Thursday, July 8, 2021

சிறுகதை - கண்ணன் வருவான்

நானும் சுப்புவும் பால்யகால நண்பர்கள். ஒன்றாகவே படித்து ஒரே அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்கள். ஒன்றாகவே அலுவலகம் வந்து விட்டு ஒன்றாகவே திரும்பியும் செல்வோம்.

 

இன்று நான் சுப்பு வருவதற்காகத் தெருமுனையில் நின்று காத்துக்கொண்டிருந்தேன். எப்பொழுதும் வரும் நேரம் தவறியும் சுப்பு வரவில்லை. யதேச்சையாக நேற்று வரும் வழியில் இருவரும் பேசிக்கொண்டு வந்தது எனக்கு நினைவுக்கு வந்தது. இன்று சுப்புவின் பெண்ணைப் பெண் பார்க்க வருகிறார்கள். அதனால் அவன் விடுமுறை. நான் பின் காத்திராமல் அலுவலகத்திற்கு சென்றேன்.

மறுநாள் நான் அதே இடத்தில் காத்துக்கொண்டிருந்தேன். இன்றும் மிக நேரமாகியும் வரவில்லை. நானும் வழக்கம் போல அலுவலகம் வந்து விட்டேன். ஆனால் சுப்புவைக் காண முடியவில்லை. பியுனைக் கூப்பிட்டுக் கேட்ட பொழுது இன்னும் வரவில்லை என்று கூறினான். எனக்கோ வேலையே ஓடவில்லை. கொஞ்ச நேரத்தில் 11 மணியளவில், சுப்பு அலுவலகத்துக்குள்ளே நுழைந்தான். அவன் முகமே சரியில்லை, மிகவும் சோர்வாகக் காணப்பட்டான்.

 

நான் அவனிடம் சென்று "என்ன ஆயிற்று?.... எல்லோரும் நலம் தானே?" என்றேன்.

 

ஆனால் யாருக்கோ பதில் சொல்வது போல "ம்...... ம்..... நலம்தான்" என்றான்.

 

நான் மிகவும் யோசனையுடன் என் மேசைக்குத் திரும்பினேன். பின்னர் அலுவலக வேலைகளில் முழ்கிய காரணத்தினால் சுப்புவிடம் எதுவும் கேட்டுக்கொள்ளவில்லை.

 

மாலையில் அலுவலகம் முடிந்தபிறகு வீட்டுக்குச் செல்வோமா என்று கேட்க சுப்புவின் இருக்கையைக் கவனித்த போது அது காலியாக இருந்தது. பியூனிடம் விசாரித்தபொழுது மாலை நான்கு மணிக்கே கிளம்பிவிட்டதாகவும், தலைவலி என்று கூறி பெர்மிசன் வாங்கியதாகவும் கூறினார். இதெல்லாம் எனக்கு மிகவும் புதிராக இருந்தது. நேரே சென்று கேட்டுவிடலாம் என்று சுப்பிவின் இல்லம் நோக்கி விரைந்தேன்.

 

ஆனால் சுப்புவின் வீடு பூட்டி இருந்தது. அடுத்த வீட்டில் இருந்த பெண்மணியிடம் விசாரித்தேன்... அம்மாவும் பிள்ளையும் கோயிலுக்குச் சென்றிருப்பதாகச் சொன்னார்கள். யோசைனையுடன் காத்திருந்தேன். தூரத்தில் கோகிலாவும் மாதவியும் வந்து கொண்டிருந்தார்கள். என் மனம் பழைய நினைவுகளை அசை போட ஆரம்பித்திருந்தன. நானும் சுப்புவும் கோகிலாவைப் பெண் பார்க்கச் சென்றதும், கோகிலா சுப்பு எதிர்பார்த்தது போல ஒரு அழகிய, நன்கு பாடத்தெரிந்த, +2 வரை படித்த பெண்ணாகத் தெரிந்தாள். சுப்புவும் ஒன்றும் குறைந்தவனில்லை. கமலகாசனைப் போல நீண்ட காலர் வைத்த சட்டையைப் போட்டுக் கொண்டு தன்னுடைய சுருட்டை முடியை வைத்துக் காது வரை மூடிக்கொண்டு கூலிங்கிளாஸ் போட்டுக்கொண்டு கதாநாயகனைப் போன்று வந்திருந்தான்.

