Tuesday, February 8, 2022

உணர்வு

 உணர்வு - 25.௦9.2021


ஊரின் நடுவே ஒரு அழகான கோயில், பலவிதமான சிற்ப வேலைப்பாடுகளுடன், அதைப் பார்த்துக் கொண்டிருக்கும் போது நேரம் போவதே தெரியவில்லை. நம்மில் பலரும் கோயிலுக்கு செல்கிறோம். ஆனால் ஒருவர் கூட கோயிலை முழுமையாக பார்ப்பது இல்லை.கோயில் என்பது ஒரு வழிபடும் இடம் மட்டும் அல்ல. அது ஒரு சமுதாய சின்னம். பண்பாடு நாகரிகம்  மற்றும் நமது கலைகளை வளர்க்கும் ஒரு சமுதாய கூடம். பக்தர்களுக்கு அது ஒரு வழிபாட்டுக் கூடம். நேரடியாக சென்று கருவறை முன் நின்று வழிபடுகின்றனர். அல்லது வரிசையில் சென்று வழிபடுகின்றனர். இன்று அறநிலையத் துறையின் கீழ் பலவேறு கோயில்கள் வருவதால் கோயிலை சுற்றி வர கூட முடிவதில்லை. பரிவார தெய்வங்களை காண கூட அனுமதியில்லை. அவ்வாறு காணவேண்டும் என்றால் நமக்கு ஏதாவது ஒரு அதிகாரியின் துணையோ அல்லது அர்ச்சகரின் துணையோ வேண்டும். இல்லாவிட்டால் எல்லா கோயில்களிலும் ஜருகண்டி.... ஜருகண்டி.... தான். கருவறை வழிபாட்டுக் பின்னர், கோயிலை மூன்று சுற்று சுற்றி விட்டு சிறிது நேரம் அமர்ந்து விட்டு சென்று விடுகின்றனர். சிவன் கோயில் என்றால் சண்டிகேஸ்வருக்கு ஒரு சொடுக்கு அல்லது கை தட்டல் மற்றும் எழுந்து வரும் போது எல்லாவற்றையும் உதறிவிட்டு எழுந்து வருவர். ஆனால் அங்கு பலவிதமான சிற்பங்கள் உள்ளன, சித்திரங்கள் உள்ளன, அதில் எத்தனை விதமான கதைகள், கற்பனைகள், காவியங்கள். இவை எதையுமே நாம் ரசிப்பதில்லை, மற்றும் தெரிந்து கொள்ள விரும்புவது இல்லை. இங்கு உள்ள ஒவ்வொன்றின் பின்னனியிலும் ஒரு கதை உண்டு, காவியம் உண்டு... மற்றும் காமம், காதல், வீரம், பண்பாடு, சிற்பியின் கை வண்ணம், சிந்தனை அப்பப்பா....

