Published in NBC-1000 Days Celebration Souvenir 2019 and Namadhu Chettinad Magazine July 2021
கிழக்காசிய நாடுகளின் முன்னேற்றத்தில் நம் நகரத்தார்களின் பங்கு குறிப்பிடத்தக்கது. நம்மில் பலரும் இன்று வரை பர்மாவின் ஏற்றம் மிக்க வாழ்வையும் இரண்டாம் உலகப் போருக்குப் பின் நம் இனத்தாரைச் சோகத்தில் ஆழ்த்திய நிகழ்வையும் பற்றி மட்டும் பேசிக்கொண்டிருக்கிறோம். ஆனால் நம்மால் தான் பெரும்பாலான கிழக்காசிய நாடுகள் 19 மற்றும் 20 ஆம் நூற்றாண்டுகளில் மிக வேகமாக வளர்ச்சி அடைந்தன. அந்தக் காலத்தில், சமுதாயத்தில் பெரிய மனிதர்களுக்கு மட்டுமே கடன் கிடைக்கும் என்ற சூழல் இருந்தது. இதை மாற்றியவர்கள் இந்தியாவின் வணிகச் சமுதாயமான செட்டியார்கள் எனப் பரவலாக அறியப் பெற்ற நகரத்தார்களே.
நம் இனத்தார் முதலில் சென்றது, இலங்கைக்குத் தான். இன்னும் இலங்கையில் செட்டி
தெரு உள்ளது. அங்குதான் நாம் கிட்டங்கிகளைத் திறந்து இலங்கையின் பொருளாதரத்தை
செம்மைப் படுத்தினோம். இப்பொழுது அதன் பெயர் கடற்கரைச் சாலை (SEA STREET). டச்சுகாரர்கள் உடன் 1656 ஆம் வருடம் 17 ஆம் நூற்றாண்டில் சென்று அங்குள்ள தோட்டங்களைப் பார்த்துக் கொண்டும் மற்றும்
இலங்கையின் விவசாய மற்றும் தொழில் முன்னேற்றத்தில் முக்கிய பங்காற்றியும்
வந்தோம். ஆனால், அங்கு பெரிதாக நம்மால், நம் தொழிலை வளர்த்துக் கொள்ள இயலவில்லை. அதற்குக் காரணம் டச்சின் MONOPOLISTIC TRADING POLICY. 1796ல் இலங்கை இங்கிலாந்தின் வசம் வந்தது. அது முதல்
நமக்கு ஏறுமுகம் தான். இலங்கையின் முதல் வங்கியான Bank of Ceylon 1841ல் ஆரம்பிக்கப்பெற்றது. இதுவே இலங்கையின் முதல்
வங்கி. என்றாலும் வங்கி மற்றும் மூலதன நடைமுறைகள் அத்தனையுமே நம் செட்டியார்கள்
வசம்தான் இருந்தன. அதற்கு முக்கியமான காரணங்கள் நம்மவர்களின் நம்பிக்கை, ஒற்றுமை, சாதி சார்ந்த வளர்ச்சி, நமது சுமூக உறவு. இலங்கையின் பொருளாதார
எழுத்தாளர்கள் அனேகர் நம்மைக் குறிப்பிடும்போது “Merchant Bankers of Ceylon” or “the only Bankers”
என்று தான் எழுதுகிறார்கள். மேற்கத்திய
நாடுகளைச் சேர்ந்தவர்கள், அவர்களின் வங்கிகளின் மூலமாக பணத்தைப் பெற்று
இலங்கையின் தோட்டங்களில் முதலீடு செய்தனர். ஆனால் இலங்கையின் மக்களுக்குப் பெரிய
தலைவலியே மூலதனப் பற்றாக்குறைதான். அது நம்மவர்கள் வரவிற்குப் பிறகு மாறத்
தொடங்கியது. நமது செட்டியார்களின் மூலதனம் அவர்களின் உறவுகளுக்குள்ளிருந்தே எடுகப்பப்பெற்றது. அதற்கும் மேலே மூலதனம்
வேண்டிய போது மேற்கத்திய வங்கிகள் அல்லது இந்தியாவில் இருந்த இங்கிலாந்து
வங்கிகளிடம் இருந்து பெறப்பட்டது. மேலும் நமது செட்டியார்கள் அவர்களுடைய
வாடிக்கையாளர்களின் நன்மதிப்பு மற்றும் நம்பிக்கையை தமக்குள்ளும் மற்ற
வங்கியாளர்களிடமும் பகிர்ந்து கொண்டனர். அதனால் ஏமாற்றப்படுவது தவிர்க்கப்பட்டது.