 

பெண் பார்க்கச் சென்ற பொழுது, கம்பனின் இராமாயணம் போலக், கண்கள் மட்டுமே பேசிக் கொண்டன. மனமும் மனமும் ஒன்றான பின்பு திருமணம் தானே.....


"வாங்க அண்ணே...." என்று கோகிலா என்னை வரவேற்றாள். நானும் நினைவு திரும்பியவனாக "ஆமாம்.... ஆமாம்..... எப்படியம்மா நன்றாக இருக்கிறாயா" என்று கேட்டேன். அவளும் ஒரு மாதிரி பதில் சொல்லாமல் கதவைத் திறந்து கொண்டு உள்ளே சென்றாள். நானும் பின்னாலேயே சென்றேன்.

 

மாதவியைப் பார்த்துக் கேட்டேன், "என்னம்மா செய்து கொண்டிருக்கிறாய்?.... இப்பொழுது தான் சென்று கொண்டிருக்கும் வேலை எப்படி உள்ளது. படித்ததற்கு ஏற்ற வேலை தானே?" என்றேன்.

 

"ஆமா.... அங்கிள்" எப்பொழுதும் கல கலவென்று பேசும் பெண் இப்பொழுது இவ்வாறு சொல்லிக்கொண்டே தன்னுடைய ரூமுக்குள் சென்று விட்டாள்.

 

நான் மீண்டும் கோகிலாவைப் பார்த்து, "இன்னும் சுப்பு வரவில்லையா?" என்று கேட்டேன்.

"எப்பொழுதும் உங்களுடன் தானே வருவார். இது வரும் நேரம் தான். ஏன் நேற்று லீவ் எடுத்ததனால் வேலையை முடித்து விட்டு வருகிறாரா?" என்று பதில் கேள்வி கேட்டாள்.

நான் இப்போழுது யோசிக்க ஆரம்பித்தேன். எதோ நிலைமை சரியில்லை என்று தெரிந்தது. நான் அவளிடம் சுப்பு வந்தால் நான் வந்ததாக சொல்லி விடம்மா என்று சொல்லிவிட்டு புறப்பட்டு வீடு வந்து சேர்ந்தேன்.

எனக்கு எதோ மனம் சரியில்லை. வீட்டுக்கு வந்து சேர்ந்தவுடன் ஏதேதோ யோசித்துக்கொண்டு உறங்கி விட்டேன். காலையில்  இராஜம் தான் வந்து எழுப்பினாள். "இரவு சாப்பிடாமல் தூங்கி விட்டீர்கள் போல.... எல்லாம் வைத்தது வைத்தது போல உள்ளது." என்றாள். நான் ஒன்றும் சொல்லவில்லை. எப்பொழுதும் போலக் குளித்து ரெடியாகி, காலைச் சிற்றுண்டியை முடித்துக்கொண்டு அலுவலகம் கிளம்பினேன்.

எப்பொழுதும் காத்துக்கொண்டிருக்கும் இடத்தில் சுப்பு நின்று கொண்டிருந்தார். அவருடன் சேர்ந்து இருவரும் ஒன்றாக அலுவலகம் வந்தோம். ஆனால் வழக்கத்திற்கு மாறாக நாங்கள் இருவரும் ஒன்றும் பேசிக்கொள்ளாமல் வந்து சேர்ந்தோம். வருகைப் பதிவேட்டில் கையெழுத்தைப் போட்டுவிட்டு "கான்டீன் சென்று வருவோமா?" என்று கேட்டேன். சரியென்று தலையாட்டினர்.