நான்  சென்ற கோயில் பழைமையான நாக வழிபாடு உள்ள ஒரு கோயில். கோயில் திருவிழா என்று நினைக்கிறேன். நல்ல கூட்டம். மக்கள் முகங்களில் எல்லாம் மகிழ்ச்சி. ஊரே உறவினர் மற்றும் விருந்தாளிகள், பகதர்களின் கூட்டத்தில் நிரம்பி வழிந்தது. பிரசங்கி ஒருவர் பிரசங்கித்துக் கொண்டிருந்தார். தெய்வத்தின் பெருமை பற்றியும், வழிபடும் முறைகள் பற்றியும். என்னை பொறுத்தவரை தெய்வ வழிபாடு என்பது நம்பிக்கை சம்பந்தப்பட்ட விசயம். மேலும் அது நமக்கு ஒரு மன அமைதியையும், உறுதியையும் தர வேண்டும். பற்றி கொள்வது தானே பக்தி. அல்லாமல் முறைகள் மற்றும் சடங்குகளில் நம்பிக்கை இல்லை. இன்று தெய்வங்கள் மதங்கள் என்ற பெயரில் நிறுவனப் படுத்தப்பட்டு உள்ளது. நிறுவனப் படுத்தும் போது கட்டாயம் முறைகள் மற்றும் சடங்குகள் தவிர்க்க முடியாதவை. சிறிது நேரம் நின்று பிரசங்கம் கேட்டு விட்டு கோயிலுக்குள் சென்றேன். பக்தர்கள் கூட்டம் ஜெ... ஜெ... என்றிருந்தது. நடந்து வந்த களைப்பு வேறு. தெய்வத்தைப் பார்க்கும் துடிப்பு வேறு. திடீரென்று பார்த்தால் நான் கர்ப்பகிரகத்தின் முன் நிற்கிறேன் அடியார்கள் கூட்டம் என்னைத் தள்ளி முன் வரிசையில் நிற்க வைத்து விட்டது. தீபத்தின் ஒளியில் தெய்வத்தைக்  கண்ட பொழுது, ஒரு அமைதி. ஒரு வெறுமை. மனதில் ஒன்றுமே கேட்க தோன்றவில்லை. அவனுக்கு தெரியாதா எனக்கு என்ன வேண்டும் என்று. நான் மட்டும் அங்கு நிற்பது போல் ஒரு அமைதி. அவ்வளவு ஒரு அமைதி. எல்லாம் அவன் செயல். பிரசாதம் வாங்கிக் கொண்டு, பிரகாரம் வந்து வாயிலின் வெளியில் வந்தேன். இன்னும் பிரசங்கம் முடியவில்லை. சிறிது நேரம் நின்று கேட்டேன். 

பிரசங்கம் முடிந்தவுடன் பேசியவர், நாளை ஒரு யாகம் இருப்பதாகவும், அந்த யாகம் முடிந்தவுடன் நாகர் தோன்றி ஆசியருளுவார் என்று கூறினார். எனக்கு ஒரே ஆச்சர்யம். நாகர் தோன்றி ஆசி அருளுவது ஒரு புதுச் செய்தியாக இருந்தது. அதனால் நாளை வருவது என்று முடிவு செய்து கிளம்பினேன். யாரவது சாமியடுவார்கள் என்று நினைத்துச் சென்றேன்.

காலையில் எழுந்து நீராடி விட்டு, தெய்வத்தை மனதில் தொழுது விட்டு கோயிலுக்கு சென்றேன். காலையில் இருந்து ஒன்றும் சாப்பிடாததால் பசித்தது. கோயிலின் அருகிலேயே ஒரு ஹோட்டல் இருந்தது. சென்று சூடாக நான்கு இட்லியும், ஒரு பில்டர் காப்பியும் குடித்தேன். எனக்கு இந்த ஊர் புதிது தான். நான் நண்பன் ஒருவனைக் காண நீண்ட தூரம் சென்று கொண்டிருந்தேன். வழியில் பயணக் களைப்பு நீங்க கொஞ்சம் தங்கிச் செல்லலாம் என்று இங்கு வண்டியை நிறுத்தினேன். காணும் போதே கிராமத்து திருவிழாவுக்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன. புதிய புதிய மனிதர்களையும், அவர்களின் செயல், பேச்சு மற்றும் பண்பாட்டுக் கூறுகளையும் காணும் போது நமக்கு ஒரு புத்துணர்வும் புதிய அனுபவமும் கிடைக்கிறது. நான் என்ற பிம்பம் மாறி நாம் என்ற பிம்பம் கிடைக்கிறது. 

ஊர்த் திருவிழா என்பதால் அனைவரும் புத்தாடை அணிந்து, பலகாரங்கள் பல செய்து, பலருடன் அதைப் பகிர்ந்து ஒரே கோலாகலமாக இருந்தது. இதைப் பார்க்கும் பொழுது, எனக்கு எனது சிறுவயது நினைவலையும், எனது பாட்டியுடன் எங்கள் ஊர் சித்திரை திருவிழாவும் கலந்து கொண்டு கொண்டாடிய தினத்தையும் நினைவு வருகிறது. மீண்டும் அந்த நாட்கள் கிடைக்குமா? மனதில் ஒரு ஏக்கம். 