நம் செட்டியார்களின் தொழில் திறமையே அவர்களின் வளர்ச்சிக்கு முழுமுதல் காரணம்.
நாம் கிடைக்கும் வாய்ப்புக்களை உபயோகபடுத்துவதில் வல்லவர்கள். முதலில் நாம் வணிகம்
செய்யவே இலங்கை சென்றோம். ஆனால் இலங்கையில் சாமானியர்களுக்கு முதலீடு கிடைக்காத
காரணத்தினாலும், மேற்கத்திய நாடுகளுக்குத் தேவையான, தோட்டப் பொருளாதாரமான, காப்பி, தேயிலை, ஏலக்காய், மிளகு மற்றும் இரப்பருக்கு ஏற்றுமதி வாய்ப்புகள் அதிகம் என்பதாலும், வங்கித் தொழிலில் முதலீடு செய்து சிறப்பாக
செய்து வந்தோம்.
பிறகு நாம் சென்றது பர்மாவிற்கு. நாம்
கொல்கத்தாவில் இருந்து, பிரிடிஷாருடன் 1826-ல் ஆங்கிலோ-பர்மா போர் நடந்தபோது இந்தியப் பணியாளர்கள் மற்றும்
இராணுவத்தினருடன் இங்கிலாந்தின் ஆதிக்கத்திற்கு உட்பட்ட பகுதிகளை
நோக்கிச் சென்றோம். பர்மாவை நாம் அரிசியின் தொட்டில்
என்றே சொல்லலாம். மேற்கத்திய நாடுகள் ஆசியாவின் வளங்களை குறிவைத்து வர
ஆரம்பித்தனர். அவர்களின் தேவையோ வளங்கள். ஆனால் அவர்களுக்கு முதலீடு செய்யப் பயம்.
அதனால் அவர்கள் நம்மை இடை ஈட்டாளர்களாக வைத்துக் கொண்டார்கள். 1869ல் திறக்கப்பட்ட சூயெஸ் கால்வாய் பல விதமான வணிக
வாய்ப்புகளுக்குத் திறவு கோலாக அமைந்தது. அதற்கு முன்பெல்லாம் மேற்கத்திய
நாடுகளுக்குச் செல்வது என்றால் குறைந்தது 6 முதல் 8 மாதங்கள் வரை ஆகும். சூயெஸ் திறப்பு, பயண நாட்களைப் பாதிக்கும் மேலாகக் குறைத்தது மற்றும் வர்த்தக வாய்ப்புகளையும்
கூட்டியது. 1869ல் கொண்டு வரப்பட்ட பர்மாவின் நிலங்கள் சட்டமும்
நமக்கு நல்ல வாய்புகளை உருவாக்கி தந்தது. நிலங்களை ஈடாக வைத்து வட்டித் தொழில்
விரிவடைந்தது. இது பல செட்டியார்களை பர்மாவின் பக்கம் திருப்பியது. 1930 ஆம் வருடத்திய கணக்குப் படி, 2000க்கும் மேலான செட்டியார் கடைகள் பர்மாவில்
இருந்தன. சிறிய ஊர்களிலும் கூடக் கடைகள் இருந்தன. அதிகமான கடைகள் ஐராவதி ஆற்றின்
பாசன மற்றும் காட்டுப் பகுதியிலும், ரங்கூனிலும் இருந்தன. பர்மாவின் தோட்டங்களுக்கும் தொழிற்சாலைகளுக்கும்
புத்துணர்வு அளித்து வளர்த்தது நமது சமூகமே. விவசாயப் பொருளாதராத்திற்கும், மேற்கத்திய வங்கிகளுக்கும் ஒரு பாலமாக திகழ்ந்து
வந்தோம். 1930 ல் நடந்த Burma Provincial Banking Enquiry அறிக்கையில் நம் கடைகளைப் பொறுத்தவரை நிலையான
வணிக நேரமோ, விடுமுறை நாட்கள் என்றோ இல்லை. எல்லா நாட்களும், எல்லா நேரமுமே வணிக நேரம் தான். பங்குனி
உத்திரம், தைப்பூசம் மற்றும் செட்டியார்களின் பண்டிகைகளைத்
தவிர மற்ற நாட்கள் எல்லாமே வேலை நாட்கள் தான். அதனால் பணம் கொடுத்தவர்
வாங்குவதற்கும், கடன் தேவைப் படுபவர் பெறுவதற்கும் எந்த நேரம்
வேண்டுமானாலும் செல்லலாம் என்ற நிலை இருந்தது. இதுவும் பொருளாதரத்தை முன்னேற்ற
உதவியது.