 

இரண்டு கப் டீ வாங்கிக் கொண்டு ஒரு மூலையில் சென்று அமர்ந்தோம். நான் எதுவுமே பேசவில்லை. அமைதியாகச் சன்னல் வழியே பார்த்துக் கொண்டு டீ குடித்துக்கொண்டிருந்தேன். சுப்பு தேநீர் கோப்பையைப் பார்த்துக்கொண்டே நான் ஏதாவது கேட்பேனா என்று யோசித்துக் கொண்டிருப்பது எனக்கு தெரியும். கனத்த மௌனம்..... நானே கலைத்தேன்..... "தேநீர் நன்றாக இல்லையா" என்றேன்.....

 

"அதெல்லாம் ஒன்றும் இல்லை"

 

"பின் என்ன? தேநீர் ஆடை வரும்வரை காத்துக்கொண்டிருக்காமல் குடிக்கலாமே" என்றேன்.....

கேட்டதுதான் தாமதம்..... சுப்புவோ, "இப்பொழுது நடந்து கொண்டிருப்பதை நினைத்தால் என் முகத்தை எந்த ஆடை கொண்டு மறைப்பது?" என்று கேட்டார். நான் அவனின் கையை ஆதரவாகப் பிடித்துக்கொண்டேன். "எதோ பிரச்சினை என்று நான் யூகித்தேன்.... என்னிடம் சொல்லலாம் என்றால் சொல்" என்றேன்....

"உன்னிடம் சொல்லாமல் யாரிடம் சொல்ல போகிறேன்" என்றான்.

 

"பெண் பார்த்தது என்ன ஆயிற்று, எல்லாம் சுபம் தானே"

 

"அந்த ஒரு நிகழ்வு நடக்கவேயில்லை.... நானே மாப்பிள்ளை வீட்டாரை கூப்பிட்டுப் பெண் மேலும் படிக்க வேண்டும் என்கிறாள். அட்மிசனும் கிடைத்து விட்டது. அதனால் படிப்பு முடிந்த பிறகு திருமணம் வைத்துக் கொள்ளலாம் என்றேன். அதற்கு அவர்கள், தாங்களே படிக்க வைப்பதாகக் கூறினார்கள். நான் வேண்டாம், எல்லாம் முடிந்த பிறகு பேசிக்கொள்ளலாம் என்றேன்"

"ஏன் .... பெண் படிக்க வேண்டும் என்று சொல்கிறாளா?"

 

அதற்கு சுப்பு கூறிய பதில் என்னை அதிர்ச்சியடைய வைத்தது.

"அவள் ஏற்கனவே படித்த படத்திற்காக நான் சொன்ன பொய்" என்று சொன்னான்.....

"புரியவில்லை " என்றேன்

 

"பணிபுரியும் இடத்தில் இவளுடன் வலை செய்யும் ஒருவருடன் பழக்கமாம். பழக்கத்தினால் இப்பொழுது இவள் இரண்டு மாதம்....பெண் பார்ப்பதற்கு முன்பு அவன் என்னிடம் வந்து பெண் கேட்பதாக பேசி வைத்துள்ளனர். வேலை விஷயமா மும்பை சென்றவன் அங்கு ஒரு விபத்தில் பெண் பார்க்கும் வைபவத்திற்கு முதல் நாள் காலை இறந்துவிட்டான். இது தெரிந்து இவள் எங்களிடம் விசயத்தைச் சொல்ல நாங்கள் அதிர்ந்தோம். மேலும் அவளிடம் பேசி நிலைமையை சொல்லிச் சரி செய்து கல்யாணம் செய்து விடலாம் என்றால் கர்பவதி....என்ன செய்வது என்றே தெரியவில்லை. கலைத்து விடலாம் என்றால் மனது உடன்பட மறுக்கிறது. உயிர் வந்த பிறகு கலைப்பது குற்றமில்லையா..... நம் உயிரை மாய்த்துக்கொள்ளலாம் என்றால் அதுவும் பாவம். என்ன செய்வது என்றே தெரியவில்லை" என்றான்

 

எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. மேலும் சுப்பு சொன்னான்.... "சங்கரா.... உனக்கு தெரியுமில்லையா.... இது வெளியில் தெரிந்தால், என் சமூகத்தில் எனக்கு எவ்வளவு பெரிய அவமானம் என்று...."

