Thursday, July 8, 2021

சிறுகதை - கண்ணன் வருவான்

நானும் சுப்புவும் பால்யகால நண்பர்கள். ஒன்றாகவே படித்து ஒரே அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்கள். ஒன்றாகவே அலுவலகம் வந்து விட்டு ஒன்றாகவே திரும்பியும் செல்வோம்.

 

இன்று நான் சுப்பு வருவதற்காகத் தெருமுனையில் நின்று காத்துக்கொண்டிருந்தேன். எப்பொழுதும் வரும் நேரம் தவறியும் சுப்பு வரவில்லை. யதேச்சையாக நேற்று வரும் வழியில் இருவரும் பேசிக்கொண்டு வந்தது எனக்கு நினைவுக்கு வந்தது. இன்று சுப்புவின் பெண்ணைப் பெண் பார்க்க வருகிறார்கள். அதனால் அவன் விடுமுறை. நான் பின் காத்திராமல் அலுவலகத்திற்கு சென்றேன்.

மறுநாள் நான் அதே இடத்தில் காத்துக்கொண்டிருந்தேன். இன்றும் மிக நேரமாகியும் வரவில்லை. நானும் வழக்கம் போல அலுவலகம் வந்து விட்டேன். ஆனால் சுப்புவைக் காண முடியவில்லை. பியுனைக் கூப்பிட்டுக் கேட்ட பொழுது இன்னும் வரவில்லை என்று கூறினான். எனக்கோ வேலையே ஓடவில்லை. கொஞ்ச நேரத்தில் 11 மணியளவில், சுப்பு அலுவலகத்துக்குள்ளே நுழைந்தான். அவன் முகமே சரியில்லை, மிகவும் சோர்வாகக் காணப்பட்டான்.

 

நான் அவனிடம் சென்று "என்ன ஆயிற்று?.... எல்லோரும் நலம் தானே?" என்றேன்.

 

ஆனால் யாருக்கோ பதில் சொல்வது போல "ம்...... ம்..... நலம்தான்" என்றான்.

 

நான் மிகவும் யோசனையுடன் என் மேசைக்குத் திரும்பினேன். பின்னர் அலுவலக வேலைகளில் முழ்கிய காரணத்தினால் சுப்புவிடம் எதுவும் கேட்டுக்கொள்ளவில்லை.

 

மாலையில் அலுவலகம் முடிந்தபிறகு வீட்டுக்குச் செல்வோமா என்று கேட்க சுப்புவின் இருக்கையைக் கவனித்த போது அது காலியாக இருந்தது. பியூனிடம் விசாரித்தபொழுது மாலை நான்கு மணிக்கே கிளம்பிவிட்டதாகவும், தலைவலி என்று கூறி பெர்மிசன் வாங்கியதாகவும் கூறினார். இதெல்லாம் எனக்கு மிகவும் புதிராக இருந்தது. நேரே சென்று கேட்டுவிடலாம் என்று சுப்பிவின் இல்லம் நோக்கி விரைந்தேன்.

 

ஆனால் சுப்புவின் வீடு பூட்டி இருந்தது. அடுத்த வீட்டில் இருந்த பெண்மணியிடம் விசாரித்தேன்... அம்மாவும் பிள்ளையும் கோயிலுக்குச் சென்றிருப்பதாகச் சொன்னார்கள். யோசைனையுடன் காத்திருந்தேன். தூரத்தில் கோகிலாவும் மாதவியும் வந்து கொண்டிருந்தார்கள். என் மனம் பழைய நினைவுகளை அசை போட ஆரம்பித்திருந்தன. நானும் சுப்புவும் கோகிலாவைப் பெண் பார்க்கச் சென்றதும், கோகிலா சுப்பு எதிர்பார்த்தது போல ஒரு அழகிய, நன்கு பாடத்தெரிந்த, +2 வரை படித்த பெண்ணாகத் தெரிந்தாள். சுப்புவும் ஒன்றும் குறைந்தவனில்லை. கமலகாசனைப் போல நீண்ட காலர் வைத்த சட்டையைப் போட்டுக் கொண்டு தன்னுடைய சுருட்டை முடியை வைத்துக் காது வரை மூடிக்கொண்டு கூலிங்கிளாஸ் போட்டுக்கொண்டு கதாநாயகனைப் போன்று வந்திருந்தான்.

 

பெண் பார்க்கச் சென்ற பொழுது, கம்பனின் இராமாயணம் போலக், கண்கள் மட்டுமே பேசிக் கொண்டன. மனமும் மனமும் ஒன்றான பின்பு திருமணம் தானே.....


"வாங்க அண்ணே...." என்று கோகிலா என்னை வரவேற்றாள். நானும் நினைவு திரும்பியவனாக "ஆமாம்.... ஆமாம்..... எப்படியம்மா நன்றாக இருக்கிறாயா" என்று கேட்டேன். அவளும் ஒரு மாதிரி பதில் சொல்லாமல் கதவைத் திறந்து கொண்டு உள்ளே சென்றாள். நானும் பின்னாலேயே சென்றேன்.

 

மாதவியைப் பார்த்துக் கேட்டேன், "என்னம்மா செய்து கொண்டிருக்கிறாய்?.... இப்பொழுது தான் சென்று கொண்டிருக்கும் வேலை எப்படி உள்ளது. படித்ததற்கு ஏற்ற வேலை தானே?" என்றேன்.

 

"ஆமா.... அங்கிள்" எப்பொழுதும் கல கலவென்று பேசும் பெண் இப்பொழுது இவ்வாறு சொல்லிக்கொண்டே தன்னுடைய ரூமுக்குள் சென்று விட்டாள்.

 

நான் மீண்டும் கோகிலாவைப் பார்த்து, "இன்னும் சுப்பு வரவில்லையா?" என்று கேட்டேன்.

"எப்பொழுதும் உங்களுடன் தானே வருவார். இது வரும் நேரம் தான். ஏன் நேற்று லீவ் எடுத்ததனால் வேலையை முடித்து விட்டு வருகிறாரா?" என்று பதில் கேள்வி கேட்டாள்.

நான் இப்போழுது யோசிக்க ஆரம்பித்தேன். எதோ நிலைமை சரியில்லை என்று தெரிந்தது. நான் அவளிடம் சுப்பு வந்தால் நான் வந்ததாக சொல்லி விடம்மா என்று சொல்லிவிட்டு புறப்பட்டு வீடு வந்து சேர்ந்தேன்.

எனக்கு எதோ மனம் சரியில்லை. வீட்டுக்கு வந்து சேர்ந்தவுடன் ஏதேதோ யோசித்துக்கொண்டு உறங்கி விட்டேன். காலையில்  இராஜம் தான் வந்து எழுப்பினாள். "இரவு சாப்பிடாமல் தூங்கி விட்டீர்கள் போல.... எல்லாம் வைத்தது வைத்தது போல உள்ளது." என்றாள். நான் ஒன்றும் சொல்லவில்லை. எப்பொழுதும் போலக் குளித்து ரெடியாகி, காலைச் சிற்றுண்டியை முடித்துக்கொண்டு அலுவலகம் கிளம்பினேன்.

எப்பொழுதும் காத்துக்கொண்டிருக்கும் இடத்தில் சுப்பு நின்று கொண்டிருந்தார். அவருடன் சேர்ந்து இருவரும் ஒன்றாக அலுவலகம் வந்தோம். ஆனால் வழக்கத்திற்கு மாறாக நாங்கள் இருவரும் ஒன்றும் பேசிக்கொள்ளாமல் வந்து சேர்ந்தோம். வருகைப் பதிவேட்டில் கையெழுத்தைப் போட்டுவிட்டு "கான்டீன் சென்று வருவோமா?" என்று கேட்டேன். சரியென்று தலையாட்டினர்.

 

இரண்டு கப் டீ வாங்கிக் கொண்டு ஒரு மூலையில் சென்று அமர்ந்தோம். நான் எதுவுமே பேசவில்லை. அமைதியாகச் சன்னல் வழியே பார்த்துக் கொண்டு டீ குடித்துக்கொண்டிருந்தேன். சுப்பு தேநீர் கோப்பையைப் பார்த்துக்கொண்டே நான் ஏதாவது கேட்பேனா என்று யோசித்துக் கொண்டிருப்பது எனக்கு தெரியும். கனத்த மௌனம்..... நானே கலைத்தேன்..... "தேநீர் நன்றாக இல்லையா" என்றேன்.....

 

"அதெல்லாம் ஒன்றும் இல்லை"

 

"பின் என்ன? தேநீர் ஆடை வரும்வரை காத்துக்கொண்டிருக்காமல் குடிக்கலாமே" என்றேன்.....

