Thursday, July 8, 2021

திருக்குறளும் தலைமைத்துவமும்

எல்லோருக்கும் உள்ள ஒரு பொதுவான ஆசை என்னவென்றால் சாதிக்க வேண்டும், வாழ்கையில் வெற்றி பெற வேண்டும். வெற்றி பெற என்ன செய்ய வேண்டும். கலாம் சொன்னதுபோல கனவு காண வேண்டும். ஒரு இலட்சியக் கனவு. இருந்தால், நம்மாலும் முன்னேற முடியும். மேலாண்மைத் துறையின் தந்தை அல்லது குரு என்று அழைக்கபடும் பீட்டர் ட்ரக்கர் கருத்துப்படி "தலைவர்களின் முக்கியமான பணி, இலக்குகளை தீர்மானிப்பது மற்றும் அதனை எவ்வாறு செயல்படுத்துவது என்பதே". 


நம் தமிழ் இலக்கியத்தில், பதினெண்கீழ்க்கணக்கு நூலான திருக்குறளில், வள்ளுவர்,

"வெள்ளத்து அனைய மலர்நீட்டம் மாந்தர்தம் 
உள்ளத்து அனையது உயர்வு"  - என்று கூறுகிறார்.

ஒருவனுடைய கனவு இலட்சியம் நிறைவேறினால் அவன் வெற்றி பெற்றவனகிறான். இதையே தான் வள்ளுவர் தமது குறளில் எண்ணங்கள் என்ற கருத்தில் கூறுகிறார். நம்முடைய எண்ணங்கள் எவ்வளவு உயர்ததாக இருக்குமோ அந்த அளவு உயர்ந்ததாக இருக்கும் நாம் பெரும் வெற்றியும். நீரில் இருக்கும் பூவின் தண்டு, நீர் நிலை எவ்வளவு ஆழம் இருக்குமோ அந்த அளவு நீளம் உள்ளதாக இருக்கும்,  நீரின் ஆழம் அதிகரிக்க அதிகரிக்கத் தண்டின் நீளமும் அதிகமாகிக் கொண்டு இருக்கும். அது போல மனிதர்கள் உள்ளத்தில் உள்ள எண்ணங்கள் எவ்வளவு உயர்ந்ததாக இருக்குமோ அந்த அளவுக்கு தங்கள் வாழ்கையில் உயர்ந்த வெற்றியை பெறுவர் என்று திருவள்ளுவர் கூறுகிறார்.   

எண்ணங்கள் இருந்தால் மட்டும் போதாது. அதை செயல்படுத்த மனதில் உறுதி வேண்டும். இதை திருவள்ளுவர் உறுதி, துணிவு, அஞ்சாமை என்று பல விதங்களில் கூறுகிறார். 

"அஞ்சாமை ஈகை அறிவூக்கம்  இந்நான்கும் 
எஞ்சாமை வேந்தர்க் கியல்பு".

ஒரு தலைவனுக்குத் தேவையான முக்கியமான பண்புகளில் அஞ்சாமை ஒரு முக்கியமான பண்பு. எடுத்த கொள்கையில் உறுதியாக இருப்பது. அல்லது நினைத்த காரியத்தில் நாம் அஞ்சாமல் துணிவுடன் இருப்பது முதல் பண்பாகும். அச்சமே நம் முதல் எதிரி. அச்சம் இல்லையென்றால் ஒருவரால் தனது கனவை நோக்கி முன்னேறிச் சென்று வெற்றி பெற முடியும்.  உதாரணமாக நாம் ஒரு தொழிலை தொடங்க முற்படுகிறோம் என்றால், அந்த தொழிலில் ஏற்கனவே உள்ளவர்களைப் பார்த்து அஞ்சி நிற்கக் கூடாது. அவர் முன்னேறியதைப் போலவே நாமும் முன்னேற வேண்டும் என்று எண்ணம் கொண்டு அதையே நகல் எடுத்துச் செய்யவும் கூடாது. இலக்குகள் ஒன்றே. அனால் அதை அடைவதற்கு, நம்முடைய வழியில் சென்று வெல்ல துணிவு வேண்டும்.  

"எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு".

ஒரு செயலை செய்வதற்கு முன் அதைபற்றி நான்கு யோசித்து ஒரு நல்ல திட்டம் தயாரிக்க வேண்டும். திட்டம் தயாரானதும் செயல்படுத்த வேண்டும். செயல்படுத்தப்பட்டபின் திட்டம் தயாரிப்பது  அல்லது அதை பற்றி சிந்திப்பது நமக்கு தோல்வியையே தரும்.  துணிந்து இறங்கிய பின், அதைபற்றிக் கவலை கொள்ளக் கூடாது. அதில்  வெற்றியோ தோல்வியோ, இரண்டுமே நல்ல பலன்கள் தான். வெற்றி நமது பெருமையை மற்றவருக்கு சொல்லும். தோல்வியோ, நமக்கு ஒரு பாடத்தைக் கற்றுக் கொடுக்கும். இதையே மற்றொரு குறளில் 

"தெரிந்த இனத்தோடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்கு
அரும்பொருள் யாதொன்றும் இல்"

இலக்குகள் தீர்மானித்தபின், அதை பற்றி நான்கு தெரிந்தவர்களுடன் உரையாடி, தாமாகச் சிந்தித்து செய்பவர்களுக்கு தோல்வி என்பதே இல்லை ஏன்று பொருள் கொள்ளலாம். 