நான் மெதுவாக "சுப்பு... சற்றுப் பொறுமையாக இரு.... யோசிப்போம்" என்றேன். ஆனாலும் சுப்பு கலங்கிக் கொண்டிருந்தான்.... எனக்கு வேலையே ஓடலை... மனதெல்லாம் மாதவி பற்றிய நினைப்புத்தான். கெட்டிக்கார பிள்ளையாயிற்றே. எப்படி ஏமாந்தாள். வீட்டு நிலைமை அறிந்த பெண். எப்படி என்றே தெரியவில்லை. கடைசியாக எனக்கு ஒரு யோசனை தோன்றியது. அதுதான் சரியென்று முடிவெடுத்தேன்.

 

போனவாரம் என்னை மதுரை அலுவலக பொறுப்பெடுத்துக் கொள்ளுமாறு கேட்டார்கள். போக விருப்பமில்லாத காரணத்தினால், முடிவெடுக்க 10 நாட்கள் அவகாசம் கேட்டேன். இப்பொழுது நேரே பொது மேலாளர் அறைக்கு சென்று, மதுரை செல்ல சம்மதம் தெரிவித்தேன். நேராக சுப்புவிடம் வந்தேன். அவன் என்னை நிலையில்லாத மனதுடன் உற்று நோக்கினான்.

"என்னை மதுரைக்கு மாற்றியிருக்கிறார்கள். இரண்டு நாட்களில் செல்லவேண்டும். நானும் என் மனைவியும் மட்டுமே என்பதால் உடனே சரியென்று சொல்லிவிட்டேன். உனக்குச் சம்மதமும் சந்தோசமும் தானே" என்றேன்.

அவன் மேலும் அமைதியை இழந்து "இதில் எனக்கு என்ன சந்தோசம்.... நீயும் இல்லையென்றால் நான் என்ன செய்வேன்..." என்று கலங்கினான்

 

"கலங்காதே.... எல்லாம் நம் நன்மைக்கே..."  என்றேன்

 

"இதில் என்ன நன்மை"

"எல்லாம் மாலையில் சொல்கிறேன். நாம் வழக்கமாக வெள்ளிகிழமைகளில் சந்திக்கும் பூங்காவிற்கு வந்துவிடு.... பேசிக்கொள்ளலாம்" என்று சொல்லிவிட்டு வீட்டுக்கு கிளம்பினேன். மதுரை செல்வதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் அல்லவா....

 

மாலையில் பூங்காவிற்கு சென்றேன். சுப்பு மட்டும் ஒரு பெஞ்சில் தனியாக அமர்ந்திருந்தான். நான் அவனுடன் சென்று அமர்ந்தேன். சுப்பு எதுவும் பெசவில்லை... நானே தொடர்ந்தேன்.

 

"சுப்பு இப்பொழுது உன் பெண் படிக்கப் போகிறாள் என்று தானே சொல்லியிருக்கிறாய்.... அது அப்படியே இருக்கட்டும். நான் இன்னும் இரு தினங்களில் மதுரை செல்கிறேன். மாதவியை நீ என் வீட்டிற்கு அனுப்பி வை. எல்லோரிடமும் அவள் மேல் படிப்பிற்காக வெளியூர் செல்வதாகக் கூறிவிடு. நானும் எனது மனைவியும் உன் பிள்ளையை எங்கள் பிள்ளை போல் பார்த்துக்கொள்கிறோம். பிரசவம் எல்லாம் முடிந்த பிறகு அவளை நான் கொண்டு வந்து உங்களிடம் சேர்க்கிறேன். அதுவரை இந்த விஷயம் நம் இரு குடும்பங்களுக்குள் இருக்கட்டும்... மற்றவற்றைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம்" என்றேன்.

 

"மேலும் , எல்லாம் ஆண்டவன் விட்ட வழி" என்றேன்

சுப்புவும் ஒரு மனதாகச் சம்மதித்தான். மாதவியை அன்று இரவே எங்கள் வீட்டில் கொண்டு வந்து விட்டு விட்டான். என் மனைவியிடம் நான் இதுபற்றி முன்பே சொல்லியிருந்த காரணத்தால் அவள் எதுவும் இதுபற்றி மாதவியிடம் கேட்காமல் எப்பொழுதும் போலப் பேசினாள்.