இதைத் தொடர்ந்து பிரிட்டனின் காலனியாதிக்கத்தில்
இருந்த மலாயா, சிங்கப்பூர், இந்தோனேசியா, தாய்லாந்து மற்றும் பிரான்ஸின்
காலனியாதிக்கத்தில் இருந்த வியட்நாம், லாவோஸ், கம்போடியாவிற்கு, மேற்கத்திய வங்கிகளின் துணையோடும் அரசாங்கத்தின் துணையோடும் சென்றோம் என்றால்
மிகையில்லை. இங்கு நாம் விவசாயத்திற்கு மட்டும் இல்லாது டின், ரப்பர், மண்ணிற்குக் கிழே இருக்கும் கனிம வளத்தை எடுக்கும் தொழிற்சாலைக்கும் நிதியுதவி
செய்துள்ளோம். வட்டி விகிதங்களையும் குறுகிய காலத்திற்கு என்றும், நீண்ட காலத்திற்கும் என்றும், இடைக் காலத்திற்கு என்றும் பிரித்துக்
கொடுத்துள்ளோம். பொருள் மற்றும் நிலத்திற்கு ஈடாக என்றால் ஒரு வட்டி, எதுவேயில்லாமல் நம்பிக்கையின் பேரில் கொடுப்பது
என்றால் ஒரு வட்டி என்று பல விதங்களில் இன்றைய வங்கிகளைப் போல் செயல்பட்டு
வந்தோம். தொழிலின் மேல் நம்மவர்கள் வைத்த நம்பிக்கை, நமது திறமை, மற்றும் ஒற்றுமையே நம்மவர்களின் வெற்றிக்கு முக்கியமான காரணம். எண்ணிகையில்
நாம் சிறியவர்களாக இருந்தாலும், நமது எண்ணங்களில் நாம் பெரியவர்கள். செட்டி
வட்டி என்றே ஓன்று உள்ளது. இது அவரவர், தீர்மானிப்பது அல்ல. எல்லோருக்கும் பொதுவான ஒரு இடத்தில் கூடி, சூழ்நிலைகளைப் பற்றி விவாதித்து, சேர்ந்து ஒருமனதாக முடிவெடுப்பார்கள்.
வெளிநாடுகளுக்குச் சென்ற செட்டியார்கள் அனைவருமே, பழங்காலத்தைப் போன்று தனது பெண்டு, பிள்ளைகளை அழைத்துக்கொண்டு குடும்பமாகச்
செல்லவில்லை. எல்லோருமே, தனித் தனியாகத் தான் சென்றார்கள்.
