அரிமா சங்கத்தின் மூலமாக உதவிபெறும் கொளத்தூரில் இருக்கும் ஒரு தொண்டு நிறுவனத்திற்குப் பொருட்கள் வழங்க நாளை செல்வதாகவும் அதற்கு நானும் வருமாறு எமது அரிமா சங்கச் செயலாளர் அழைத்திருந்தார். நானும் வருவதாக வாக்களித்தேன். அதன் படி இன்று காலை 8.30 மணியளவில் ரெடியாயிப் பெருங்களத்தூர் பஸ் ஸ்டான்ட் வந்தேன். நான் அங்கு வருவதற்கும் கோயம்பேடுக்கு செல்லும் ஒரு அரசாங்க AC பஸ் வருவதற்கும் சரியாக இருந்தது, அதில் ஏறிக் கோயம்பேடுக்கு வந்தேன். இன்னும் செயலாளர் வரவில்லை. நான் அங்கு வந்த தகவலை தொலைபேசி மூலம் செயலருக்குத் தெரியப்படுத்தினேன். அவரும் ரோடு வேலை நடப்பதினால் சுற்றித்தான் வரவேண்டும், இன்னும் 10 அல்லது 15 நிமிடங்களில் இங்கு இருப்பேன் என்று உறுதி அளித்ததார். நானும் கொஞ்ச நேரம் நடக்கலாம் என்று டவுன் பஸ் வரும் இடத்திற்குச் சென்று அமர்ந்தேன். மனிதர்களை ரசிப்பதில் ஒரு அலாதி இன்பம். எத்தனை விதமான மனிதர்கள்.... எத்தனை விதமான எண்ண ஓட்டங்கள் ஒவ்வொருவர் மனதிலும்..... கண்களைப் பார்த்தாலே ஆயிரம் கதைகள் சொல்லும். முக பாவனையோ மேலும் பலவற்றைச் சொல்லும் போல.....
நான் அமர்ந்து இருந்த இடத்திற்கு அருகில் சில
நடத்துனர்கள் நின்று அளவளாவிக் கொண்டிருந்தார்கள். இது எலக்சன் டைம் அல்லவே.....
அவர்களது பேச்சும் அதைப் பற்றியே இருந்தது. அதில் ஒருவர், “எல்லாம் இலவசம் இலவசம்
என்று கொடுக்கிறார்கள். போற நிலைமையைப் பார்த்தா எல்லோரையும் சோம்பேறியாக ஆக்கி
விடுவார்கள் போலிருக்கிறதே....” அதற்கு மற்றொருவர், “இன்னும் கொஞ்ச நாள் தான்
அண்ணே.... எல்லோரோரையும் பிச்சை எடுக்க வைத்துவிடுவார்கள் போல.....” மூன்றாம்மவரோ
“இன்னும் கொஞ்ச நாள்ல கல்யாணம் பண்ணினா குழைந்தை ப்ரீன்னு ஒரு அறிக்கை வந்தாலும்
வரலாம்..... ஆக மொத்தத்தில் தமிழ்நாடு குட்டிச்சுவரா போயிடுச்சு. இன்னும் பணி
நிறைவு பெற்று செல்லும் நமது தோழர்களுக்கு பணிக்கொடை வழங்க காசில்லை என்று
சொல்லும் அரசு, எப்படி இவ்வளவையும் இலவசமாக கொடுக்க முடியும். மக்கள் இந்த
தேர்தல்ல யோசிச்சு ஓட்டு போடணும். ம்ம்.... பார்க்கலாம்.... எனக்கு டைம்
ஆயிடுச்சு. நான் கிளம்பறேன். அடுத்த சிங்கில்ல பார்க்கலாம்” என்று கூறிச்
சென்றார்.