 

ஆனால் மாதவியோ, நாங்கள் எதுவும் கேட்காமல் பொதுவான விஷயங்களைப்பற்றி மட்டுமே பேசுவதைப் பார்த்துத் திகைத்துப் போனாள். கண்களில் கண்ணீர் முட்டியது. அதைப் பார்த்த எனது மனைவி இராஜம் "கண்ணா.... ஏன் அழுகிறாய்.... உன்னைப்பற்றி எங்களுக்குத் தெரியும். நீ எங்கள் வீட்டுப் பிள்ளை.... எதோ கெட்ட நேரம் எல்லாம் நடந்துவிட்டது. இப்பொழுது வருத்தப்பட்டு ஒன்றும் ஆகப்போவது இல்லை. இனிமேல் நாம் நடப்பதைக் கவனிப்போம்" என்று ஆறுதல் கூறினாள்.

 

மதுரை செல்ல வேண்டிய நாளும் வந்தது. நாங்கள் மூவரும் மதுரை சென்று சேர்ந்தோம். தங்குவதற்கான வசதிகளை கம்பனி செய்து தந்திருந்ததால் வேலை மிச்சம். முதல் நாள் சென்றுப் பொறுப்பு ஏற்றுக்கொண்டேன். முதல் நாள் என்பதால் வேலை ஒன்றும் பெரிதாக இல்லை. எல்லாம் அறிமுக கூட்டங்களாகவும், முந்தய நடப்புக்களை விவரிப்பதுவுமாகச் சென்றது.

 

மாலை வீடு சென்றதும் மாதவியை அழைத்து இங்கு ஒரு பெரிய பல்கலைகழகம் உள்ளது என்றும் ஏதாவது ஒரு மேல் படிப்பில் சேருமாறும் கூறினேன். அவள் ஏன் எதற்காக என்றாள்....

 

"இப்படி ஒரு காரணத்தைச் சொல்லித்தான் ஊரிலிருந்து இங்கு வந்தாய்....  நாளை யாராவது ஏதாவது கேட்டால் பதில் சொல்ல வேண்டும் அல்லவா..." என்றேன். அவளும் நிலைமையைப் புரிந்துகொண்டு "சரி...." என்றாள்.

 

இப்பொழுது அவளுக்கு மூன்றாம் மாதம். இராஜத்தை அழைத்து, மாதவியை நாளை மருத்துவரிடம் கூட்டிச் செல்லுமாறு கேட்டுக்கொண்டேன்.

 

இப்படி நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக நாட்கள் ஓடின. இடையிடையே சுப்பு அழைத்து எல்லாம் கேட்டுக்கொள்வான். இருந்தாலும் அழாத குறைதான். பிரசவ நாளும் வந்தது. நான் இதைச் சுப்புவிடம் சொல்லவில்லை. தெரிந்தால் மனம் இருப்புக் கொள்ளாமல் வந்துவிட்டால் என்ன செய்வது என்ற பதைபதைப்புத்தான். மருத்துவமனையில் சேர்த்தாகி விட்டது. காலையில் சரியாக 5.45 மணியளவில் அழகிய ஆண் குழைந்தையை மாதவி பிரசவித்தாள். எனக்கும் இராஜத்திற்கும் மனது இருப்புக் கொள்ளவில்லை. மனதின் ஒரு மூலையில் தனக்கு இப்பிடி ஒரு பாக்கியம் கிடைக்கவில்லையே என்ற கவலையை மீறின ஒரு சந்தோசம்.

