மூவேந்தர் - 08.02.2022
மூவேந்தர் என அழைக்கப்படுபவர்கள் சேர சோழ பாண்டிய மன்னர்களாவர். இவர்களே பண்டைய தமிழகத்தையும் தென்னிந்தியா முழுமையுமே ஆண்டவர்கள். இவர்களில் பாண்டியர்கள் நீண்ட நெடிய பாரம்பரியம் உள்ளவர்கள். உலகத்திலேயே மிக நீண்ட நெடுங்காலம் ஆண்ட மரபை உடையது பாண்டிய பேரரசு. எந்த மன்னர் குலத்துக்கும் இல்லாத நீண்ட வரலாறு பாண்டியர்களுக்கு உண்டு.
பாண்டியர்களின் கொடி மீன் கொடியாகும். இவர்களின் தலைநகரம் மதுரை ஆகும். வைகை ஆற்றுப் பகுதியே பாண்டியப் பகுதியாகும். மற்றொரு வற்றாத ஜீவ நதி தாமிரபருணியும் ஓடியது. பாண்டியர்கள் ஆண்ட பகுதிகளாக மதுரை, திருநெல்வேலி, சிவகங்கை, புதுக்கோட்டை, இராமநாதபுரம் போன்ற பகுதிகளாகும். இவர்கள் வேப்பம்பூ மாலை அணிவார்கள். பாண்டியர்கள் தங்கள் பெயர்களுடன் மாறன், வழுதி, வர்மன், செழியன், முதுகுடுமி போன்ற ஓட்டுக்களைச் சேர்த்துக் கொண்டனர். இவர்கள் சந்திர குலத்தைச் சேர்ந்தவர்களாக தங்களை அறிவித்துக் கொண்டனர். பாண்டிய முத்துக்கள் உலகத்திலேயே மிகர் சிறந்த முத்துக்களாக கொண்டாடப்பட்டன. இவர்கள் கிபி 14-ம் நூற்றாண்டு வரை சிறப்பாக இப்பகுதியை ஆண்டனர்.
சோழர்களின் கொடி புலிக் கொடியாகும். நெல் அதிகமா விளையும் பகுதி சோழ நாடாகும். "சோழநாடு சோறுடைத்தது" என்பது பழமொழி. சோழர் குலம் வளம் பொருந்திய காவிரி ஆற்றுபடுகையிலேயே தோன்றியது. கிபி 2-ம் நூற்றாண்டுக்கு பின்னர் வலிமை குறைந்து சிற்றரசராகி பின் கிபி 9-ம் நூற்றாண்டில் மீண்டும் வலிமை பெற்றுத் தெற்காசியா முழுவதும் தன் குடையின் கீழ் கொண்டு வந்து ஆண்ட வம்சம். கிபி 13-ம் நூற்றாண்டு வரை சோழராட்சி நிலவியது. பின் மீண்டும் சரியத் தொடங்கியது. சோழர்கள் அத்தி மாலை அணிந்திருந்தனர். இவர்கள் தங்களை சூர்ய குலத்தைச் சேர்ந்தவர்களாக அறிவித்துக் கொண்டனர். இவர்கள் தங்கள் பெயர்களுடன் சென்னி, வளவன், கிள்ளி, ஆதித்யன், இராஜராஜன் போன்ற ஓட்டுகளைச் சேர்த்துக் கொண்டனர்..
சேரர்கள் தமிழகத்தின் மேற்குக் கடற்கரைப் பகுதியை ஆண்ட மன்னர் வம்சம் ஆகும். கரூர் மற்றும் வஞ்சியைத் தலைநகராக கொண்டு ஆண்டு வந்தனர். சேரர்களின் கொடி விற்கொடி ஆகும். இப்போது கேரளா மாநிலமாக உள்ள சில பகுதிகளும், தமிழகத்தின் கோவை மற்றும் கன்னியாகுமரிப் பகுதிகளும் சேர நாட்டுப் பகுதிகளாகும். அமராவதி, நொய்யல் மற்றும் பேரியாறு போன்ற நதிகள் உள்ளன. மலைகளுக்கும் மலையில் விளையும் வாசனை திரவியங்களுக்கும் பெயர் பெற்ற நாடாகும். இவர்கள் தங்கள் பெயர்களுடன் சேரலாதன், குட்டுவன், கடுங்கோ, குடக்கோ, இரும்பொறை, வாழியாதன், கோதை, மாக்கோதை போன்ற ஓட்டுக்களைச் சேர்த்துக் கொண்டனர். சேரர்களின் மாலை பனம்பூ ஆகும். இவர்கள் தங்களை அக்கினிக் குலத்தைச் சேர்ந்தவர்களாக அறிவித்துக் கொண்டனர்
No comments:
Post a Comment