வேகமாக மிகவும் பதட்டத்துடன் சென்ற ஒரு நபர்,
“அண்ணே,,,, வேலூர்க்கு பஸ் எங்கு கிடைக்கும்” என்றார், “உள்ளே ரூட் பஸ் ஸ்டான்ட்
இருக்கு, இரண்டவது பிளாட்போர்மில் பஸ் கிடைக்கும்” என்றார். அதற்க்கு அவர் நன்றி
கூட தெரிவிக்கவில்லை..... அவசர அவசரமாக ஓடிச் சென்றார். அவ்வளவு தலை போகும் அவசரம்
என்று நினைக்கிறேன். ஒரு பாட்டி பஸ்ஸில் ஏற முடியாமல் தலைசுமையுடன் நின்று
கொண்டிருந்தது. கீரை அல்லது காய்கறி விற்கும் மூதாட்டி என்று நினைக்கிறன்.
இப்பொழுதும் உதவிசெய்யும் மனப்பான்மையுடன் நிறைய இளைஞர்கள் உள்ளார்கள் போலும். பஸ்சின்
உள்ளே இருந்து ஒரு இளைஞன் மூதாட்டியின் தலைச்சுமையை வாங்கி உள்ளே வைத்து உதவி
செய்தார்.
இருவர் நடந்து சென்றனர். கல்லூரி மாணவர்கள்
என்று நினைக்கிறேன். “மாப்ள.... நம்ம இப்ப எல்லாம், வெற்றி நடைபோடும் அரியர்ஸ்
மாணவர்கள் மாப்ள. எங்க அப்பா எப்ப பாத்தாலும் கேப்பாரு, எப்படா இந்த அரியர்ஸை
முடிக்கப் போறேன்னு.... நானும் அதையே தான் ஏம் மனசுக்குள்ள கேட்டுக்கிட்டே
இருப்பேன். எல்லாத்துக்கும் ஒரு காலம் வரணும்ல.....” நான் என் மனதிற்குள்
நினைத்துக்கொண்டேன் “திருவள்ளுவரின் ஊழ் கோட்பாடு மற்றும் சிவஞான போதம் போன்ற
தத்துவங்கள் கூட, இப்பொழுதைய மாணவர்களுக்கு தெரியும் போல...”
என்னுடைய அருகில் ஒரு ஹிந்தி பேசும் முஸ்ஸல்மான்
அமர்ந்திருந்தார். அவர் அவ்வப்பொழுது யாருடனோ, தான் வந்து விட்டதாகவும் பஸ் நம்பர்
149 நிற்கும் இடத்திற்கு அருகில் அமர்ந்து இருப்பதாகவும் கூறிக் கொண்டு இருந்தார்.
பின்னர் நீண்ட நேரமாக அழைப்பு எதுவும் வரவில்லை என்றவுடன், அழைத்த எண்ணை தேடினார்.
அவரால் கண்டறிய முடிவில்லை. அது ஒரு வாட்சப் கால் என்று நினைக்கிறன். என்னிடம்
“தம்பி இப்பொழுது எனக்கு ஒரு வாட்சப் கால் வந்தது. அந்த நம்பரை எனக்கு எடுக்க
தெரியவில்லை. எப்பிடி எடுப்பது?” என்றார். நான் அதை எடுத்துக் கொடுத்தேன்.
அவருக்கு ஒரு 80 வயதிருக்கலாம். இந்த நிலையிலும், அவர் திடகாத்திரமாக இருப்பதை பார்த்து,
என்னை நானே சலித்துக் கொண்டேன்.
ஒருவர் என்னிடம் வந்து “பெங்களுருக்கு ஒரு நல்ல
பஸ் கிடைக்குமா” என்று கேட்டார். நான் அவரிடம் “நல்ல பஸ் என்றால்?” ஆம்னி பஸ்
பற்றி கேட்கிறார் என்ற நினைப்பில் நான் கேட்டேன்.
அதற்கு அவர், “இல்லை புஷ் பேக் சீட் அல்லது எதவாது
AC பஸ்” என்று இழுத்தார். அவர் நான் அவரை கேலி செய்வதாக நினைத்து விட்டார் போல.
நான் உடனே, “உள்ளே செல்லுங்கள். 2 வது அல்லது 3
வது பிளாட்பாரத்தில் பஸ் கிடைக்கும், நல்ல பஸ்ஸாகவே கிடைக்கும்” என்றேன்.
சிரித்துவிட்டு நன்றி கூறி சென்றார்.