கேட்டதுதான் தாமதம்..... சுப்புவோ, "இப்பொழுது நடந்து கொண்டிருப்பதை நினைத்தால் என் முகத்தை எந்த ஆடை கொண்டு மறைப்பது?" என்று கேட்டார். நான் அவனின் கையை ஆதரவாகப் பிடித்துக்கொண்டேன். "எதோ பிரச்சினை என்று நான் யூகித்தேன்.... என்னிடம் சொல்லலாம் என்றால் சொல்" என்றேன்....

"உன்னிடம் சொல்லாமல் யாரிடம் சொல்ல போகிறேன்" என்றான்.

 

"பெண் பார்த்தது என்ன ஆயிற்று, எல்லாம் சுபம் தானே"

 

"அந்த ஒரு நிகழ்வு நடக்கவேயில்லை.... நானே மாப்பிள்ளை வீட்டாரை கூப்பிட்டுப் பெண் மேலும் படிக்க வேண்டும் என்கிறாள். அட்மிசனும் கிடைத்து விட்டது. அதனால் படிப்பு முடிந்த பிறகு திருமணம் வைத்துக் கொள்ளலாம் என்றேன். அதற்கு அவர்கள், தாங்களே படிக்க வைப்பதாகக் கூறினார்கள். நான் வேண்டாம், எல்லாம் முடிந்த பிறகு பேசிக்கொள்ளலாம் என்றேன்"

"ஏன் .... பெண் படிக்க வேண்டும் என்று சொல்கிறாளா?"

 

அதற்கு சுப்பு கூறிய பதில் என்னை அதிர்ச்சியடைய வைத்தது.

"அவள் ஏற்கனவே படித்த படத்திற்காக நான் சொன்ன பொய்" என்று சொன்னான்.....

"புரியவில்லை " என்றேன்

 

"பணிபுரியும் இடத்தில் இவளுடன் வலை செய்யும் ஒருவருடன் பழக்கமாம். பழக்கத்தினால் இப்பொழுது இவள் இரண்டு மாதம்....பெண் பார்ப்பதற்கு முன்பு அவன் என்னிடம் வந்து பெண் கேட்பதாக பேசி வைத்துள்ளனர். வேலை விஷயமா மும்பை சென்றவன் அங்கு ஒரு விபத்தில் பெண் பார்க்கும் வைபவத்திற்கு முதல் நாள் காலை இறந்துவிட்டான். இது தெரிந்து இவள் எங்களிடம் விசயத்தைச் சொல்ல நாங்கள் அதிர்ந்தோம். மேலும் அவளிடம் பேசி நிலைமையை சொல்லிச் சரி செய்து கல்யாணம் செய்து விடலாம் என்றால் கர்பவதி....என்ன செய்வது என்றே தெரியவில்லை. கலைத்து விடலாம் என்றால் மனது உடன்பட மறுக்கிறது. உயிர் வந்த பிறகு கலைப்பது குற்றமில்லையா..... நம் உயிரை மாய்த்துக்கொள்ளலாம் என்றால் அதுவும் பாவம். என்ன செய்வது என்றே தெரியவில்லை" என்றான்

 

எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. மேலும் சுப்பு சொன்னான்.... "சங்கரா.... உனக்கு தெரியுமில்லையா.... இது வெளியில் தெரிந்தால், என் சமூகத்தில் எனக்கு எவ்வளவு பெரிய அவமானம் என்று...."

நான் மெதுவாக "சுப்பு... சற்றுப் பொறுமையாக இரு.... யோசிப்போம்" என்றேன். ஆனாலும் சுப்பு கலங்கிக் கொண்டிருந்தான்.... எனக்கு வேலையே ஓடலை... மனதெல்லாம் மாதவி பற்றிய நினைப்புத்தான். கெட்டிக்கார பிள்ளையாயிற்றே. எப்படி ஏமாந்தாள். வீட்டு நிலைமை அறிந்த பெண். எப்படி என்றே தெரியவில்லை. கடைசியாக எனக்கு ஒரு யோசனை தோன்றியது. அதுதான் சரியென்று முடிவெடுத்தேன்.

 

போனவாரம் என்னை மதுரை அலுவலக பொறுப்பெடுத்துக் கொள்ளுமாறு கேட்டார்கள். போக விருப்பமில்லாத காரணத்தினால், முடிவெடுக்க 10 நாட்கள் அவகாசம் கேட்டேன். இப்பொழுது நேரே பொது மேலாளர் அறைக்கு சென்று, மதுரை செல்ல சம்மதம் தெரிவித்தேன். நேராக சுப்புவிடம் வந்தேன். அவன் என்னை நிலையில்லாத மனதுடன் உற்று நோக்கினான்.

"என்னை மதுரைக்கு மாற்றியிருக்கிறார்கள். இரண்டு நாட்களில் செல்லவேண்டும். நானும் என் மனைவியும் மட்டுமே என்பதால் உடனே சரியென்று சொல்லிவிட்டேன். உனக்குச் சம்மதமும் சந்தோசமும் தானே" என்றேன்.

அவன் மேலும் அமைதியை இழந்து "இதில் எனக்கு என்ன சந்தோசம்.... நீயும் இல்லையென்றால் நான் என்ன செய்வேன்..." என்று கலங்கினான்

 

"கலங்காதே.... எல்லாம் நம் நன்மைக்கே..."  என்றேன்

 

"இதில் என்ன நன்மை"

"எல்லாம் மாலையில் சொல்கிறேன். நாம் வழக்கமாக வெள்ளிகிழமைகளில் சந்திக்கும் பூங்காவிற்கு வந்துவிடு.... பேசிக்கொள்ளலாம்" என்று சொல்லிவிட்டு வீட்டுக்கு கிளம்பினேன். மதுரை செல்வதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் அல்லவா....

 

மாலையில் பூங்காவிற்கு சென்றேன். சுப்பு மட்டும் ஒரு பெஞ்சில் தனியாக அமர்ந்திருந்தான். நான் அவனுடன் சென்று அமர்ந்தேன். சுப்பு எதுவும் பெசவில்லை... நானே தொடர்ந்தேன்.

 

"சுப்பு இப்பொழுது உன் பெண் படிக்கப் போகிறாள் என்று தானே சொல்லியிருக்கிறாய்.... அது அப்படியே இருக்கட்டும். நான் இன்னும் இரு தினங்களில் மதுரை செல்கிறேன். மாதவியை நீ என் வீட்டிற்கு அனுப்பி வை. எல்லோரிடமும் அவள் மேல் படிப்பிற்காக வெளியூர் செல்வதாகக் கூறிவிடு. நானும் எனது மனைவியும் உன் பிள்ளையை எங்கள் பிள்ளை போல் பார்த்துக்கொள்கிறோம். பிரசவம் எல்லாம் முடிந்த பிறகு அவளை நான் கொண்டு வந்து உங்களிடம் சேர்க்கிறேன். அதுவரை இந்த விஷயம் நம் இரு குடும்பங்களுக்குள் இருக்கட்டும்... மற்றவற்றைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம்" என்றேன்.

 

"மேலும் , எல்லாம் ஆண்டவன் விட்ட வழி" என்றேன்

சுப்புவும் ஒரு மனதாகச் சம்மதித்தான். மாதவியை அன்று இரவே எங்கள் வீட்டில் கொண்டு வந்து விட்டு விட்டான். என் மனைவியிடம் நான் இதுபற்றி முன்பே சொல்லியிருந்த காரணத்தால் அவள் எதுவும் இதுபற்றி மாதவியிடம் கேட்காமல் எப்பொழுதும் போலப் பேசினாள்.

 

ஆனால் மாதவியோ, நாங்கள் எதுவும் கேட்காமல் பொதுவான விஷயங்களைப்பற்றி மட்டுமே பேசுவதைப் பார்த்துத் திகைத்துப் போனாள். கண்களில் கண்ணீர் முட்டியது. அதைப் பார்த்த எனது மனைவி இராஜம் "கண்ணா.... ஏன் அழுகிறாய்.... உன்னைப்பற்றி எங்களுக்குத் தெரியும். நீ எங்கள் வீட்டுப் பிள்ளை.... எதோ கெட்ட நேரம் எல்லாம் நடந்துவிட்டது. இப்பொழுது வருத்தப்பட்டு ஒன்றும் ஆகப்போவது இல்லை. இனிமேல் நாம் நடப்பதைக் கவனிப்போம்" என்று ஆறுதல் கூறினாள்.

 

மதுரை செல்ல வேண்டிய நாளும் வந்தது. நாங்கள் மூவரும் மதுரை சென்று சேர்ந்தோம். தங்குவதற்கான வசதிகளை கம்பனி செய்து தந்திருந்ததால் வேலை மிச்சம். முதல் நாள் சென்றுப் பொறுப்பு ஏற்றுக்கொண்டேன். முதல் நாள் என்பதால் வேலை ஒன்றும் பெரிதாக இல்லை. எல்லாம் அறிமுக கூட்டங்களாகவும், முந்தய நடப்புக்களை விவரிப்பதுவுமாகச் சென்றது.

