற்றும் சகோதரத்துவம் இல்லாமல் சமத்துவம் இருக்க முடியாது என்றார். இவை மூன்றையுமே தரவல்லது கம்யுனிசம் அல்ல. புத்தம் மட்டுமே. வயது வந்தோர் அனைவருக்கும் வாக்குரிமை என்பதை முதலில் பிரகடனம் செய்தவர் டாக்டர் அம்பேத்கர். ஆனால் அது முதல் வட்ட மேசை மாநாட்டில் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. அதன் பின்னர் அவர் தாழ்த்தப்பட்டோருக்கு தனித் தொகுதி கேட்டார். 


டாக்டர் அம்பேத்கர் இந்தியாவில் நிலவும் சுரண்டல் மட்டும் வறுமைக்கு தீர்வு சோசலிசம் மட்டுமே என்று உறுதியாக நம்பினார். ஆனால் அவர் மார்க்சியம் சொல்லும் பொருள் முதல் வாத கொள்கையை ஏற்க தயாராக இல்லை. பொருள் முதல் வாதம் மட்டுமே அடித்தளம் அல்ல. அதற்கு பொருள் மட்டும் அல்லாது சமூக, மத, அரசியல் ஜனநாயக அடித்தளமும் தேவை என்று கூறினார். 


மேலும் அம்பேத்கர், இந்து மதமும் ஒற்றுமையும் ஒன்றோடொன்று சேரவே முடியாது. அடிப்படையில் இந்து மதம் பிரிவை (சாதியை) கொள்கையாகக் கொண்டது. இந்துக்கள் ஒற்றுமையாக வாழ விரும்பினால் இந்துமதத்தைத் தூக்கியெறிய வேண்டும். இந்துமதம் உங்களுக்கு உரியதில்லை. சாதி, தீண்டாமை ஒழிப்பு அதில் இல்லை. அதிலிருந்து வெளியேறுங்கள். புத்த மார்க்கம் வைதீகத்திற்கு எதிர்ப்பானது. புத்தர் தர்க்கரீதியில் அறிவைப் பயன்படுத்தி ஆராய்ந்து சொன்னவர். புத்தம் மனிதர்களைப் பற்றிக் கவலைப்படுவது. ஒழுக்கத்தைப் போதித்தவர். அது மனிதர் பின்பற்றிவந்த மார்க்கம். சம அந்தஸ்து கொடுத்து சமமாய் நடத்தும் மார்க்கத்தில் சேருங்கள்.


அம்பேத்கர், பெரியார் மற்றும் காந்தி வாழ்ந்த நாட்களில், இதே கொள்கைக்காக போராடியவர், ஸ்ரீ நாராயணகுரு. தமிழகச் சூழலைக் காட்டிலும் சாதி மற்றும் தீண்டாமை பாகுபாடு கேரளத்தில் மிக அதிகம். தெருவிற்குள் செல்ல கூடாது. ஒரு சில சாதியினர் பத்தடி தள்ளி நின்று தான் பேச வேண்டும், சிலரோ அதற்கு மேலும். கடுமையான சாதிக் கட்டுபாடுகள். மற்றும் கீழ் சாதிப் பெண்கள் மார் மூட தடை. முலை வரி. என்று பல. சுவாமி விவேகநாதர் கூட கேரளத்தை ஒரு பைத்தியக்கார விடுதி என்றே அழைத்தார். 