என்னுடைய கைபேசி அழைத்தது. செயலாளர் கிருஷ்ணன்
அழைத்திருந்தார்.
“அண்ணே சொல்லுங்க.... வந்துட்டீங்களா.... எங்கெ
வரட்டும்”
அதற்கு அவர், “அண்ணே நான் பஸ் ஸ்டான்ட்
ஆப்போசிட்ல இருக்க பாரத் பெட்ரோலியம் பங்க் முன்னால் நிக்கிறேன்” என்றார்
“சரி அண்ணே.... இந்தோ நான் கிராஸ் பண்ணி வர்றேன்”
நான் ரோடு கிராஸ் செய்து அவரின் வண்டியில்
முன்பக்கத்து இருக்கையில் அமர்ந்துகொண்டேன். போகும் வழியில், MMDA காலனியில் வேறொரு
அரிமா நண்பர் நிற்பதாகவும் அங்கு அவரைப் பிக்கப் செய்துகொண்டு செல்லலாம் என்றும்
கூறினார். நான் தலையாட்டி என்னுடைய சம்மதத்தை கூறினேன். MMDA காலனியில், லோகேஷ்
என்ற அரிமா சங்க உறுப்பினர் நின்றிருந்தார். அவரையும் அழைத்துக்கொண்டு நாங்கள்
அண்ணா நகர் ஆர்ச்சை கடந்து சென்றோம். கிருஷ்ணன் அண்ணன் அப்பொழுது தலைவரை அழைத்து
எங்கே வந்து கொண்டிருப்பதாக கேட்டார்கள். அதற்கு அவர், மேலும் ஒரு அரிமா நண்பருடன்
தி.நகர் தாண்டி வந்து கொண்டிருப்பதாகவும் இன்னும் ஒரு அரை மணி நேரத்தில், வழக்கமாக
சந்திக்கும் அண்ணாநகர் இடத்திற்கு வந்து விடுவதாக கூறினார். நாங்கள் அப்பொழுது
அண்ணா நகர் பார்க் அருகில் வண்டியை நிறுத்தி விட்டு, ஒரு தேநீர் அருந்தலாம் என்று
நினைத்தோம்.
லோகேஷ் சென்று டோக்கன் வாங்கி வந்தார். நல்ல ஒரு
அருமையான தேநீர். பக்கத்தில் ஒரு அய்யப்பன் கோயில். எதோ ஒரு பங்குனி மாத பூஜை
என்று நினைக்கிறன். எல்லோரும் மிக பய பக்தியோடு, இறைவனை தரிசித்துவிட்டு, கையில்
அன்னதான பிரசாத கவருடன் செல்கின்றனர். கர்ம வினை தீர கோயில் செல்வதற்கு பதிலாக, பரிகாரத்திற்காகவும்,
இந்த பிறவியில் செய்த, செய்யப் போகின்ற பாவங்களுக்கு அட்வான்சாக கோயில் செல்லும்
பக்தர்களைப் பார்த்தால் பரிதாபமாக உள்ளது. இந்த நிலை மாற அந்த அய்யப்பன் தான்
அருள் புரிய வேண்டும்
நாங்கள் அங்கிருந்து கிளம்பி, வழக்கமாக காரைப்
பார்க் செய்யும் இடத்தில் பார்க் செய்து விட்டு தலைவர் அரிமா மகேஷ்வர் மற்றும்
அரிமா தனசேகர் வருவதற்காக காத்துக் கொண்டிருந்தோம். அப்பொழுது எங்களுடைய பேச்சு
இலங்கையைப் பற்றியும் புத்தத்தைப் பற்றியும் சென்றது. சிறிது நேரத்தில், அவர்கள்
வந்தவுடன், எல்லோரும் ஒரு வண்டியில் ஏறிக்கொண்டு கொளத்தூர் செல்ல தயார் ஆனோம்.
கிருஷ்ணன் அண்ணன் வண்டியை ஓட்டினார்கள்.