 

மாலை வீடு சென்றதும் மாதவியை அழைத்து இங்கு ஒரு பெரிய பல்கலைகழகம் உள்ளது என்றும் ஏதாவது ஒரு மேல் படிப்பில் சேருமாறும் கூறினேன். அவள் ஏன் எதற்காக என்றாள்....

 

"இப்படி ஒரு காரணத்தைச் சொல்லித்தான் ஊரிலிருந்து இங்கு வந்தாய்....  நாளை யாராவது ஏதாவது கேட்டால் பதில் சொல்ல வேண்டும் அல்லவா..." என்றேன். அவளும் நிலைமையைப் புரிந்துகொண்டு "சரி...." என்றாள்.

 

இப்பொழுது அவளுக்கு மூன்றாம் மாதம். இராஜத்தை அழைத்து, மாதவியை நாளை மருத்துவரிடம் கூட்டிச் செல்லுமாறு கேட்டுக்கொண்டேன்.

 

இப்படி நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக நாட்கள் ஓடின. இடையிடையே சுப்பு அழைத்து எல்லாம் கேட்டுக்கொள்வான். இருந்தாலும் அழாத குறைதான். பிரசவ நாளும் வந்தது. நான் இதைச் சுப்புவிடம் சொல்லவில்லை. தெரிந்தால் மனம் இருப்புக் கொள்ளாமல் வந்துவிட்டால் என்ன செய்வது என்ற பதைபதைப்புத்தான். மருத்துவமனையில் சேர்த்தாகி விட்டது. காலையில் சரியாக 5.45 மணியளவில் அழகிய ஆண் குழைந்தையை மாதவி பிரசவித்தாள். எனக்கும் இராஜத்திற்கும் மனது இருப்புக் கொள்ளவில்லை. மனதின் ஒரு மூலையில் தனக்கு இப்பிடி ஒரு பாக்கியம் கிடைக்கவில்லையே என்ற கவலையை மீறின ஒரு சந்தோசம்.

 

நான் சுப்புவை அழைத்துத் தகவல் தெரியப்படுத்தினேன். ஆனால் சுப்புவிற்கோ மகளைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் மேலோங்கியது. நான் இப்பொழுது வரவேண்டாம் என்று கேட்டுக்கொண்டதிற்கு இணங்க அவன் வரவில்லை. நாங்கள் மாதவியையும் குழந்தையையும் அழைத்துக்கொண்டு எங்கள் வீட்டிற்க்குச் சென்றோம். இராஜம் தான் ஆரத்தி கரைத்து உள்ளே அழைத்துச் சென்றாள். நாங்கள் குழந்தைக்கு கண்ணன் என்று பெயர் வைத்தோம். மாதவிக்குக் குழந்தை பிறந்த உடம்பு என்பதால் இன்னும் வயிறு உள் செல்லவில்லை. கடவுளின் அனுக்கிரகத்தால் சுகப்பிரசவம் என்பதே ஒரு வரமாக கிடைத்தது.

 

இராஜம் ஒரு துண்டை மாதவியின் இடுப்பில் கட்டி வயிறு உள்செல்ல உதவி செய்து வந்தாள். மாதவியும் விரைவிலேயே பழைய பெண்ணாக மாறினாள். ஆனால் இப்போது உள்ள பிரச்சினையே, குழந்தையை விட்டுத் தாயைப் பிரிப்பது எப்படி என்பதுதான். நாங்கள் எவ்வளவோ சொல்லிப்பார்த்தோம். ஆனால் எங்களால் இயலவில்லை. மாதவியின் வீட்டிலோ உற்றார் உறவினர் விசாரிப்பு வேறு..... மாதவி எங்கே.... எப்பொழுது படிப்பு முடியும்... ஏன் இன்னும் திருமணம் செய்யவில்லை என்று......

சுப்புவிற்கோ என்ன செய்வது என்று தெரியவில்லை. என்னிடம் கூடத் தகவல் தெரிவிக்காமல் மதுரைக்குக் கிளம்பி வந்து விட்டான். காலையில் பேப்பர் எடுபதற்குக் கதவைத் திறந்தால் சுப்பு ஆட்டோவில் வந்து இறங்கிக்கொண்டிருந்தான். எனக்கு ஒரே ஆச்சர்யம். "என்ன சுப்பு.... இங்கே.... " என்றேன்.....

 

"என்னால் ஊரில் இருக்க முடியவில்லை... எல்லாம் ஒரே பேச்சு. பதில் சொல்ல முடியவில்லை. அதுதான் மகளைப் பார்க்கச் செல்வதாகக் கூறி இங்கு வந்துவிட்டேன்"

 

நானும் அப்படியா.... சரி வா..... என்று கூறி உள்ளே அழைத்துச்சென்றேன். இராஜமும் டீ போட்டுக் கொண்டு வந்து கொடுத்தாள். சுப்புவிற்கு எப்படி கேட்பது என்று தெரியவில்லை. நெளிந்தார். பின் ஒரு வழியாகக் கேட்டே விட்டார். மகளும் குழந்தையும் எங்கே என்று. இராஜம் தான் பதில் சொன்னாள், குழந்தைக்குப் பால் கொடுப்பதாக..... சுப்பு அமைதியாக டீ குடித்தார்.

 

மாதவி குழந்தையைத் தூங்க வைத்துவிட்டு ஹாலுக்கு வந்த போது, அப்பாவைப் பார்த்தாள். கன்று தாயைப் பார்த்தது போல் வந்து கட்டிக்கொண்டு அழுதாள். இருவரும் ஒருவாறு சமாதானம் ஆனார்கள். சுப்புதான் கேட்டார், "குழந்தை எங்கேயம்மா? எப்படி இருக்கிறான்" என்று..... "நன்றாக இருக்கிறான் அப்பா" என்று சொன்னாள்.

 

சுப்பு வேறு எதுவும் பேசி வார்த்தையை வளர்க்காமல் நேரடியாகவே விசயத்திற்கு வந்தார். "எப்பொழுதம்மா ஊருக்குச் செல்வது? அங்கு எல்லோரும் உன்னைப் பற்றி விசாரிக்கத் தொடங்கி விட்டார்கள். நாங்கள் நீ மேல் படிப்பிற்காக மதுரை சென்றுள்ளதாகவும் லீவ் கிடைக்காதக் காரணத்தினால் வரவில்லை என்றும் தெரிவித்து உள்ளோம்" என்றார்.

 

மதவிக்கோ என்ன சொல்வது என்றே தெரியவில்லை. "இல்லையப்பா, குழந்தையை விட்டு விட்டு நான் எப்படி வருவது என்று தெரியவில்லை" என்றாள். நானோ இராஜமோ எதுவும் பேசவில்லை. பேசாமல் இருவர் பேசுவதையும் கவனித்துக்கொண்டு இருந்தோம். சுப்புவிற்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை.

 

மாதவியே தொடர்ந்தாள். "அப்பா எனக்கு இந்தக் குழந்தையே போதும். நான் பேசாமல் குழந்தையைப் பார்த்துக்கொண்டு இப்படியே இருந்துவிடுகிறேன். யாருக்கும் என்னுடைய பழைய கதை தெரியாமல் இன்னொரு பந்தத்தைத் தொடர என் மனம் மறுக்கிறது. என்னமோ என் வாழ்க்கை இப்படி ஆகி விட்டது. போனது போகட்டும்.... நான் என் குழந்தையுடன் இப்படியே இருந்து விடுகிறேன்" என்றாள்.

 

நான் சுப்புவை அழைத்துக்கொண்டு வெளியே வந்தேன். சுப்பு மிகவும் வருத்தத்துடன் காணப்பட்டான். நான் அவனிடம் "ஏதாவது சமாதனப்படுத்தி மாதவியை அழைத்துக்கொண்டு செல். குழைந்தையை எங்கள் குழந்தையாகப் பாவித்துப் பார்த்துக்கொள்கிறோம். இப்பொழுது திருமணப் பேச்சுவார்த்தை எதுவும் எடுக்க வேண்டாம். முதலில் அழைத்துச் செல். காலம் ஒரு நாள் பதில் சொல்லும். பின்னர் பேசிக்கொள்ளலாம்" என்றேன்

 

அவனும் புரியாத புதிராக என்னைப் பார்த்தான். நான் மீண்டும் உள்ளே சென்று மாதவியின் அறைக்குள் சென்றேன்.

 

"மாதவி...."

 

மிகுந்த மன உளைச்சலுடன் கண்ணீருடன் என்னைப் பார்த்தாள்.