கோயிலுக்கு சென்றேன், யாகம் நடந்து கொண்டிருந்தது. மந்திர ஒலியைத் தவிர வேறு ஒன்றும் கேட்கவில்லை. எல்லோர் முகத்திலும் ஒரு எதிர்பார்ப்பு. வேறு விதமான பேச்சுக்கள் இல்லை. யாகத்தின் நடுவே ஒரு வித்தியாசமான உருவில் ஒரு மிகச் சிறிய உருவம் ஓன்று வெளியே வந்தது போல் எனக்கு தோன்றியது. அது ஒரு நீண்ட வாலுடனும் தலைப்பகுதி ஒரு சிறிய கடற்குதிரையின் உருவத்துடன் தோற்றம் அளித்தது. அது என்னை நோக்கி வந்ததை உணர்ந்தேன். மனதில் ஒரு சிறிய பயம். தொண்டைக்குளிக்குள் ஒரு பந்து மேலேயும் கீழேயும் செல்லாமல் தவிப்பதை என்னால் உணர முடிந்தது. யாகம் நடக்கும் இடத்திலிருந்து ஒரு சப்தம். "உடனே அதனைப் பிடிக்க வேண்டும். அதை குளிர்வித்து சாந்திப் படுத்த வேண்டும்" என்று யாரோ ஒருவர் கத்தினது எனது காதுகளில் விழுந்தது. நான் அதைப் பிடிக்க முயன்ற பொழுது அது என் கையில் இருந்து வழுவிக் கொண்டு சென்றது. கையில் எதோ ஒரு வழுவழுப்பை  உணர்ந்தேன். மீண்டும் அதை பிடிக்க முயன்றேன். அப்பொழுது அது என் கையில் மாட்டிக் கொண்டு விஸ்வரூபம் எடுத்தது. என்னால் நம்பவே இயலவில்லை. சிறிதாக இருந்த ஒரு உருவம் இப்பொழுது பல மடங்கு பெரிதாகி படமெடுத்து நின்றது. கழுத்தில் ஒரு நீல நிறம் தெரிந்தது. கண்கள் கூசின. நீண்ட நேரம் அதை காண இயலவில்லை. என்றாலும் மீண்டும் மீண்டும் பார்த்தேன். என்னைப் போல் எல்லாவருக்கும் ஒரு ஆச்சர்யம் அதிசயம். 

நிமிர்ந்து பார்க்கும் பொழுது அந்த உருவம் விண்ணுக்கும் மண்ணுக்கும் தொடுவது போல் இருந்தது. என்னவொரு  அழகு, என்னவொரு ஆனந்தம். அதன் தலை காற்றாடி போல ஆடிக் கொண்டிருந்தது. மிகப் பெரிய ஒரு குடையின் கீழே நாங்கள் இருப்பதைப் போல் உணர்ந்தேன். கோயில் மணி அடிப்பது போல் ஒரு உணர்வு. 

டிங், டிங்... டிங், டிங்... டிங், டிங்... டிங், டிங்... 

"இந்த அலாரம் வைச்சு பெட் காபி குடிக்கிற பழக்கத்தை என்னைக்குதான் விடுவீங்களோ? என்னங்க..... மணி 6 ஆச்சு. பெட் காபி வச்சுருக்கேன்.... ஆற்றதுக்குள்ள எந்திருச்சு குடிங்க..." என்று என் மனைவியின் குரல் கேட்டு எழுந்தேன்.

No comments:

Post a Comment

சமதர்மம், சமத்துவம், சகோதரத்துவம் மற்றும் பெண் விடுதலை - 5

  சமதர்மம், சமத்துவம், சகோதரத்துவம் மற்றும் பெண் விடுதலை - 5 அண்ணல் அம்பேத்கர் சுதந்திர இந்தியாவிற்கு எழுதிய அரசியல் சாசனத்தில் தீண்டாமை மற்...