அது ஒரு பிரத்தியேகமான அனாதைகள் இல்லம். அங்கு
HIV/ AIDS பாதித்த பெற்றோர்களுக்கு பிறந்த குழந்தைகள் மற்றும் பெண்கள் தங்கும்
இல்லம். ஒரு 40 க்கும் மேற்பட்ட பல்வேறு வயதுடைய குழந்தைகள் அங்கு இருந்தனர்.
அங்கு சென்று அவர்களுக்கான எங்களால் இயன்ற மாதந்திர மளிகைச் சாமான்களை டெலிவரி
செய்தோம். அவர்களுடன் நின்று போட்டோக்கள் எடுத்துக் கொண்டோம். மனதில் ஒரு நிறைவு.
எப்பொழுதோ செய்த ஒரு புண்ணியத்தின் பலன் இப்பொழுது கிடைத்தது போல. என் மனது,
இப்பொழுது வேறு திசையில் சென்றது. எப்படி இவர்கள் இதை நடத்துகிறார்கள். இந்த
குழந்தைகளின் எதிர்க்கலாம் எப்பிடி இருக்கும். இவர்களின் படிப்பு, திருமணம், வேலை
மற்றும் சமூகத்தில் இவர்களின் பிடிப்பு எவ்வாறு இருக்கும் என்றெல்லாம்.
பிரத்தியேகமாக ஏதாவது தேவையா.... அல்லது பொருட்களில் ஏதாவது மாற்றம் செய்ய
வேண்டுமா.... என்று நிர்வாகியிடம் கேட்டோம். அதற்கு அவர்கள் நீங்கள் எது
கொடுத்தாலும், நாங்கள் இங்கே வாங்கிக் கொள்வோம், ஏனென்றால் எல்லாமே இங்கு தேவை
என்று கூறினார்கள்.
நாங்கள் அவர்களிடம் சொல்லிக்கொண்டு கிளம்பினோம்.
வரும் வழியில், ஒரு தேநீர் கடையில் நிறுத்தி, தேநீர் அருந்திவிட்டு செல்வோம் என்று
நிறுத்தினோம். சென்னையின் வெப்பத்தின் கொடுமை.... மிகக் கொடுமை.... ஏப்ரலின்
ஆரம்பமே இப்பிடி என்றால் போகப் போக எப்பிடியோ..... நாம் நமது வரும் சமுதாயதிற்கு
அதிகமான வெப்பத்தையே கொடுத்து செல்கிறோம் என்று ஒரு நினைப்பு. இயற்கை...
நல்லவனுக்கு நல்லவன்...... மீதியை நான் சொல்ல வேண்டுமா.....
தனசேகர் தேநீரும், மற்ற நாங்கள் ஆளுக்கொரு லெமன்
ஜூஸ் குடித்து விட்டு கிளம்பலாம் என்ற போது தனசேகரின் பேன்ட்டில் இருந்து ஒரு
வெள்ளை நூல் நாற்காலியில் இருந்து ஒட்டிக்கொண்டு வந்தது. அதை கவனித்துப்
பார்த்தால் அது வெள்ளை நூல் அல்ல... யாரோ எங்களுக்கு முன்னால் அந்த நாற்காலியில்
உடகார்ந்து விட்டு, அவர்கள் வாயில் இருந்த பப்பில் கம்மை அதில் ஒட்டி வைத்து
இருக்கிறார்கள். அவரின் நேரம், அதில் போய் அமர்ந்து விட்டார். நமது சமூக இளைஞர்களை
சிறிது நேரத்திற்கு முன்பு தான் நல்ல உதவி செய்யும் மனப்பான்மை உடையவர்கள் என்று
கூறினேன். அதே மனதால் இப்பொழுது, இப்படியும் உள்ளார்கள் என்று சொல்ல வேண்டியதாக
உள்ளது. அந்த சூயங்கம்மை தின்று இட்டு ஓரமாக இடலாம் அல்லது ஒரு பேப்பரில் மடித்து
ஓரமாக போடலாம். இது யாரும் சொல்லிக் கொடுத்து தெரிய வேண்டிய விசயமல்ல. ஆனால்
அதைக்கூட சொன்னால் தான் செய்வோம் என்றால் என்ன செய்வது.....