 

"பெண் என்பது ஒரு பயிர் போல.... தொடர்ந்து ஒரே இடத்தில் இருக்க முடியாது. நாத்தைப் பிடுங்கி நடுவது போல வேறோரிடம் செல்ல வேண்டியவள். மகள் என்றாலே இன்னொரு வீட்டிற்க்கு மறு மகளாகச் செல்ல வேண்டியவள். வாழை போல குலம் தழைக்கச் செய்ய வேண்டியவள். ஒரு வீட்டின் வளர்ச்சியும் வீழ்ச்சியும் பெண்ணைப் பொறுத்தே உள்ளது. பெண்ணின் பெருமையே குடும்ப பெருமை. எனவே நீ இப்பொழுது உன் தந்தையுடன் செல். குழந்தையை எங்கள் குழந்தையாக வளர்க்கிறோம். இதனால் தான் என்னவோ இதுவரை எங்களுக்கு ஒரு மகவு கிடைக்கவில்லை. நான் உன் தந்தையுடன் பேசுகிறேன். அவர் உனக்கு வரன் ஒன்றும் இப்பொழுது பார்க்க மாட்டார். நீ எப்பொழுதும் போல அவருக்கு ஒரு மகளாக வீட்டில் இரு. வேலைக்குச் செல். மற்றவற்றைப் வரும் போது பார்க்கலாம்"

 

அவள் அதற்கு ஒரே முடிவாக "என்னால் முடியாது" என்றாள். மேலும் "பால்குடி மறக்காதக் குழந்தையை விட்டு செல்வது மிகப் பெரிய பாவம். அந்தக் குழந்தை என்ன தவறு செய்தது? செய்தது நான் தானே?"

 

நான் "எல்லாம் சரிதான்...இவ்வளவு சங்கடங்களை அனுபவிப்பதற்கு உன்னுடைய தந்தையும் தாயும் என்ன தவறு செய்தார்கள்" என்றேன்

 

அவளால் பதிலேதும் கூற முடியவில்லை. என்னையே பார்த்தாள். எனக்கோ ஒரு குற்ற உணர்ச்சி. தாயையும் பிள்ளையையும் பிரிப்பதா அல்லது தந்தையும் மகளையும் பிரிப்பதா? ஆண்டவன் என்று ஒருவன் இருந்தால் இதில் எனக்கு உதவக் கூடாதா... என்று மனதிற்குள்ளேயேப் பிரார்த்தித்தேன்.

 

மீண்டும் மாதவியைப் பார்த்து "கவலைபடதேம்மா.... உனக்கும் உன் குழந்தைக்கும் நான் இருக்கிறேன்..... ஆனால் இப்பொழுது உன் கருணை தேவைப்படுவது உன் தாய் தந்தையருக்கே" என்றேன்.

 

மிக நீளமாக ஒரு மூச்சை உள்ளே எடுத்து விட்டு என்னையே பார்த்தாள். நான் "நன்றாக யோசித்து ஒரு முடிவெடு " என்று சொல்லி விட்டுக் கிளம்பி விட்டேன். 

 

அலுவலகத்திற்கு சென்று விட்டு மாலை 5.30 மணியளவில் வீடு வந்தேன். இராஜம் ஹாலில் இருந்தாள். என்ன ஆயிற்று என்றேன். மதியம் முதல் மாலை வரை இருவரும் பேசிக்கொண்டு இருந்ததாகவும் மாதவி ஊருக்கு செல்லச் சம்மதித்தாகவும் வருத்ததுடன் சொன்னாள். நான் எல்லாம் அவன் செயல் என்று மேலே பார்த்தேன். ஒன்றும் சொல்ல வில்லை.

 

டாக்ஸி ஓன்று வரச் சொல்லி வழியனுப்பி வைத்துவிட்டு வரலாம் என்று நினைத்த போது, மாதவி ஒரு பையுடன் வந்தாள். குழந்தைக்கு என்ன என்ன வேண்டும், எப்பொழுதெல்லாம் பால் குடிப்பான், அழுதால் என்ன செய்ய வேண்டும், என்னென்ன மருந்துகள் உள்ளன என்று இராஜத்திடம் சொல்லிக் கொண்டிருந்தாள். நான் அமைதியாக இருந்தேன். ஒன்றும் சொல்ல வில்லை. மீண்டும் அறைக்குள் சென்று மேலும் ஒரு பெரிய பையுடன் வந்தாள். இப்பொழுது "அப்பா" என்று என்னை அழைத்தாள். நான் அவளையேப் பார்த்தேன்.

 

"குழந்தை தூங்கிக் கொண்டிருக்கிறான். நான் எனது அப்பாவுடன் செல்கிறேன் அப்பா..... ஆனால் ஒரு நாள் நான் வருவேன் அப்பா.... அவனுடைய அம்மாவாக......"

 

நான் எதுவும் பேசவில்லை. அவளையேப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

 

"இப்பொழுதுதான் புரிந்தது என்னுடையக் குழந்தையின் பெயரின் அர்த்தம்..... கண்ணன்"

 

"நீங்கள் எங்களை வழியனுப்ப வரவேண்டாம். நாங்களே செல்கிறோம். என்னை உங்களுடைய மகளாகப் பாவித்து எனக்கு செய்து கொண்டிருக்கும் உதவிக்கு நன்றி" என்றாள்.

 

நானும் இராஜமும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு எங்கள் மகளை வழியனுப்பி வைத்தோம்.

 

மூதுரை பாடலும் & நண்பர் கேட்ட நல்ல ஒரு கேள்வியும்

பாடலும் விளக்கமும்

வெண்பா : 13
கவையாகிக் கொம்பாகிக் காட்டகத்தே நிற்கும்
அவையல்ல நல்லமரங்கள் - சபை நடுவே
நீட்டு ஓலை வாசியா நின்றான் குறிப்பு அறிய
மாட்டாதவன் நன் மரம்

விளக்கம்
கிளைகளோடும், கொம்புகளோடும் காட்டில் நிற்பவை மரங்கள் அல்ல. சபையின் நடுவே ஒருவர் தரும் ஓலையில் எழுதியிருப்பதைப் படிக்கத் தெரியாதவனும், அடுத்தவர் மனதை அறியாதவனுமே மரம் போன்றவன்

 கேள்வி :

மரம் அவ்வளவு மட்டமான உயிரினமாக சித்தரிக்கப் பட்டுள்ளது. வள்ளுவர் குறளிலும் இந்த விதமான குறியீடு உள்ளன. இதை விளக்கமாக தெளிவாக்க தெரிந்த அன்பர்கள் பதிலளிக்கவும் நன்றி.

 என்னுடைய விளக்கம்.

 12ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டதாகக் கருதப்படும் தண்டியலங்காரம் என்னும் இலக்கண நூல் உவமை அணியைக் கீழ்வருமாறு விளக்குகிறது:

 "பண்பும் தொழிலும் பயனும் என்றிவற்றின்

ஒன்றும் பலவும் பொருளொடு பொருள் புணர்த்து

ஒப்புமை தோன்றச் செப்புவது உவமை" 

 

சொல்ல எடுத்துக் கொண்ட பொருளை வேறு ஒரு பொருளுடனோ அல்லது பல பொருளுடனோ அப்பொருளின் பண்பு,தொழில், பயன் என்பவற்றைக் காரணமாகக் கொண்டு இயைபு படுத்தி இரு பொருள்களுக்கும் இடையே உள்ள ஒப்புமைப் புலப்படும்படி பாடுவது உவமை அணியாகும்.

 

தொல்காப்பியம் தரும் விளக்கமும் இதுவே....

“வினைபயன் மெய்உரு என்ற நான்கே

வகைபெற வந்த உவமைத் தோற்றம்”

 

மரம் என்பது ஒரு மிகப்பெரிய தாவரம். ஆனால் உயிருள்ளது. அதற்கு மிருகங்கள் பறவைகள் மனிதர்கள் போன்று வாழத் தெரியாது. மரங்கள் ஒரே இடத்தில் தோன்றி ஒரே இடத்தில் மறையும். மரம் ஒரு ஓரறிவு உயிரினம். மனிதனுக்கு ஆறறிவு உண்டு. இதனை வள்ளுவர் தனது குறளில் மக்கட்பண்பு என்று கூறுவார்.

 

அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர்

மக்கட்பண்பு இல்லா தவர்

[பொருட்பால், குடியியல், பண்புடைமை]

இதன் பொருள் : மனிதப்பண்பு இல்லாதவர்கள் அரம் போல அறிவுக்கூர்மை படைத்தவர் என்றாலும் ஓர் அறிவு படைத்த மரத்தைப் போன்றோரே.

 

மரத்தினால் மனிதனுக்கும் இந்த உலகத்திற்கும் மிகப் பெரிய நன்மைகள் கிடைகின்றன. இங்கு மரத்தை உவமை கூறியது. அதன் பண்பினால் மட்டுமே, அதன் பயனால் அல்ல.