 

நான் சுப்புவை அழைத்துத் தகவல் தெரியப்படுத்தினேன். ஆனால் சுப்புவிற்கோ மகளைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் மேலோங்கியது. நான் இப்பொழுது வரவேண்டாம் என்று கேட்டுக்கொண்டதிற்கு இணங்க அவன் வரவில்லை. நாங்கள் மாதவியையும் குழந்தையையும் அழைத்துக்கொண்டு எங்கள் வீட்டிற்க்குச் சென்றோம். இராஜம் தான் ஆரத்தி கரைத்து உள்ளே அழைத்துச் சென்றாள். நாங்கள் குழந்தைக்கு கண்ணன் என்று பெயர் வைத்தோம். மாதவிக்குக் குழந்தை பிறந்த உடம்பு என்பதால் இன்னும் வயிறு உள் செல்லவில்லை. கடவுளின் அனுக்கிரகத்தால் சுகப்பிரசவம் என்பதே ஒரு வரமாக கிடைத்தது.

 

இராஜம் ஒரு துண்டை மாதவியின் இடுப்பில் கட்டி வயிறு உள்செல்ல உதவி செய்து வந்தாள். மாதவியும் விரைவிலேயே பழைய பெண்ணாக மாறினாள். ஆனால் இப்போது உள்ள பிரச்சினையே, குழந்தையை விட்டுத் தாயைப் பிரிப்பது எப்படி என்பதுதான். நாங்கள் எவ்வளவோ சொல்லிப்பார்த்தோம். ஆனால் எங்களால் இயலவில்லை. மாதவியின் வீட்டிலோ உற்றார் உறவினர் விசாரிப்பு வேறு..... மாதவி எங்கே.... எப்பொழுது படிப்பு முடியும்... ஏன் இன்னும் திருமணம் செய்யவில்லை என்று......

சுப்புவிற்கோ என்ன செய்வது என்று தெரியவில்லை. என்னிடம் கூடத் தகவல் தெரிவிக்காமல் மதுரைக்குக் கிளம்பி வந்து விட்டான். காலையில் பேப்பர் எடுபதற்குக் கதவைத் திறந்தால் சுப்பு ஆட்டோவில் வந்து இறங்கிக்கொண்டிருந்தான். எனக்கு ஒரே ஆச்சர்யம். "என்ன சுப்பு.... இங்கே.... " என்றேன்.....

 

"என்னால் ஊரில் இருக்க முடியவில்லை... எல்லாம் ஒரே பேச்சு. பதில் சொல்ல முடியவில்லை. அதுதான் மகளைப் பார்க்கச் செல்வதாகக் கூறி இங்கு வந்துவிட்டேன்"

 

நானும் அப்படியா.... சரி வா..... என்று கூறி உள்ளே அழைத்துச்சென்றேன். இராஜமும் டீ போட்டுக் கொண்டு வந்து கொடுத்தாள். சுப்புவிற்கு எப்படி கேட்பது என்று தெரியவில்லை. நெளிந்தார். பின் ஒரு வழியாகக் கேட்டே விட்டார். மகளும் குழந்தையும் எங்கே என்று. இராஜம் தான் பதில் சொன்னாள், குழந்தைக்குப் பால் கொடுப்பதாக..... சுப்பு அமைதியாக டீ குடித்தார்.

 

மாதவி குழந்தையைத் தூங்க வைத்துவிட்டு ஹாலுக்கு வந்த போது, அப்பாவைப் பார்த்தாள். கன்று தாயைப் பார்த்தது போல் வந்து கட்டிக்கொண்டு அழுதாள். இருவரும் ஒருவாறு சமாதானம் ஆனார்கள். சுப்புதான் கேட்டார், "குழந்தை எங்கேயம்மா? எப்படி இருக்கிறான்" என்று..... "நன்றாக இருக்கிறான் அப்பா" என்று சொன்னாள்.

 

சுப்பு வேறு எதுவும் பேசி வார்த்தையை வளர்க்காமல் நேரடியாகவே விசயத்திற்கு வந்தார். "எப்பொழுதம்மா ஊருக்குச் செல்வது? அங்கு எல்லோரும் உன்னைப் பற்றி விசாரிக்கத் தொடங்கி விட்டார்கள். நாங்கள் நீ மேல் படிப்பிற்காக மதுரை சென்றுள்ளதாகவும் லீவ் கிடைக்காதக் காரணத்தினால் வரவில்லை என்றும் தெரிவித்து உள்ளோம்" என்றார்.