சொல்லிக்கொண்டு, வாய்க்கரிசி வாங்கிக் கொண்டு, திரும்பி வருவோமோ, அல்லது வரமாட்டோமோ என்று தான் சென்றார்கள். செட்டிக் கப்பலுக்கு செந்தூரன்
துணை, என்பதே தாரக மந்திரம். அதனால் தொழிலே முதல்
என்று வாழ்ந்தார்கள். வந்த வருமானத்தில் ஒரு பகுதியைக் கோவிலுக்கும், நமது சமூகம் சார்ந்த ஊர்களின் சமூக
முன்னேற்றத்திற்காகவும் செலவழித்து வந்தனர். செட்டியார்கள் கோட்டை கோட்டையாய் வீடு
கட்டியதும் இந்தச் சமயத்தில் தான். பர்மா தேக்கு, இத்தாலியன் மார்பிள், ரங்கூன் மாப்பிள்ளை சீப்பு, கண்ணாடி, பீங்கான் அப்பப்பா..... எத்தனை.... எத்தனை.... சொல்லிக்கொண்டே செல்லலாம்.
பர்மா தேக்கு இந்திய வந்த கதையே ஒரு சுவாரசியம்
தான்..... ஐராவதி நதிப்பகுதியை வளமான விவசாயப் பகுதியாக மாற்ற வேண்டும். அப்பொழுது
அங்கு இருந்த நல்ல தரமான தேக்கு மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டன. நாம் அதை அப்படியே
ஐராவதி நதியில் போட்டு, நதி கடலில் சேரும் இடத்தில் வந்து நாகப்பட்டினம்
அல்லது தொண்டி செல்லும் கப்பலின் பின் பகுதியில் விலாசம் சேர்த்து அனுப்பி
விடுவோம். கடலில் உள்ளே நீரோட்டம் என்று ஓன்று உண்டு. காற்றின் திசைக்கேற்ப
வருடத்தில் சிலகாலம் ஒரே திசையை நோக்கிச் செல்லும். அந்தப் படகும் அவ்வாறே செல்லும்.
தண்ணீரில் செல்வதால்,
மரத்தின் கணம் படகை ஒன்றும் செய்யாது. மேலும், நீரோட்டத்தின் போக்கில் செல்வதால், சென்றடைய வேண்டிய இடத்தைச் சரியாகச்
சென்றடையும். தமிழகம் வந்த பிறகு, அனுப்பியவரின் உறவினர் வந்து அதை எடுத்துச்
சென்று, வீடுகளுக்கும், மரச் சாமான்கள் செய்யவும் உபயோகப்படுத்திக் கொண்டனர். அவ்வாறு வந்தது தான்
இன்றைய செட்டிநாட்டுப் பகுதிகளில் உள்ளவை.
இவ்வாறு சென்று கொண்டிருந்த வேளையில் தான், எதிர்பார்க்காத மூன்று பெரிய விஷயங்கள் நம்மை ஆட்டம் கொள்ளச் செய்தன. ஓன்று, காலனியாதிக்கத்தில் இருந்த நாடுகளில் சுதந்திர
வேட்கை பரவியது. எல்லா நாடுகளும் சுதந்திரம் கேட்டன. இரண்டாவது, 1925ல் பிரபலமான அன்றைய மெட்ராஸில் இருந்த
செட்டியார் வங்கி திவாலானது. மூன்றாவது, பொருளாதார மந்த நிலை. அமெரிக்கா நாட்டின் பங்குச்சந்தை வீழ்ச்சியின் காரணமாக
ஒரு விதமான பொருளாதார மந்த நிலை 1929ல் அந்நாட்டில் தொடங்கியது.
சுதந்திர வேட்கையின் காரணமாக அந்தந்த நாட்டு
மக்கள் வெளி நாட்டினர் அனைவரையுமே ஆதிக்கச் சக்தியாக பார்க்கத் துவங்கினர். மேலும், நம் இனத்தவர் அனைவருமே, மிகச் சிலரைத் தவிர, ஆண்கள் மட்டுமே வியாபாரத்திற்குச் செல்வதை
வழக்கமாய் கொண்டிருந்தோம். குடும்பமாக வாழவில்லை. வரும் இலாபத்தையும் முழுவதுமாக, நமது ஊருக்கே கொண்டு சென்றோம். கோவில்களையும், சிறு சிறு தர்மங்களையும் தவிர நாம் அனைத்தையுமே
நமது ஊருக்குக் கொண்டு வந்தோம். நமது ஊரில் தர்மங்களை நன்றாக எல்லோருக்கும்
செய்தோம். ஆனால் பிழைக்கச் சென்ற இடத்தில் பெரிதாகச் செய்யவில்லை. இதனால் தானோ
என்னோவோ, நம்மை ஆதிக்கச் சக்தியாகக் காணத் துவங்கி
விட்டனர்.