 

கவையாகிக் கொம்பாகிக் காட்டகத்தே நிற்கும்
அவையல்ல நல்லமரங்கள் சபை நடுவே

நீட்டு ஓலை வாசியா நின்றான் குறிப்பு அறிய
மாட்டாதவன் நன் மரம்

 

“கல்வி அறிவு இல்லாதவனும், ஒருவருடைய குறிப்பை அறியாதவனும், ஆறறிவுடைய மனிதராய்ப் பிறந்தாலும் ஒரறிவுடைய மரத்தினை விட தாழ்ந்தவர்” என்ற அர்த்தத்திலேயே ஔவையார் கூறியுள்ளார். மேலும் அவர் மரங்களை சிறுமைப்படுத்தவில்லை. இவனைக் காட்டு மரங்கள் என்று சொன்னால் மரங்களே கோபித்துக் கொள்ளும் என்றும் இவன் அவற்றைவிட மோசமான மரம் என்னும் சுவையிலேயே இங்கு எடுத்துக்கொள்ள வேண்டும். இதுவே இந்த பாடலின் உச்ச சுவை.

சிறுகதை – விளிம்பு நிலை.

அரிமா சங்கத்தின் மூலமாக உதவிபெறும் கொளத்தூரில் இருக்கும் ஒரு தொண்டு நிறுவனத்திற்குப் பொருட்கள் வழங்க நாளை செல்வதாகவும் அதற்கு நானும் வருமாறு எமது அரிமா சங்கச் செயலாளர் அழைத்திருந்தார். நானும் வருவதாக வாக்களித்தேன். அதன் படி இன்று காலை 8.30 மணியளவில் ரெடியாயிப் பெருங்களத்தூர் பஸ் ஸ்டான்ட் வந்தேன். நான் அங்கு வருவதற்கும் கோயம்பேடுக்கு செல்லும் ஒரு அரசாங்க AC பஸ் வருவதற்கும் சரியாக இருந்தது, அதில் ஏறிக் கோயம்பேடுக்கு வந்தேன். இன்னும் செயலாளர் வரவில்லை. நான் அங்கு வந்த தகவலை தொலைபேசி மூலம் செயலருக்குத் தெரியப்படுத்தினேன். அவரும் ரோடு வேலை நடப்பதினால் சுற்றித்தான் வரவேண்டும், இன்னும் 10 அல்லது 15 நிமிடங்களில் இங்கு இருப்பேன் என்று உறுதி அளித்ததார். நானும் கொஞ்ச நேரம் நடக்கலாம் என்று டவுன் பஸ் வரும் இடத்திற்குச் சென்று அமர்ந்தேன். மனிதர்களை ரசிப்பதில் ஒரு அலாதி இன்பம். எத்தனை விதமான மனிதர்கள்.... எத்தனை விதமான எண்ண ஓட்டங்கள் ஒவ்வொருவர் மனதிலும்..... கண்களைப் பார்த்தாலே ஆயிரம் கதைகள் சொல்லும். முக பாவனையோ மேலும் பலவற்றைச் சொல்லும் போல.....

 

நான் அமர்ந்து இருந்த இடத்திற்கு அருகில் சில நடத்துனர்கள் நின்று அளவளாவிக் கொண்டிருந்தார்கள். இது எலக்சன் டைம் அல்லவே..... அவர்களது பேச்சும் அதைப் பற்றியே இருந்தது. அதில் ஒருவர், “எல்லாம் இலவசம் இலவசம் என்று கொடுக்கிறார்கள். போற நிலைமையைப் பார்த்தா எல்லோரையும் சோம்பேறியாக ஆக்கி விடுவார்கள் போலிருக்கிறதே....” அதற்கு மற்றொருவர், “இன்னும் கொஞ்ச நாள் தான் அண்ணே.... எல்லோரோரையும் பிச்சை எடுக்க வைத்துவிடுவார்கள் போல.....” மூன்றாம்மவரோ “இன்னும் கொஞ்ச நாள்ல கல்யாணம் பண்ணினா குழைந்தை ப்ரீன்னு ஒரு அறிக்கை வந்தாலும் வரலாம்..... ஆக மொத்தத்தில் தமிழ்நாடு குட்டிச்சுவரா போயிடுச்சு. இன்னும் பணி நிறைவு பெற்று செல்லும் நமது தோழர்களுக்கு பணிக்கொடை வழங்க காசில்லை என்று சொல்லும் அரசு, எப்படி இவ்வளவையும் இலவசமாக கொடுக்க முடியும். மக்கள் இந்த தேர்தல்ல யோசிச்சு ஓட்டு போடணும். ம்ம்.... பார்க்கலாம்.... எனக்கு டைம் ஆயிடுச்சு. நான் கிளம்பறேன். அடுத்த சிங்கில்ல பார்க்கலாம்” என்று கூறிச் சென்றார்.

 

வேகமாக மிகவும் பதட்டத்துடன் சென்ற ஒரு நபர், “அண்ணே,,,, வேலூர்க்கு பஸ் எங்கு கிடைக்கும்” என்றார், “உள்ளே ரூட் பஸ் ஸ்டான்ட் இருக்கு, இரண்டவது பிளாட்போர்மில் பஸ் கிடைக்கும்” என்றார். அதற்க்கு அவர் நன்றி கூட தெரிவிக்கவில்லை..... அவசர அவசரமாக ஓடிச் சென்றார். அவ்வளவு தலை போகும் அவசரம் என்று நினைக்கிறேன். ஒரு பாட்டி பஸ்ஸில் ஏற முடியாமல் தலைசுமையுடன் நின்று கொண்டிருந்தது. கீரை அல்லது காய்கறி விற்கும் மூதாட்டி என்று நினைக்கிறன். இப்பொழுதும் உதவிசெய்யும் மனப்பான்மையுடன் நிறைய இளைஞர்கள் உள்ளார்கள் போலும். பஸ்சின் உள்ளே இருந்து ஒரு இளைஞன் மூதாட்டியின் தலைச்சுமையை வாங்கி உள்ளே வைத்து உதவி செய்தார்.

 

இருவர் நடந்து சென்றனர். கல்லூரி மாணவர்கள் என்று நினைக்கிறேன். “மாப்ள.... நம்ம இப்ப எல்லாம், வெற்றி நடைபோடும் அரியர்ஸ் மாணவர்கள் மாப்ள. எங்க அப்பா எப்ப பாத்தாலும் கேப்பாரு, எப்படா இந்த அரியர்ஸை முடிக்கப் போறேன்னு.... நானும் அதையே தான் ஏம் மனசுக்குள்ள கேட்டுக்கிட்டே இருப்பேன். எல்லாத்துக்கும் ஒரு காலம் வரணும்ல.....” நான் என் மனதிற்குள் நினைத்துக்கொண்டேன் “திருவள்ளுவரின் ஊழ் கோட்பாடு மற்றும் சிவஞான போதம் போன்ற தத்துவங்கள் கூட, இப்பொழுதைய மாணவர்களுக்கு தெரியும் போல...”

 

 

என்னுடைய அருகில் ஒரு ஹிந்தி பேசும் முஸ்ஸல்மான் அமர்ந்திருந்தார். அவர் அவ்வப்பொழுது யாருடனோ, தான் வந்து விட்டதாகவும் பஸ் நம்பர் 149 நிற்கும் இடத்திற்கு அருகில் அமர்ந்து இருப்பதாகவும் கூறிக் கொண்டு இருந்தார். பின்னர் நீண்ட நேரமாக அழைப்பு எதுவும் வரவில்லை என்றவுடன், அழைத்த எண்ணை தேடினார். அவரால் கண்டறிய முடிவில்லை. அது ஒரு வாட்சப் கால் என்று நினைக்கிறன். என்னிடம் “தம்பி இப்பொழுது எனக்கு ஒரு வாட்சப் கால் வந்தது. அந்த நம்பரை எனக்கு எடுக்க தெரியவில்லை. எப்பிடி எடுப்பது?” என்றார். நான் அதை எடுத்துக் கொடுத்தேன். அவருக்கு ஒரு 80 வயதிருக்கலாம். இந்த நிலையிலும், அவர் திடகாத்திரமாக இருப்பதை பார்த்து, என்னை நானே சலித்துக் கொண்டேன்.

 

 

ஒருவர் என்னிடம் வந்து “பெங்களுருக்கு ஒரு நல்ல பஸ் கிடைக்குமா” என்று கேட்டார். நான் அவரிடம் “நல்ல பஸ் என்றால்?” ஆம்னி பஸ் பற்றி கேட்கிறார் என்ற நினைப்பில் நான் கேட்டேன்.

 

அதற்கு அவர், “இல்லை புஷ் பேக் சீட் அல்லது எதவாது AC பஸ்” என்று இழுத்தார். அவர் நான் அவரை கேலி செய்வதாக நினைத்து விட்டார் போல.

 

நான் உடனே, “உள்ளே செல்லுங்கள். 2 வது அல்லது 3 வது பிளாட்பாரத்தில் பஸ் கிடைக்கும், நல்ல பஸ்ஸாகவே கிடைக்கும்” என்றேன். சிரித்துவிட்டு நன்றி கூறி சென்றார்.