கோயிலில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு அனுமதியில்லாத காரணத்தினால் அவர், அவர் வாழ்ந்த ஊராகிய அருவிபுரம் கிராமத்தில் ஒரு சிறிய கோயில் கட்டி அதில் சிவலிங்க பிரதிஷ்டை செய்து, அனைவருக்கும் அனுமதி அளித்தார். எப்படி ஒரு தாழ்த்தப்பட்டவர் சிவலிங்க பிரதிஷ்டை செய்யலாம் என்ற கேள்வி எழுந்த போது, இது நீங்கள் வணங்கும் சிவலிங்கம் பிரதிஷ்டை இல்லை என்று கூறினார். அங்கே ஒரு அறிவிப்பும் எழுதி வைத்தார். "சாதிபேதம் மதத்துவேஷம் ஏதுமின்றி அனைவரும் சோதரராய்வாழ்கின்ற வழிகாட்டி இடமே இது". கேரளா பூமியில் சுவாமி நாராயண குரு ஒரு வித்தியாசமான நிலைப்பாட்டை எடுத்தார். இந்திய அளவில் அது ஒரு சிறந்த நிலைப்பாடு. எல்லாவற்றிக்கும் எதிர் நிலைப்பாடு எடுக்காமல் அனைத்து கருத்துக்களையும் உள்வாங்குவது, அனைவரையும் நேசிப்பது, உயர்சாதியினரின் பண்பாடு கலாச்சாரம், கல்வி போன்றவற்றை ஒடுக்கப்ட்டவர் சுவீகரிப்பது, எதிர்ப்புக் கொள்கைகளை தவிர்த்து ஆக்கபூர்வமாகச் சிந்திப்பது என்று பயணித்தார். அவருடைய கொள்கையில் அவர் வெற்றியும் பெற்றார். கேரளத்தின் நிலை, தற்போதைய தமிழகத்தை விட நின்றாக உள்ளது. எழுத்தாளர் திரு . ஜெயமோகன், நாராயண குருவைப் பற்றிய  தன்னுடைய கட்டுரை ஒன்றில் கீழ்வருமாறு கூறியுள்ளது கவனிக்கத்தக்கது. அவருடைய வரிகளிலே "குலதெய்வங்களை இல்லாமல் செய்ததில் நாராயணகுருவிற்கு இன்னொரு நோக்கமும் இருந்திருக்கலாம். குலதெய்வங்கள் என்பவை ஒருவகையில் குலச்சின்னங்கள். அவை பழைமையை பிரதிநிதித்துவம் செய்பவை. ஈழவர்களின் பிற்பட்ட வாழ்க்கை முறையும் உலகநோக்கும் அவற்றிலும் ஊடுருவி இருந்தன.................  சிறுதெய்வங்களை அகற்றி பெருந்தெய்வங்களை பதிட்டை செய்தது வழியாக நாராயணகுரு அடிப்படைக் குறியீடுகளை மாற்றியமைக்கிறார்" 


இதே நூற்றாண்டில் பிறந்த அய்யா வைகுண்டரும் பெரியாருக்கு முன்பே சாதி ஒழிப்புக்கு மிகச் சிறந்த தொண்டாற்றியுள்ளார்.  வைகுண்டர் பிறந்த போதே தீண்டாமை அவரின் வாழ்வில் தொடங்கி விட்டது. அவர் பிறக்கும் பொது அவருக்கு இட்ட பெயர் முடிசூடும் பெருமாள். இது உயர் சாதியினர் வைக்கும் பெயர் என்று அரசனிடம் புகார் கொடுத்து பெயர் மாற்ற ஆணை பெற்றனர். அதன்பலனாக முத்துக்குட்டி என்ற பெயர் வைக்கப்பட்டது. 1833 ல் பொது வாழ்க்கையில் தன்னை இணைத்துக் கொண்டார். அப்பொழுது அந்த நாட்டை ஆண்ட சுவாதித் திருநாள் மகாராஜாவின் ஆட்சியில் பயங்கரமான சாதிக் கட்டுபாடுகள் இருந்தன. இந்த சமயத்தில் தான் சுவாமி அவர்கள் சமத்துவ சங்கம் என்ற ஒன்றை தோற்றுவித்தார். முட்டம் என்ற பகுதியில் சமுதாயக் காலனி அமைத்தார். உயர் சாதியினை எதிர்த்ததோடு அந்த பகுதி மன்னனையும் எதிர்த்தார். ஒரு புதிய சமய நெறியை உருவாக்கி சமத்துவ சமுதாயத்தை வளர்க்க பாடுபாட்டார். நூற்றாண்டுகளுக்கு முன்னரே கருவறைக்குள் சென்று வழிபடும் நிலையை ஏற்படுத்தினார். பிராமணர்கள் இல்லாமல் அவர்களது சடங்குகளை அவர்களே நடத்திக் கொள்ள அறிவுறுத்தினார்  


தொடரும்

No comments:

Post a Comment

சமதர்மம், சமத்துவம், சகோதரத்துவம் மற்றும் பெண் விடுதலை - 5

  சமதர்மம், சமத்துவம், சகோதரத்துவம் மற்றும் பெண் விடுதலை - 5 அண்ணல் அம்பேத்கர் சுதந்திர இந்தியாவிற்கு எழுதிய அரசியல் சாசனத்தில் தீண்டாமை மற்...