"அஞ்சும் அறியான் அமைவிலன் ஈகலான் 
தஞ்சம் எளியன் பகைக்கு"

இக்குறளில் அச்சம் கொண்டவனும், கல்வி அறிவு இல்லாதவனும், பிறரோடு ஒத்துக் குழுவாகச் செயல்படும் தன்மை இல்லாதவனும், கொடை அளிக்காதவனும் பகைவரால் எளிதில் வீழ்த்தப்படுவான். இதையே தான் வேறு மாதிரியாக இந்தக் கட்டுரையின், இரண்டாவது குறளிலும் கூறுகிறார் வள்ளுவர். ஒருவரை பார்த்து நாம் அஞ்சத் தொடங்கினால், அவ்வச்சமே நம் ஆற்றலைக் குறைத்து எதிரியை ஜெயிக்க  வைத்து விடும். 

ஈகை என்பது ஒரு தலைவனுக்கு வேண்டிய மிகச் சிறந்த பண்பாகும். திருவள்ளுவர் அவர் காலத்தில் ஈகை என்பதை, படை மற்றும் குடிகளுக்கு அரசர் வழங்கும் கொடை என்றே கருதியிருக்கலாம். ஆனால் தமிழ் இலக்கியம்  ஒரு கடல். கடல் மீனவனுக்கு மீனை  கொடுக்கும், உப்பு குரவனுக்கோ உப்பை கொடுக்கும். உலகம் செழிப்பாக இருக்க எல்லோருக்கும் மழையை கொடுக்கும். காற்றைக் கொடுக்கும். இது போலே தமிழும், குறளும் ஒரு கடல். படிப்பவர்களுக்கு படிக்கும் சூழ்நிலைகளுக்கு, ஏற்ப காலத்துக்கு ஏற்ப தமிழ் இலக்கியம் புதுப் புது அர்த்தத்தை தந்து கொண்டே இருக்கும்.  என்னுடைய நண்பர் ஒருவர், மிகுந்த தெய்வ நம்பிக்கை உள்ளவர். வழக்கமாகக் கோயில் திருவிழாக்களில் தமிழ் தேவாரம், திருப்புகழ் பாடுவதில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். அவர் ஒருமுறை பேசும் போது, நான் கோயில்களில் தவறாமல் தமிழ் திருமுறைகளைப் பாடுவதில் விருப்பம் கொண்டவன், ஆனால், ஒவ்வொருமுறை பாடும் போதும் அது எனக்கு ஒரு புது அர்த்தத்தைத் தருகிறது என்றார். அது போல தான் இந்த கருத்தும். இந்த இடத்தில நாம் புரிந்து கொள்ள வேண்டியது, ஈகை என்பது, தன்னிடத்தில் உள்ளவற்றை மற்றவர் நலனுக்காக கொடுப்பது. ஒரு தலைவனுக்கு, இருக்க வேண்டிய பண்புகளில் ஒன்று ஈகை. தலைவனிடம் ஒரு செயல் திட்டம் இருக்கும். ஆனால், அது அவனுடன் கூட இருபவர்களுக்கோ, அவனுக்கு கீழ் இருப்பவர்களுக்கோ  எவ்வாறு செயல்படுத்த வேண்டும் என்று தெரியாது. அதை ஒரு தலைவனே, மற்றவர்களுக்கு விளக்க வேண்டும். அதுதான். இப்பொழுது மிகப் பெரிய கம்பனிகளில் நடக்கும் செயல் விளக்க கூட்டங்கள். 

அறிவூக்கம்  - அறிவு மற்றும் ஊக்கம்... அறிவு என்பது முடிவில்லாத ஒரு ஞானம். வள்ளுவர் இதனை ஒரு குறளில்,

தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு

மணலில் தோண்டிய அளவு நீர் ஊறுவதைப் போல, மக்கள் கற்கும் அளவு அவர்களின் அறிவு வளரும் என்பது வள்ளுவரின் வாக்கு. ஒரு தலைவன் என்பவன் தன்னை எப்பொழுதுமே வளர்த்துக் கொண்டே இருக்க வேண்டும். தன்னையும், தன்னைச் சுற்றியும் நடப்பவற்றை அறிந்து, தெரிந்து, புரிந்து கொள்ள வேண்டும். தன்னை எப்பொழுதுமே வளப்படுதிக் கொண்டே செல்ல வேண்டும். இல்லையென்றால், புதுப் புது தொழில் நுட்பங்களையும், வளர்சிகளையும் தெரிந்து கொள்ள முடியாமல் காலத்திற்குத் தகுந்தார் போல் தம்மை மாற்றிக் கொள்ள முடியாமல் போகும். ஞானத்திற்க்கு என்று ஒரு அளவு கோல் இல்லை. கற்க கற்க வளர்ந்து கொண்டே இருக்கும். ஒரு தலைவனுக்கு அழகு மற்றவர்க்கு கேடு விளைவிக்காத அறம் சார்ந்த செயல்களையேச் செய்ய வேண்டும். அதற்கு கல்வி அறிவு வேண்டும். இதை வள்ளுவர் மேலே குறிப்பிட்ட ஒரு குறளில் "அஞ்சும் அறியான் அமைவிலன் ஈகலான் தஞ்சம் எளியன் பகைக்கு" என்றார். 

இது இருந்தால் மட்டும் போதாது. ஒரு தலைவனுக்கு தேவை ஊக்கம். ஒரு செயலை செய்யும் பொது அதை பாதியிலேயே விட்டு விடாமல் தொடர்ந்து செய்து சாதிக்க ஊக்கம் வேண்டும். ஒரு செயலில் நமக்கு மிகுந்த ஈடுபாடு இருக்கும் போது ஊக்கம் தானாகவே வரும். ஈடுபாடு குறைந்து, கடமையே என்று செய்தால் ஊக்கம் வராது. ஈடுபாடு, எப்பொழுது வரும்? ஒரு செயலை நாம் மிகவும் விரும்பி செய்தால் ஈடுபாடு வரும். 

"அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும்
பெருமை முயற்சி தரும்"

எந்த ஒரு செயலையும் விரும்பிச் செய்தால் வெற்றி காண முடியும். ஆளுமைதிறன் என்பது என்னால் இதை செய்ய முடியும் என்பதே. இதையே தான் மேலாண்மை நூல்களில் பக்கம் பக்கமாக எழுதுகிறார்கள். அதையே திருவள்ளுவர் தமது குறளில் ஒன்றேமுக்கால் அடியில் சொல்கிறார். 

"முயற்சி திருவினை யாக்கும் முயற்றின்மை 
இன்மை புகுத்தி விடும்"

முயற்சிகள் ஜெயிக்கலாம் அல்லது தோற்கலாம். இரண்டுமே நமக்கு ஒரு நல்ல படிப்பினையைத் தரும். ஆனால் முயலாமல் இருப்பது, தோல்வியே.... அதில் நமக்கு எந்த ஒரு படிப்பினையும் கிடைக்கப் போவதில்லை. அதனால் கிடைக்கும் பயன்கள் சோகம், வருத்தம், பொறாமை, கடன், கஷ்டமே....

நமக்கு எல்லோருக்கும் தெரிந்த ஒரு மிகப் பெரிய விஞ்ஜானி, தாமஸ் ஆல்வா எடிசன், அவருடைய ஒரு பொன்மொழி, "என்னுடைய முயற்சிகள் என்னைப் பல தடவை கை விட்டதுண்டு, ஆனால் நான் ஒரு முறை கூட என் முயற்சியைக் கை விட்டதில்லை". 

ஒரு தலைவனுக்குத் தேவையான ஆளுமைத்திறனை வளர்க்க அற்புதமான விளக்காக இருப்பது நமது திருக்குறள். திருக்குறள் ஒன்றை ஒருவன் முழுமையாகப் படித்துத் தெரிந்து கொண்டு விட்டால் அது தரும் ஞானம் அளவிட முடியாதது. இதைப்போல் ஒரு உயர்வான ஒப்பற்ற இலக்கியம் வேறு எங்கும் கிடையாது. மணிமேகலையின் அட்சய பாத்திரம் போல அள்ள அள்ள குறையாதக் கருத்துச் சுரங்கம். இலங்கை ஜெயராஜ் என்ற பேச்சாளர், அடிக்கடி குறிப்பிடும் ஒன்று, "தமிழைப் படிக்க வேண்டுமா? திருக்குறளை படி. தெய்வத்தை படிக்க வேண்டுமா? திருவாசகம் படி" என்பதே. எவர் எம்மதத்தைச் சார்ந்தவர் என்றாலும், எல்லோருடைய வீடுகளிலும் இருக்க வேண்டிய இரண்டு முக்கியமான புத்தகங்கள், திருக்குறளும், திருவாசகமும். 

No comments:

Post a Comment

சமதர்மம், சமத்துவம், சகோதரத்துவம் மற்றும் பெண் விடுதலை - 5

  சமதர்மம், சமத்துவம், சகோதரத்துவம் மற்றும் பெண் விடுதலை - 5 அண்ணல் அம்பேத்கர் சுதந்திர இந்தியாவிற்கு எழுதிய அரசியல் சாசனத்தில் தீண்டாமை மற்...