 

 

என்னுடைய கைபேசி அழைத்தது. செயலாளர் கிருஷ்ணன் அழைத்திருந்தார்.

 

“அண்ணே சொல்லுங்க.... வந்துட்டீங்களா.... எங்கெ வரட்டும்”

 

அதற்கு அவர், “அண்ணே நான் பஸ் ஸ்டான்ட் ஆப்போசிட்ல இருக்க பாரத் பெட்ரோலியம் பங்க் முன்னால் நிக்கிறேன்” என்றார்

 

“சரி அண்ணே.... இந்தோ நான் கிராஸ் பண்ணி வர்றேன்”

 

நான் ரோடு கிராஸ் செய்து அவரின் வண்டியில் முன்பக்கத்து இருக்கையில் அமர்ந்துகொண்டேன். போகும் வழியில், MMDA காலனியில் வேறொரு அரிமா நண்பர் நிற்பதாகவும் அங்கு அவரைப் பிக்கப் செய்துகொண்டு செல்லலாம் என்றும் கூறினார். நான் தலையாட்டி என்னுடைய சம்மதத்தை கூறினேன். MMDA காலனியில், லோகேஷ் என்ற அரிமா சங்க உறுப்பினர் நின்றிருந்தார். அவரையும் அழைத்துக்கொண்டு நாங்கள் அண்ணா நகர் ஆர்ச்சை கடந்து சென்றோம். கிருஷ்ணன் அண்ணன் அப்பொழுது தலைவரை அழைத்து எங்கே வந்து கொண்டிருப்பதாக கேட்டார்கள். அதற்கு அவர், மேலும் ஒரு அரிமா நண்பருடன் தி.நகர் தாண்டி வந்து கொண்டிருப்பதாகவும் இன்னும் ஒரு அரை மணி நேரத்தில், வழக்கமாக சந்திக்கும் அண்ணாநகர் இடத்திற்கு வந்து விடுவதாக கூறினார். நாங்கள் அப்பொழுது அண்ணா நகர் பார்க் அருகில் வண்டியை நிறுத்தி விட்டு, ஒரு தேநீர் அருந்தலாம் என்று நினைத்தோம்.

 

லோகேஷ் சென்று டோக்கன் வாங்கி வந்தார். நல்ல ஒரு அருமையான தேநீர். பக்கத்தில் ஒரு அய்யப்பன் கோயில். எதோ ஒரு பங்குனி மாத பூஜை என்று நினைக்கிறன். எல்லோரும் மிக பய பக்தியோடு, இறைவனை தரிசித்துவிட்டு, கையில் அன்னதான பிரசாத கவருடன் செல்கின்றனர். கர்ம வினை தீர கோயில் செல்வதற்கு பதிலாக, பரிகாரத்திற்காகவும், இந்த பிறவியில் செய்த, செய்யப் போகின்ற பாவங்களுக்கு அட்வான்சாக கோயில் செல்லும் பக்தர்களைப் பார்த்தால் பரிதாபமாக உள்ளது. இந்த நிலை மாற அந்த அய்யப்பன் தான் அருள் புரிய வேண்டும்

 

 

நாங்கள் அங்கிருந்து கிளம்பி, வழக்கமாக காரைப் பார்க் செய்யும் இடத்தில் பார்க் செய்து விட்டு தலைவர் அரிமா மகேஷ்வர் மற்றும் அரிமா தனசேகர் வருவதற்காக காத்துக் கொண்டிருந்தோம். அப்பொழுது எங்களுடைய பேச்சு இலங்கையைப் பற்றியும் புத்தத்தைப் பற்றியும் சென்றது. சிறிது நேரத்தில், அவர்கள் வந்தவுடன், எல்லோரும் ஒரு வண்டியில் ஏறிக்கொண்டு கொளத்தூர் செல்ல தயார் ஆனோம். கிருஷ்ணன் அண்ணன் வண்டியை ஓட்டினார்கள்.

 

 

அது ஒரு பிரத்தியேகமான அனாதைகள் இல்லம். அங்கு HIV/ AIDS பாதித்த பெற்றோர்களுக்கு பிறந்த குழந்தைகள் மற்றும் பெண்கள் தங்கும் இல்லம். ஒரு 40 க்கும் மேற்பட்ட பல்வேறு வயதுடைய குழந்தைகள் அங்கு இருந்தனர். அங்கு சென்று அவர்களுக்கான எங்களால் இயன்ற மாதந்திர மளிகைச் சாமான்களை டெலிவரி செய்தோம். அவர்களுடன் நின்று போட்டோக்கள் எடுத்துக் கொண்டோம். மனதில் ஒரு நிறைவு. எப்பொழுதோ செய்த ஒரு புண்ணியத்தின் பலன் இப்பொழுது கிடைத்தது போல. என் மனது, இப்பொழுது வேறு திசையில் சென்றது. எப்படி இவர்கள் இதை நடத்துகிறார்கள். இந்த குழந்தைகளின் எதிர்க்கலாம் எப்பிடி இருக்கும். இவர்களின் படிப்பு, திருமணம், வேலை மற்றும் சமூகத்தில் இவர்களின் பிடிப்பு எவ்வாறு இருக்கும் என்றெல்லாம். பிரத்தியேகமாக ஏதாவது தேவையா.... அல்லது பொருட்களில் ஏதாவது மாற்றம் செய்ய வேண்டுமா.... என்று நிர்வாகியிடம் கேட்டோம். அதற்கு அவர்கள் நீங்கள் எது கொடுத்தாலும், நாங்கள் இங்கே வாங்கிக் கொள்வோம், ஏனென்றால் எல்லாமே இங்கு தேவை என்று கூறினார்கள்.

 

 

நாங்கள் அவர்களிடம் சொல்லிக்கொண்டு கிளம்பினோம். வரும் வழியில், ஒரு தேநீர் கடையில் நிறுத்தி, தேநீர் அருந்திவிட்டு செல்வோம் என்று நிறுத்தினோம். சென்னையின் வெப்பத்தின் கொடுமை.... மிகக் கொடுமை.... ஏப்ரலின் ஆரம்பமே இப்பிடி என்றால் போகப் போக எப்பிடியோ..... நாம் நமது வரும் சமுதாயதிற்கு அதிகமான வெப்பத்தையே கொடுத்து செல்கிறோம் என்று ஒரு நினைப்பு. இயற்கை... நல்லவனுக்கு நல்லவன்...... மீதியை நான் சொல்ல வேண்டுமா.....

 

 

தனசேகர் தேநீரும், மற்ற நாங்கள் ஆளுக்கொரு லெமன் ஜூஸ் குடித்து விட்டு கிளம்பலாம் என்ற போது தனசேகரின் பேன்ட்டில் இருந்து ஒரு வெள்ளை நூல் நாற்காலியில் இருந்து ஒட்டிக்கொண்டு வந்தது. அதை கவனித்துப் பார்த்தால் அது வெள்ளை நூல் அல்ல... யாரோ எங்களுக்கு முன்னால் அந்த நாற்காலியில் உடகார்ந்து விட்டு, அவர்கள் வாயில் இருந்த பப்பில் கம்மை அதில் ஒட்டி வைத்து இருக்கிறார்கள். அவரின் நேரம், அதில் போய் அமர்ந்து விட்டார். நமது சமூக இளைஞர்களை சிறிது நேரத்திற்கு முன்பு தான் நல்ல உதவி செய்யும் மனப்பான்மை உடையவர்கள் என்று கூறினேன். அதே மனதால் இப்பொழுது, இப்படியும் உள்ளார்கள் என்று சொல்ல வேண்டியதாக உள்ளது. அந்த சூயங்கம்மை தின்று இட்டு ஓரமாக இடலாம் அல்லது ஒரு பேப்பரில் மடித்து ஓரமாக போடலாம். இது யாரும் சொல்லிக் கொடுத்து தெரிய வேண்டிய விசயமல்ல. ஆனால் அதைக்கூட சொன்னால் தான் செய்வோம் என்றால் என்ன செய்வது.....

 

மீண்டும் எல்லோரும் வாகனத்தில் ஏறிக்கொண்டு திரும்பி வந்து கொண்டிருந்தோம், அந்த அந்த இடத்தில் அவரவர்களை இறக்கி விட்டு விட்டு கிருஷ்ணன் அண்ணன் என்னை கோயம்பேடுவில் இறக்கி விட்டார்கள். நான் 104 C பஸ்சுக்காக காத்துக் கொண்டிருந்தேன். அப்பொழுது, பஸ் ஸ்டான்ட் மூலையில் பாய் விரித்து படுத்துக் கொண்டிருந்தது ஒரு குடும்பம். இவர்களுக்கென்று வீடில்லை. இவர்கள் அங்கு கிடைக்கும் ஏதாவது ஒரு வேலையை செய்து கொண்டு, அங்கேயே சமைத்து, உண்டு, உறங்கி வாழ்க்கையை நடத்துபவர்கள்.

