Thursday, July 8, 2021

மூதுரை பாடலும் & நண்பர் கேட்ட நல்ல ஒரு கேள்வியும்

பாடலும் விளக்கமும்

வெண்பா : 13
கவையாகிக் கொம்பாகிக் காட்டகத்தே நிற்கும்
அவையல்ல நல்லமரங்கள் - சபை நடுவே
நீட்டு ஓலை வாசியா நின்றான் குறிப்பு அறிய
மாட்டாதவன் நன் மரம்

விளக்கம்
கிளைகளோடும், கொம்புகளோடும் காட்டில் நிற்பவை மரங்கள் அல்ல. சபையின் நடுவே ஒருவர் தரும் ஓலையில் எழுதியிருப்பதைப் படிக்கத் தெரியாதவனும், அடுத்தவர் மனதை அறியாதவனுமே மரம் போன்றவன்

 கேள்வி :

மரம் அவ்வளவு மட்டமான உயிரினமாக சித்தரிக்கப் பட்டுள்ளது. வள்ளுவர் குறளிலும் இந்த விதமான குறியீடு உள்ளன. இதை விளக்கமாக தெளிவாக்க தெரிந்த அன்பர்கள் பதிலளிக்கவும் நன்றி.

 என்னுடைய விளக்கம்.

 12ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டதாகக் கருதப்படும் தண்டியலங்காரம் என்னும் இலக்கண நூல் உவமை அணியைக் கீழ்வருமாறு விளக்குகிறது:

 "பண்பும் தொழிலும் பயனும் என்றிவற்றின்

ஒன்றும் பலவும் பொருளொடு பொருள் புணர்த்து

ஒப்புமை தோன்றச் செப்புவது உவமை" 

 

சொல்ல எடுத்துக் கொண்ட பொருளை வேறு ஒரு பொருளுடனோ அல்லது பல பொருளுடனோ அப்பொருளின் பண்பு,தொழில், பயன் என்பவற்றைக் காரணமாகக் கொண்டு இயைபு படுத்தி இரு பொருள்களுக்கும் இடையே உள்ள ஒப்புமைப் புலப்படும்படி பாடுவது உவமை அணியாகும்.

 

தொல்காப்பியம் தரும் விளக்கமும் இதுவே....

“வினைபயன் மெய்உரு என்ற நான்கே

வகைபெற வந்த உவமைத் தோற்றம்”

 

மரம் என்பது ஒரு மிகப்பெரிய தாவரம். ஆனால் உயிருள்ளது. அதற்கு மிருகங்கள் பறவைகள் மனிதர்கள் போன்று வாழத் தெரியாது. மரங்கள் ஒரே இடத்தில் தோன்றி ஒரே இடத்தில் மறையும். மரம் ஒரு ஓரறிவு உயிரினம். மனிதனுக்கு ஆறறிவு உண்டு. இதனை வள்ளுவர் தனது குறளில் மக்கட்பண்பு என்று கூறுவார்.

 

அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர்

மக்கட்பண்பு இல்லா தவர்

[பொருட்பால், குடியியல், பண்புடைமை]

இதன் பொருள் : மனிதப்பண்பு இல்லாதவர்கள் அரம் போல அறிவுக்கூர்மை படைத்தவர் என்றாலும் ஓர் அறிவு படைத்த மரத்தைப் போன்றோரே.

 

மரத்தினால் மனிதனுக்கும் இந்த உலகத்திற்கும் மிகப் பெரிய நன்மைகள் கிடைகின்றன. இங்கு மரத்தை உவமை கூறியது. அதன் பண்பினால் மட்டுமே, அதன் பயனால் அல்ல.

 

கவையாகிக் கொம்பாகிக் காட்டகத்தே நிற்கும்
அவையல்ல நல்லமரங்கள் சபை நடுவே

நீட்டு ஓலை வாசியா நின்றான் குறிப்பு அறிய
மாட்டாதவன் நன் மரம்

 

“கல்வி அறிவு இல்லாதவனும், ஒருவருடைய குறிப்பை அறியாதவனும், ஆறறிவுடைய மனிதராய்ப் பிறந்தாலும் ஒரறிவுடைய மரத்தினை விட தாழ்ந்தவர்” என்ற அர்த்தத்திலேயே ஔவையார் கூறியுள்ளார். மேலும் அவர் மரங்களை சிறுமைப்படுத்தவில்லை. இவனைக் காட்டு மரங்கள் என்று சொன்னால் மரங்களே கோபித்துக் கொள்ளும் என்றும் இவன் அவற்றைவிட மோசமான மரம் என்னும் சுவையிலேயே இங்கு எடுத்துக்கொள்ள வேண்டும். இதுவே இந்த பாடலின் உச்ச சுவை.

No comments:

Post a Comment

சமதர்மம், சமத்துவம், சகோதரத்துவம் மற்றும் பெண் விடுதலை - 5

  சமதர்மம், சமத்துவம், சகோதரத்துவம் மற்றும் பெண் விடுதலை - 5 அண்ணல் அம்பேத்கர் சுதந்திர இந்தியாவிற்கு எழுதிய அரசியல் சாசனத்தில் தீண்டாமை மற்...