1925ல் திவாலான வங்கியின் காரணமாக மேற்கத்திய வங்கிகள் செட்டியார்களுக்குக் கடன்
கொடுப்பதை நிறுத்தின. வங்கி திவலானதற்க்கு நிறைய காரணங்கள் சொல்லப்பட்டன.
மேற்கத்திய வங்கிகளும், இதற்கு ஒரு காரணம். இது நம்மேல் மற்றவர்களுக்கு
இருந்த நம்பிக்கையை இழக்கச் செய்தது. ஆனால், இது நம்மைப் பெரிதாகத் தாக்கவில்லை. இலங்கையில் மட்டுமே இதனால் பாதிப்பு
இருந்தது.
பொருளாதார மந்த நிலையால், பொருள்களின் விலைகள் சரிந்தன. ஏற்றுமதி
குறைந்ததால் பொருள்கள் தேங்கின. கடன் வங்கியவர்களால் கடன்களைத் திருப்பிச் செலுத்த
முடியவில்லை. இதனால் கடனுக்கு ஈடாக கொடுத்த அசையும் மற்றும் அசையா சொத்துக்கள்
எல்லாம் செட்டியார்கள் வசம் வந்தன. அதை விற்கவும் முடியவில்லை, அதை வைத்துக்கொண்டு என்ன செய்வது என்றும்
தெரியவில்லை. ஏனென்றால் நாம் செய்ததோ நிதி சார்ந்த தொழில். நமது தேவையும் நிதி
மட்டுமே. மேலும் நாம் வணிகம் செய்யத் தனியாக சென்றவர்கள். நாயர் (Nair, 2013) என்ற ஆராய்ச்சியாளரின் கருத்துப்படி, நமது முதலீடு பின்வரும் நாடுகளில்....
நாடு |
முதலீடு |
பர்மா |
62.50 % |
மலேயா & சிங்கப்பூர் |
21.00 % |
இலங்கை |
11.50 % |
மெட்ராஸ் மாகாணம் |
00.80% |
மற்றவை |
04.20 % |
மொத்தம் |
100.00% |
பர்மாவில் நமது முதலீடு 62.50 சதவீதம் என்றால் யோசித்துப் பாருங்கள். அந்த
நாடே செட்டியார்களுடயது என்றே சொல்லலாம். கடனைத் திருப்பிச் செலுத்த முடியாத காரணத்தால் அந்தக் கடனுக்கு ஈடாக நிலங்கள் எல்லாம், செட்டியார் வசம் வந்துவிட்டன. ஒரு சிலர் செட்டியார்கள் அநியாய வட்டி
வாங்கியதாகவும் ஆடிக்குத் தை ஒரு வருடம் என்று கணக்கிட்டு வட்டி வாங்கியதாகவும்
சொல்வார்கள். ஆனால் அது தவறு. எந்தவொரு ஆணைய அறிக்கையின் படியும் அது
ஆவணப்படுத்தப்படவில்லை. ஒரு சிலர் 1930க்குப் பிறகு அதிக வட்டி வாங்கியதாகக் கூறப்படுகிறது. இது பொருளாதார மந்த
நிலையினால் வந்த வினை, மற்றும் நம்முடன் போட்டி போட இயலாத இயலாமையால்
சீனர்கள் பர்மியர்கள் மனதில் தூவிய நச்சு விதை.
இதே சமயத்தில் தான் (1930) இந்தோ பர்மீஸ் கலவரம் மூண்டது.
செட்டியார்களையும் அவர்கள் இந்தியர்களாகப் பார்த்தனர். அப்பொழுது நிறைய சட்டங்கள்
இயற்றப்பட்டு நமது வணிகம் சுருக்கப்பட்டது. வட்டி மற்றும் கடன்கள், அரசாங்கம் நிர்ணயித்த விலைக்கே கொடுக்க
வேண்டும். 1938 ஆம் வருடம், நன்றாக விளைகின்ற நிலங்கள் அனைத்தும் நமது பகுதிகளில் இருந்த போதும், புதிதாகக் கடன் வழங்க வழி இல்லை என்ற நிலை.