 

அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்த போதே, அங்கு படுத்திருந்த ஒரு பெண், சுமார் ஒரு 45 வயதிருக்கும், இன்னொரு அதே வயதுடைய பெண்ணைப் பார்த்து “நீயெல்லாம் அம்மாவா..... நீயெல்லாம் அம்மாவா...” என்று கேட்டுக் கொண்டே சென்றாள். அப்பொழுது, அந்த இன்னொரு பெண்ணின் அருகிலிருந்த ஒரு  இளைஞன் “ஏய்.... நீ யாரு இதப்பத்தி கேக்க.....” என்று பாய்ந்து வந்தான். அதற்குமுதல் பெண்மணி, “டேய் பொட்டை போயிடு.... வேணாம்.....” என்று மேலும் சில வார்த்தைகள் பேசினாள். இன்னொரு பெண்மணியோ, பயந்து ஒரு ஓரமாக ஒட்டிக் கொண்டு நின்றாள். முதல் பெண்மணியின் கூட இருந்த ஒரு இளைஞன் திடீர் என்று முன்னால் வந்து அந்த இளைஞனை அடிக்க வந்தான். இருவருக்கும் மிகப் பெரிய ஒரு சண்டை போல் தோன்றியது. அப்பொழுது, முதல் பெண்மணி, மற்ற பெண்மணியைப் பார்த்து “ஏண்டி அம்மா வேஷம் போடுற..... உன்னையப் பத்தி எனக்கு தெரியாதா... “ என்று சொல்லிக் கொண்டே வந்து அவளை அடித்தாள்.

 

இதைப் பார்த்த சில பிச்சை எடுப்பவர்களும், இவர்களைப் போன்றே அங்கேயே உண்டு உறங்கி வாழ்பவர்கள் சிலரும் தங்களுக்குள்ளேயே ஏதேதோ பேசிக் கொண்டு வேடிக்கை பார்த்தனர். பஸ் ஸ்டான்ட் வருபவர்களுக்கும், பஸ்ஸில் செல்பவர்களுக்கும் ஒரு வேடிக்கையாக இருந்தது. யாரும், அருகில் சென்று ஒன்றும் செய்யவில்லை.

 

 

எனக்கு நான் செல்ல வேண்டிய 104C பஸ் வந்தது. நான் பஸ்ஸில் ஏறி அமர்ந்தேன்.... பஸ் மெதுவாக செல்ல ஆரம்பித்தது. இவர்களின் காட்சி மெல்ல மறைய ஆரம்பித்தது. கொஞ்ச தூரம் சென்றவுடன், ஒரு பயணி ஏறுவதற்காக பஸ் நின்றது.

 

 

நன்றாக அடி வாங்கிய அதில் ஒரு இளைஞன், காவல் அதிகாரியுடன் காட்சி நடந்த இடத்திற்கு சென்றான். என்னுடைய பேருந்து கிளம்பி விட்டது.

 

 

விளிம்பு நிலை மக்களின் வாழ்க்கையில் எத்தனை ஒரு வேறுபாடு..... இவர்களுடைய வாழ்கையில் காமம் கோபம் குரோதத்துக்கு முன்னுரிமை உள்ளது போல.....

 

 

திருக்குறளும் தலைமைத்துவமும்

எல்லோருக்கும் உள்ள ஒரு பொதுவான ஆசை என்னவென்றால் சாதிக்க வேண்டும், வாழ்கையில் வெற்றி பெற வேண்டும். வெற்றி பெற என்ன செய்ய வேண்டும். கலாம் சொன்னதுபோல கனவு காண வேண்டும். ஒரு இலட்சியக் கனவு. இருந்தால், நம்மாலும் முன்னேற முடியும். மேலாண்மைத் துறையின் தந்தை அல்லது குரு என்று அழைக்கபடும் பீட்டர் ட்ரக்கர் கருத்துப்படி "தலைவர்களின் முக்கியமான பணி, இலக்குகளை தீர்மானிப்பது மற்றும் அதனை எவ்வாறு செயல்படுத்துவது என்பதே". 


நம் தமிழ் இலக்கியத்தில், பதினெண்கீழ்க்கணக்கு நூலான திருக்குறளில், வள்ளுவர்,

"வெள்ளத்து அனைய மலர்நீட்டம் மாந்தர்தம் 
உள்ளத்து அனையது உயர்வு"  - என்று கூறுகிறார்.

ஒருவனுடைய கனவு இலட்சியம் நிறைவேறினால் அவன் வெற்றி பெற்றவனகிறான். இதையே தான் வள்ளுவர் தமது குறளில் எண்ணங்கள் என்ற கருத்தில் கூறுகிறார். நம்முடைய எண்ணங்கள் எவ்வளவு உயர்ததாக இருக்குமோ அந்த அளவு உயர்ந்ததாக இருக்கும் நாம் பெரும் வெற்றியும். நீரில் இருக்கும் பூவின் தண்டு, நீர் நிலை எவ்வளவு ஆழம் இருக்குமோ அந்த அளவு நீளம் உள்ளதாக இருக்கும்,  நீரின் ஆழம் அதிகரிக்க அதிகரிக்கத் தண்டின் நீளமும் அதிகமாகிக் கொண்டு இருக்கும். அது போல மனிதர்கள் உள்ளத்தில் உள்ள எண்ணங்கள் எவ்வளவு உயர்ந்ததாக இருக்குமோ அந்த அளவுக்கு தங்கள் வாழ்கையில் உயர்ந்த வெற்றியை பெறுவர் என்று திருவள்ளுவர் கூறுகிறார்.   

எண்ணங்கள் இருந்தால் மட்டும் போதாது. அதை செயல்படுத்த மனதில் உறுதி வேண்டும். இதை திருவள்ளுவர் உறுதி, துணிவு, அஞ்சாமை என்று பல விதங்களில் கூறுகிறார். 

"அஞ்சாமை ஈகை அறிவூக்கம்  இந்நான்கும் 
எஞ்சாமை வேந்தர்க் கியல்பு".

ஒரு தலைவனுக்குத் தேவையான முக்கியமான பண்புகளில் அஞ்சாமை ஒரு முக்கியமான பண்பு. எடுத்த கொள்கையில் உறுதியாக இருப்பது. அல்லது நினைத்த காரியத்தில் நாம் அஞ்சாமல் துணிவுடன் இருப்பது முதல் பண்பாகும். அச்சமே நம் முதல் எதிரி. அச்சம் இல்லையென்றால் ஒருவரால் தனது கனவை நோக்கி முன்னேறிச் சென்று வெற்றி பெற முடியும்.  உதாரணமாக நாம் ஒரு தொழிலை தொடங்க முற்படுகிறோம் என்றால், அந்த தொழிலில் ஏற்கனவே உள்ளவர்களைப் பார்த்து அஞ்சி நிற்கக் கூடாது. அவர் முன்னேறியதைப் போலவே நாமும் முன்னேற வேண்டும் என்று எண்ணம் கொண்டு அதையே நகல் எடுத்துச் செய்யவும் கூடாது. இலக்குகள் ஒன்றே. அனால் அதை அடைவதற்கு, நம்முடைய வழியில் சென்று வெல்ல துணிவு வேண்டும்.  

"எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு".

ஒரு செயலை செய்வதற்கு முன் அதைபற்றி நான்கு யோசித்து ஒரு நல்ல திட்டம் தயாரிக்க வேண்டும். திட்டம் தயாரானதும் செயல்படுத்த வேண்டும். செயல்படுத்தப்பட்டபின் திட்டம் தயாரிப்பது  அல்லது அதை பற்றி சிந்திப்பது நமக்கு தோல்வியையே தரும்.  துணிந்து இறங்கிய பின், அதைபற்றிக் கவலை கொள்ளக் கூடாது. அதில்  வெற்றியோ தோல்வியோ, இரண்டுமே நல்ல பலன்கள் தான். வெற்றி நமது பெருமையை மற்றவருக்கு சொல்லும். தோல்வியோ, நமக்கு ஒரு பாடத்தைக் கற்றுக் கொடுக்கும். இதையே மற்றொரு குறளில் 

"தெரிந்த இனத்தோடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்கு
அரும்பொருள் யாதொன்றும் இல்"

இலக்குகள் தீர்மானித்தபின், அதை பற்றி நான்கு தெரிந்தவர்களுடன் உரையாடி, தாமாகச் சிந்தித்து செய்பவர்களுக்கு தோல்வி என்பதே இல்லை ஏன்று பொருள் கொள்ளலாம். 