 

மதவிக்கோ என்ன சொல்வது என்றே தெரியவில்லை. "இல்லையப்பா, குழந்தையை விட்டு விட்டு நான் எப்படி வருவது என்று தெரியவில்லை" என்றாள். நானோ இராஜமோ எதுவும் பேசவில்லை. பேசாமல் இருவர் பேசுவதையும் கவனித்துக்கொண்டு இருந்தோம். சுப்புவிற்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை.

 

மாதவியே தொடர்ந்தாள். "அப்பா எனக்கு இந்தக் குழந்தையே போதும். நான் பேசாமல் குழந்தையைப் பார்த்துக்கொண்டு இப்படியே இருந்துவிடுகிறேன். யாருக்கும் என்னுடைய பழைய கதை தெரியாமல் இன்னொரு பந்தத்தைத் தொடர என் மனம் மறுக்கிறது. என்னமோ என் வாழ்க்கை இப்படி ஆகி விட்டது. போனது போகட்டும்.... நான் என் குழந்தையுடன் இப்படியே இருந்து விடுகிறேன்" என்றாள்.

 

நான் சுப்புவை அழைத்துக்கொண்டு வெளியே வந்தேன். சுப்பு மிகவும் வருத்தத்துடன் காணப்பட்டான். நான் அவனிடம் "ஏதாவது சமாதனப்படுத்தி மாதவியை அழைத்துக்கொண்டு செல். குழைந்தையை எங்கள் குழந்தையாகப் பாவித்துப் பார்த்துக்கொள்கிறோம். இப்பொழுது திருமணப் பேச்சுவார்த்தை எதுவும் எடுக்க வேண்டாம். முதலில் அழைத்துச் செல். காலம் ஒரு நாள் பதில் சொல்லும். பின்னர் பேசிக்கொள்ளலாம்" என்றேன்

 

அவனும் புரியாத புதிராக என்னைப் பார்த்தான். நான் மீண்டும் உள்ளே சென்று மாதவியின் அறைக்குள் சென்றேன்.

 

"மாதவி...."

 

மிகுந்த மன உளைச்சலுடன் கண்ணீருடன் என்னைப் பார்த்தாள்.

 

"பெண் என்பது ஒரு பயிர் போல.... தொடர்ந்து ஒரே இடத்தில் இருக்க முடியாது. நாத்தைப் பிடுங்கி நடுவது போல வேறோரிடம் செல்ல வேண்டியவள். மகள் என்றாலே இன்னொரு வீட்டிற்க்கு மறு மகளாகச் செல்ல வேண்டியவள். வாழை போல குலம் தழைக்கச் செய்ய வேண்டியவள். ஒரு வீட்டின் வளர்ச்சியும் வீழ்ச்சியும் பெண்ணைப் பொறுத்தே உள்ளது. பெண்ணின் பெருமையே குடும்ப பெருமை. எனவே நீ இப்பொழுது உன் தந்தையுடன் செல். குழந்தையை எங்கள் குழந்தையாக வளர்க்கிறோம். இதனால் தான் என்னவோ இதுவரை எங்களுக்கு ஒரு மகவு கிடைக்கவில்லை. நான் உன் தந்தையுடன் பேசுகிறேன். அவர் உனக்கு வரன் ஒன்றும் இப்பொழுது பார்க்க மாட்டார். நீ எப்பொழுதும் போல அவருக்கு ஒரு மகளாக வீட்டில் இரு. வேலைக்குச் செல். மற்றவற்றைப் வரும் போது பார்க்கலாம்"

 

அவள் அதற்கு ஒரே முடிவாக "என்னால் முடியாது" என்றாள். மேலும் "பால்குடி மறக்காதக் குழந்தையை விட்டு செல்வது மிகப் பெரிய பாவம். அந்தக் குழந்தை என்ன தவறு செய்தது? செய்தது நான் தானே?"