மீண்டும் எல்லோரும் வாகனத்தில் ஏறிக்கொண்டு
திரும்பி வந்து கொண்டிருந்தோம், அந்த அந்த இடத்தில் அவரவர்களை இறக்கி விட்டு
விட்டு கிருஷ்ணன் அண்ணன் என்னை கோயம்பேடுவில் இறக்கி விட்டார்கள். நான் 104 C
பஸ்சுக்காக காத்துக் கொண்டிருந்தேன். அப்பொழுது, பஸ் ஸ்டான்ட் மூலையில் பாய்
விரித்து படுத்துக் கொண்டிருந்தது ஒரு குடும்பம். இவர்களுக்கென்று வீடில்லை.
இவர்கள் அங்கு கிடைக்கும் ஏதாவது ஒரு வேலையை செய்து கொண்டு, அங்கேயே சமைத்து,
உண்டு, உறங்கி வாழ்க்கையை நடத்துபவர்கள்.
அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்த போதே, அங்கு
படுத்திருந்த ஒரு பெண், சுமார் ஒரு 45 வயதிருக்கும், இன்னொரு அதே வயதுடைய பெண்ணைப்
பார்த்து “நீயெல்லாம் அம்மாவா..... நீயெல்லாம் அம்மாவா...” என்று கேட்டுக் கொண்டே
சென்றாள். அப்பொழுது, அந்த இன்னொரு பெண்ணின் அருகிலிருந்த ஒரு இளைஞன் “ஏய்.... நீ யாரு இதப்பத்தி கேக்க.....”
என்று பாய்ந்து வந்தான். அதற்குமுதல் பெண்மணி, “டேய் பொட்டை போயிடு.... வேணாம்.....”
என்று மேலும் சில வார்த்தைகள் பேசினாள். இன்னொரு பெண்மணியோ, பயந்து ஒரு ஓரமாக
ஒட்டிக் கொண்டு நின்றாள். முதல் பெண்மணியின் கூட இருந்த ஒரு இளைஞன் திடீர் என்று
முன்னால் வந்து அந்த இளைஞனை அடிக்க வந்தான். இருவருக்கும் மிகப் பெரிய ஒரு சண்டை
போல் தோன்றியது. அப்பொழுது, முதல் பெண்மணி, மற்ற பெண்மணியைப் பார்த்து “ஏண்டி
அம்மா வேஷம் போடுற..... உன்னையப் பத்தி எனக்கு தெரியாதா... “ என்று சொல்லிக்
கொண்டே வந்து அவளை அடித்தாள்.
இதைப் பார்த்த சில பிச்சை எடுப்பவர்களும்,
இவர்களைப் போன்றே அங்கேயே உண்டு உறங்கி வாழ்பவர்கள் சிலரும் தங்களுக்குள்ளேயே
ஏதேதோ பேசிக் கொண்டு வேடிக்கை பார்த்தனர். பஸ் ஸ்டான்ட் வருபவர்களுக்கும், பஸ்ஸில்
செல்பவர்களுக்கும் ஒரு வேடிக்கையாக இருந்தது. யாரும், அருகில் சென்று ஒன்றும்
செய்யவில்லை.
எனக்கு நான் செல்ல வேண்டிய 104C பஸ் வந்தது.
நான் பஸ்ஸில் ஏறி அமர்ந்தேன்.... பஸ் மெதுவாக செல்ல ஆரம்பித்தது. இவர்களின் காட்சி
மெல்ல மறைய ஆரம்பித்தது. கொஞ்ச தூரம் சென்றவுடன், ஒரு பயணி ஏறுவதற்காக பஸ்
நின்றது.
நன்றாக அடி வாங்கிய அதில் ஒரு இளைஞன், காவல்
அதிகாரியுடன் காட்சி நடந்த இடத்திற்கு சென்றான். என்னுடைய பேருந்து கிளம்பி விட்டது.
விளிம்பு நிலை மக்களின் வாழ்க்கையில் எத்தனை ஒரு
வேறுபாடு..... இவர்களுடைய வாழ்கையில் காமம் கோபம் குரோதத்துக்கு முன்னுரிமை உள்ளது
போல.....
No comments:
Post a Comment