Published in Lions Club of Chennai East Coast, Chennai Bulletin - "The Waves" - Month of Aug 2021
திருக்குறளும் தலைமைத்துவமும் 2
ஒரு தலைவனுக்குத் தேவையான ஆளுமைத்திறனை வளர்க்க அற்புதமான விளக்காக இருப்பது நமது திருக்குறள். திருக்குறள் ஒன்றை ஒருவன் முழுமையாகப் படித்துத் தெரிந்து கொண்டு விட்டால் அது தரும் ஞானம் அளவிட முடியாதது. இதைப்போல் ஒரு உயர்வான ஒப்பற்ற இலக்கியம் வேறு எங்கும் கிடையாது. மணிமேகலையின் அட்சய பாத்திரம் போல அள்ள அள்ள குறையாதக் கருத்துச் சுரங்கம். இலங்கை ஜெயராஜ் என்ற பேச்சாளர், அடிக்கடி குறிப்பிடும் ஒன்று, "தமிழைப் படிக்க வேண்டுமா? திருக்குறளை படி. தெய்வத்தை படிக்க வேண்டுமா? திருவாசகம் படி" என்பதே. எவர் எம்மதத்தைச் சார்ந்தவர் என்றாலும், எல்லோருடைய வீடுகளிலும் இருக்க வேண்டிய இரண்டு முக்கியமான புத்தகங்கள், திருக்குறளும், திருவாசகமும்.
"அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும்
எஞ்சாமை வேந்தர்க் கியல்பு".
ஒரு தலைவனுக்குத் தேவையான முக்கியமான பண்புகளில் அஞ்சாமை ஒரு முக்கியமான பண்பு. எடுத்த கொள்கையில் உறுதியாக இருப்பது. அல்லது நினைத்த காரியத்தில் நாம் அஞ்சாமல் துணிவுடன் இருப்பது முதல் பண்பாகும். ஈகை என்ற வார்த்தைக்கு தற்போதைய சூழ்நிலையில் ஞானம் தர்மம் என்ற இரண்டு பொருள்களையுமே எடுத்துக்கொள்ளலாம். தனக்குத் தெரிந்ததை மற்றவர்களுக்கு விளங்கப்படுத்துவதும், தன்னிடம் உள்ள பொருளைத் தேவைப்படுவோருக்கு கொடுப்பதும் ஒரு தலைவனுக்கு அழகு. அறிவூக்கம் என்பதை அறிவு + ஊக்கம் என்று பிரித்து எடுத்துக் கொள்ள வேண்டும். தான் ஈடுபட்டுள்ள துறையில் மிகச் சிறந்த அறிவு பெற்றவனாக இருப்பதும் ஒரு செயலைத் தொடர்ந்து வெற்றி கரமாக செய்ய ஊக்கமுடயவனாக இருப்பதும் ஒரு தலைவனின் மிகச் சிறந்த இயல்பு.
No comments:
Post a Comment