1932ல் இலங்கை அரசாங்கம் வருமான வரிச் சட்டத்தில் (Income Tax Ordinanace, 1932) பல்வேறு வரிகளைச் செட்டியார் வணிகத்தின் மீது
கொண்டு வந்தனர். பணப்பரிமாற்ற சட்டத்தின் மூலம், பல்வேறு நிபந்தனைகளை விதித்து அந்த வணிகத்தையும் இலங்கை வங்கியின் கீழ் கொண்டு
வந்தனர். அதனால் நிதி வணிகம் செய்ய இயலாத நிலைக்குத் தள்ளப்பட்டோம். செட்டியார்கள்
இலங்கைக்குச் சென்றது வணிகம் செய்யவே தவிர அங்கு வீடு வாசல் வாங்கிக் கொண்டு இருக்க
வேண்டும் என்பதற்கு அல்ல. 1925 முதல் இந்தியாவில் இருந்து இலங்கைக்குச் சென்ற
நிதி குறைந்து, இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு அதிக அளவில்
கொண்டு வரப்பட்டது.
இதே காலகட்டத்தில் தான், காலனியாதிக்கத்தில் இருந்த எல்லா நாடுகளிலும், வங்கிப் பணிகளை ஆராய ஒரு ஆணையம்
உருவாக்கப்பட்டது. அதன் பரிந்துரைகளின் பேரில் மத்திய வங்கிகள் உருவாக்கப்பட்டு, நிதி சம்பந்தமான அனைத்துப் பணிகளும் அதன் கீழ்
சென்றன.
ஒரு சில ஆணையங்கள்
Madras Provicial Banking Committee Enquiry – 1929-30
Ceylon Banking Commission – 1934
Burma provincial Banking Enquiry – 1930 and so on.
இதையெல்லாம் தவிர, 1939 முதல் 1942 வரை நடந்த இரண்டாவது உலக யுத்த சமயத்தில் பர்மா
காலனியாதிக்கத்திலிருந்து ஜப்பானின் கைக்குச் சென்றது. இந்தியர்கள் எல்லாம்
கிடைத்ததை எடுத்துக் கொண்டு கால் நடையாகவோ, கால் நடைகளின் உதவியுடனோ திரும்பினர்.
ஆனால், மற்ற நாடுகளில் இருந்து நாம் அவ்வாறு வெளியேறவில்லை. நிதி சார்ந்த தொழிலில்
வந்த சில நடைமுறைச் சிக்கலினால், நாம் அத்தொழிலைக் குறைத்துக் கொண்டு வேலைக்குச்
செல்ல ஆரம்பித்தோம். மற்ற புதிய தொழில்களைத் தொடங்க ஆரம்பித்தோம். முருகப்பா குழுமம், செட்டிநாடு குழுமம் உள்ளிட்ட ஒரு சில
செட்டியார்கள் இதை முன்பே கவனித்து, வெள்ளையர்கள் தங்கள் சொத்துகளை விற்பதை ஊன்றிக் கவனித்து, முன் ஜாக்கிரதையாக மற்ற நாடுகளில் புதிதாக
முதலீடு செய்யாமல், அங்கிருந்து வரும் இலாபப் பணத்தை அப்படியே
இந்தியாவில் முதலீடு செய்தனர்.
இவ்வாறு நாம் வர்த்தக சமுகத்திலிருந்து, நிதி சமுதாயமாக மாறி, இப்பொழுது அதிகமாக வேலைக்குச் செல்பவர்களாக மாறி
விட்டோம். மீண்டும் நாம் ஒரு வர்த்தக சமுதாயமாக, கொண்டு விற்று வரும் சமுகமாக, புதிய சூழ்நிலைகளுக்கேற்ப தொழில் செய்யும்
வர்க்கமாக மாற வேண்டும் என்பதே நம் குறிக்கோள்.
No comments:
Post a Comment