 

நான் "எல்லாம் சரிதான்...இவ்வளவு சங்கடங்களை அனுபவிப்பதற்கு உன்னுடைய தந்தையும் தாயும் என்ன தவறு செய்தார்கள்" என்றேன்

 

அவளால் பதிலேதும் கூற முடியவில்லை. என்னையே பார்த்தாள். எனக்கோ ஒரு குற்ற உணர்ச்சி. தாயையும் பிள்ளையையும் பிரிப்பதா அல்லது தந்தையும் மகளையும் பிரிப்பதா? ஆண்டவன் என்று ஒருவன் இருந்தால் இதில் எனக்கு உதவக் கூடாதா... என்று மனதிற்குள்ளேயேப் பிரார்த்தித்தேன்.

 

மீண்டும் மாதவியைப் பார்த்து "கவலைபடதேம்மா.... உனக்கும் உன் குழந்தைக்கும் நான் இருக்கிறேன்..... ஆனால் இப்பொழுது உன் கருணை தேவைப்படுவது உன் தாய் தந்தையருக்கே" என்றேன்.

 

மிக நீளமாக ஒரு மூச்சை உள்ளே எடுத்து விட்டு என்னையே பார்த்தாள். நான் "நன்றாக யோசித்து ஒரு முடிவெடு " என்று சொல்லி விட்டுக் கிளம்பி விட்டேன். 

 

அலுவலகத்திற்கு சென்று விட்டு மாலை 5.30 மணியளவில் வீடு வந்தேன். இராஜம் ஹாலில் இருந்தாள். என்ன ஆயிற்று என்றேன். மதியம் முதல் மாலை வரை இருவரும் பேசிக்கொண்டு இருந்ததாகவும் மாதவி ஊருக்கு செல்லச் சம்மதித்தாகவும் வருத்ததுடன் சொன்னாள். நான் எல்லாம் அவன் செயல் என்று மேலே பார்த்தேன். ஒன்றும் சொல்ல வில்லை.

 

டாக்ஸி ஓன்று வரச் சொல்லி வழியனுப்பி வைத்துவிட்டு வரலாம் என்று நினைத்த போது, மாதவி ஒரு பையுடன் வந்தாள். குழந்தைக்கு என்ன என்ன வேண்டும், எப்பொழுதெல்லாம் பால் குடிப்பான், அழுதால் என்ன செய்ய வேண்டும், என்னென்ன மருந்துகள் உள்ளன என்று இராஜத்திடம் சொல்லிக் கொண்டிருந்தாள். நான் அமைதியாக இருந்தேன். ஒன்றும் சொல்ல வில்லை. மீண்டும் அறைக்குள் சென்று மேலும் ஒரு பெரிய பையுடன் வந்தாள். இப்பொழுது "அப்பா" என்று என்னை அழைத்தாள். நான் அவளையேப் பார்த்தேன்.

 

"குழந்தை தூங்கிக் கொண்டிருக்கிறான். நான் எனது அப்பாவுடன் செல்கிறேன் அப்பா..... ஆனால் ஒரு நாள் நான் வருவேன் அப்பா.... அவனுடைய அம்மாவாக......"

 

நான் எதுவும் பேசவில்லை. அவளையேப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

 

"இப்பொழுதுதான் புரிந்தது என்னுடையக் குழந்தையின் பெயரின் அர்த்தம்..... கண்ணன்"

 

"நீங்கள் எங்களை வழியனுப்ப வரவேண்டாம். நாங்களே செல்கிறோம். என்னை உங்களுடைய மகளாகப் பாவித்து எனக்கு செய்து கொண்டிருக்கும் உதவிக்கு நன்றி" என்றாள்.

 

நானும் இராஜமும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு எங்கள் மகளை வழியனுப்பி வைத்தோம்.

 

No comments:

Post a Comment

சமதர்மம், சமத்துவம், சகோதரத்துவம் மற்றும் பெண் விடுதலை - 5

  சமதர்மம், சமத்துவம், சகோதரத்துவம் மற்றும் பெண் விடுதலை - 5 அண்ணல் அம்பேத்கர் சுதந்திர இந்தியாவிற்கு எழுதிய அரசியல் சாசனத்தில் தீண்டாமை மற்...