"அஞ்சும் அறியான் அமைவிலன் ஈகலான் 
தஞ்சம் எளியன் பகைக்கு"

இக்குறளில் அச்சம் கொண்டவனும், கல்வி அறிவு இல்லாதவனும், பிறரோடு ஒத்துக் குழுவாகச் செயல்படும் தன்மை இல்லாதவனும், கொடை அளிக்காதவனும் பகைவரால் எளிதில் வீழ்த்தப்படுவான். இதையே தான் வேறு மாதிரியாக இந்தக் கட்டுரையின், இரண்டாவது குறளிலும் கூறுகிறார் வள்ளுவர். ஒருவரை பார்த்து நாம் அஞ்சத் தொடங்கினால், அவ்வச்சமே நம் ஆற்றலைக் குறைத்து எதிரியை ஜெயிக்க  வைத்து விடும். 

ஈகை என்பது ஒரு தலைவனுக்கு வேண்டிய மிகச் சிறந்த பண்பாகும். திருவள்ளுவர் அவர் காலத்தில் ஈகை என்பதை, படை மற்றும் குடிகளுக்கு அரசர் வழங்கும் கொடை என்றே கருதியிருக்கலாம். ஆனால் தமிழ் இலக்கியம்  ஒரு கடல். கடல் மீனவனுக்கு மீனை  கொடுக்கும், உப்பு குரவனுக்கோ உப்பை கொடுக்கும். உலகம் செழிப்பாக இருக்க எல்லோருக்கும் மழையை கொடுக்கும். காற்றைக் கொடுக்கும். இது போலே தமிழும், குறளும் ஒரு கடல். படிப்பவர்களுக்கு படிக்கும் சூழ்நிலைகளுக்கு, ஏற்ப காலத்துக்கு ஏற்ப தமிழ் இலக்கியம் புதுப் புது அர்த்தத்தை தந்து கொண்டே இருக்கும்.  என்னுடைய நண்பர் ஒருவர், மிகுந்த தெய்வ நம்பிக்கை உள்ளவர். வழக்கமாகக் கோயில் திருவிழாக்களில் தமிழ் தேவாரம், திருப்புகழ் பாடுவதில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். அவர் ஒருமுறை பேசும் போது, நான் கோயில்களில் தவறாமல் தமிழ் திருமுறைகளைப் பாடுவதில் விருப்பம் கொண்டவன், ஆனால், ஒவ்வொருமுறை பாடும் போதும் அது எனக்கு ஒரு புது அர்த்தத்தைத் தருகிறது என்றார். அது போல தான் இந்த கருத்தும். இந்த இடத்தில நாம் புரிந்து கொள்ள வேண்டியது, ஈகை என்பது, தன்னிடத்தில் உள்ளவற்றை மற்றவர் நலனுக்காக கொடுப்பது. ஒரு தலைவனுக்கு, இருக்க வேண்டிய பண்புகளில் ஒன்று ஈகை. தலைவனிடம் ஒரு செயல் திட்டம் இருக்கும். ஆனால், அது அவனுடன் கூட இருபவர்களுக்கோ, அவனுக்கு கீழ் இருப்பவர்களுக்கோ  எவ்வாறு செயல்படுத்த வேண்டும் என்று தெரியாது. அதை ஒரு தலைவனே, மற்றவர்களுக்கு விளக்க வேண்டும். அதுதான். இப்பொழுது மிகப் பெரிய கம்பனிகளில் நடக்கும் செயல் விளக்க கூட்டங்கள். 

அறிவூக்கம்  - அறிவு மற்றும் ஊக்கம்... அறிவு என்பது முடிவில்லாத ஒரு ஞானம். வள்ளுவர் இதனை ஒரு குறளில்,

தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு

மணலில் தோண்டிய அளவு நீர் ஊறுவதைப் போல, மக்கள் கற்கும் அளவு அவர்களின் அறிவு வளரும் என்பது வள்ளுவரின் வாக்கு. ஒரு தலைவன் என்பவன் தன்னை எப்பொழுதுமே வளர்த்துக் கொண்டே இருக்க வேண்டும். தன்னையும், தன்னைச் சுற்றியும் நடப்பவற்றை அறிந்து, தெரிந்து, புரிந்து கொள்ள வேண்டும். தன்னை எப்பொழுதுமே வளப்படுதிக் கொண்டே செல்ல வேண்டும். இல்லையென்றால், புதுப் புது தொழில் நுட்பங்களையும், வளர்சிகளையும் தெரிந்து கொள்ள முடியாமல் காலத்திற்குத் தகுந்தார் போல் தம்மை மாற்றிக் கொள்ள முடியாமல் போகும். ஞானத்திற்க்கு என்று ஒரு அளவு கோல் இல்லை. கற்க கற்க வளர்ந்து கொண்டே இருக்கும். ஒரு தலைவனுக்கு அழகு மற்றவர்க்கு கேடு விளைவிக்காத அறம் சார்ந்த செயல்களையேச் செய்ய வேண்டும். அதற்கு கல்வி அறிவு வேண்டும். இதை வள்ளுவர் மேலே குறிப்பிட்ட ஒரு குறளில் "அஞ்சும் அறியான் அமைவிலன் ஈகலான் தஞ்சம் எளியன் பகைக்கு" என்றார். 

இது இருந்தால் மட்டும் போதாது. ஒரு தலைவனுக்கு தேவை ஊக்கம். ஒரு செயலை செய்யும் பொது அதை பாதியிலேயே விட்டு விடாமல் தொடர்ந்து செய்து சாதிக்க ஊக்கம் வேண்டும். ஒரு செயலில் நமக்கு மிகுந்த ஈடுபாடு இருக்கும் போது ஊக்கம் தானாகவே வரும். ஈடுபாடு குறைந்து, கடமையே என்று செய்தால் ஊக்கம் வராது. ஈடுபாடு, எப்பொழுது வரும்? ஒரு செயலை நாம் மிகவும் விரும்பி செய்தால் ஈடுபாடு வரும். 

"அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும்
பெருமை முயற்சி தரும்"

எந்த ஒரு செயலையும் விரும்பிச் செய்தால் வெற்றி காண முடியும். ஆளுமைதிறன் என்பது என்னால் இதை செய்ய முடியும் என்பதே. இதையே தான் மேலாண்மை நூல்களில் பக்கம் பக்கமாக எழுதுகிறார்கள். அதையே திருவள்ளுவர் தமது குறளில் ஒன்றேமுக்கால் அடியில் சொல்கிறார். 

"முயற்சி திருவினை யாக்கும் முயற்றின்மை 
இன்மை புகுத்தி விடும்"

முயற்சிகள் ஜெயிக்கலாம் அல்லது தோற்கலாம். இரண்டுமே நமக்கு ஒரு நல்ல படிப்பினையைத் தரும். ஆனால் முயலாமல் இருப்பது, தோல்வியே.... அதில் நமக்கு எந்த ஒரு படிப்பினையும் கிடைக்கப் போவதில்லை. அதனால் கிடைக்கும் பயன்கள் சோகம், வருத்தம், பொறாமை, கடன், கஷ்டமே....

நமக்கு எல்லோருக்கும் தெரிந்த ஒரு மிகப் பெரிய விஞ்ஜானி, தாமஸ் ஆல்வா எடிசன், அவருடைய ஒரு பொன்மொழி, "என்னுடைய முயற்சிகள் என்னைப் பல தடவை கை விட்டதுண்டு, ஆனால் நான் ஒரு முறை கூட என் முயற்சியைக் கை விட்டதில்லை". 

ஒரு தலைவனுக்குத் தேவையான ஆளுமைத்திறனை வளர்க்க அற்புதமான விளக்காக இருப்பது நமது திருக்குறள். திருக்குறள் ஒன்றை ஒருவன் முழுமையாகப் படித்துத் தெரிந்து கொண்டு விட்டால் அது தரும் ஞானம் அளவிட முடியாதது. இதைப்போல் ஒரு உயர்வான ஒப்பற்ற இலக்கியம் வேறு எங்கும் கிடையாது. மணிமேகலையின் அட்சய பாத்திரம் போல அள்ள அள்ள குறையாதக் கருத்துச் சுரங்கம். இலங்கை ஜெயராஜ் என்ற பேச்சாளர், அடிக்கடி குறிப்பிடும் ஒன்று, "தமிழைப் படிக்க வேண்டுமா? திருக்குறளை படி. தெய்வத்தை படிக்க வேண்டுமா? திருவாசகம் படி" என்பதே. எவர் எம்மதத்தைச் சார்ந்தவர் என்றாலும், எல்லோருடைய வீடுகளிலும் இருக்க வேண்டிய இரண்டு முக்கியமான புத்தகங்கள், திருக்குறளும், திருவாசகமும். 

சமதர்மம், சமத்துவம், சகோதரத்துவம் மற்றும் பெண் விடுதலை - 5

  சமதர்மம், சமத்துவம், சகோதரத்துவம் மற்றும் பெண் விடுதலை - 5 அண்ணல் அம்பேத்கர் சுதந்திர இந்தியாவிற்கு எழுதிய அரசியல் சாசனத்தில் தீண்டாமை மற்...